தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.9.12

உலக அழிவுக்குக் விதை போடும் செய்தி ஊடகங்கள் ?


இந்த உலகத்தில் எதனைச் செய்தாலும் அதனை அடுத்த நிமிடமே செய்தியாகக் கொண்டுவந்து அனைவரிடத்திலும் அதனை பரப்புறை செய்யும் விடயத்தில் செய்தி ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானதொன்றாக இருக்கின்றது.ஒரு ஊடகத்தினால் உண்மையான ஒரு சம்பவத்தினை பொய்ப்படுத்தவும் முடியும் பொய்யான ஒரு சம்பவத்தினை உண்மைப்
படுத்தவும் முடியும்.சிறந்ததொரு ஊடகத்தினை அவைகள் வெளியிடும் செய்திகளின் / தகவல்களின் மூலம் இலகுவாக அடையாளம் கண்டுகொள்ளலாம். பொதுவாக கண்களால் காண்பதுவும் பொய் காதுகளால் கேட்பதுவும் பொய் தீர விசாரித்து அதனது உண்மைத்தன்மையை அறிந்து அதன் பின் செய்திகளை வெளியீடு செய்வதனால் இன்று உலகில் நிலவும் அதிகளவான பிரச்சனைகள் இல்லாமல் போய்விடும்.

இப்படியான ஒரு ஊடகத்தினை அதிக கவர்ச்சியான விளம்பரங்களின் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிய ஒரு தேவையில்லை. மக்கள் / சமூகம் ஊடகங்களின் விடயத்தில் மிகவும் விழிப்பாக இருக்கிறார்கள் . ஆகவே உண்மைச் செய்திகளை வெளியிடும் ஊடகங்களை சமூகம் இனங்கண்டு அவற்றின் வாடிக்கையாளர்களாகவும் வாசகர்களாகவும் மாறிவிடுகிறார்கள் குறைந்த விளம்பரங்களின் மூலம் அல்லது விளம்பரங்கள் இல்லாமலே.

என்னைப் பொருத்தவரை அதிகளவான விளம்பரங்கள் மூலம் தங்களை அடையாளப்படுத்தும் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பெரும்பாலும் உண்மைக்குப் புறம்பானதாகவே இருக்கும்.

இன்றைய விரைவான உலகில் இணையமென்பது மிகவும் அத்தியவசியமான ஒன்றாக மாறிவிட்டது. எதிர்காலத்தில் மனிதனின் அடிப்படைத் தேவைகளான உடை, உணவு, உறங்குமிடம் என்பவற்றுடன் இணையமும் சேர்ந்து கொண்டால் அதுவும் வியப்புக்குறிய ஒன்றாக இருக்காது. அந்தளவுக்கு மக்கள் இணையத்துக்கு அடிமையாகிவிட்டார்கள்.

இந்த இணையமும் மக்கள் மத்தியில் செய்திகளைக் கொண்டுசெல்லும் ஊடகமாக செயற்பட்டுவருகின்றது. மிகவும் விரைவாக செய்திகளை  மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில்  இணையத்தளங்கள் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளன.

இன்று உலகமே எதிர் நோக்கியிருக்கும் ஒரு மிகப் பெரிய சவாலாக உலக அழிவு காணப்படுகிறது. இன்றைக்கோ நாளைக்கோ உலகம் அழியப்போகின்றது என்று விஞ்ஞானத்தில் முதிர்ச்சி பெற்றவர்கள் தினம்தினம் புலம்பிக்கொண்டு திரிகின்றனர்.இவர்கள் உலக அழிவுக்கு பல விஞ்ஞான முறையிலான காரணங்களைக் காட்டினாலும் நான் சொல்லுவேன் உலக அழிவு என்பது ஆரம்பமாகுமாகயிருந்தால் அதுக்கு மூல காரணமாக இந்த இணையத்தளங்களே அமையும்.

மிகவும் புதுமையான செய்திகளை அணுதினமும் இணையத்தளங்கள் வெளியிடுகின்ற. அவற்றில் எத்தனை சத வீதம் உண்மை இருக்கிறது என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அந்த வகையில் அண்மையில் இணையத்தில் அதிகமாக பேசப்பட்ட / உலாவந்த ஒரு சில செய்திகள் பற்றித்தான் இன்றைய பதிவில் உங்களுடன் பேசப்போகிறேன்.

குறிப்பாக இரண்டு செய்திகளை உதாரணங்களுக்காக எடுத்துக் கொள்கிறேன். ஒன்று பிரித்தானிய அரச குடும்பம் தொடர்பானது மற்றையது அமெரிக்க முதல் பெண்மணி மிஷல் ஒபாமா தொடர்பானது.

இவர்கள் இருவரின் தனிப்பட்ட + குடும்ப வாழ்க்கையில் ஊடகங்கள் அதிகமாக விளையாடியிருக்கிறது. இதில் அமெரிக்க முதல் பெண்மணியின் சம்பவம் பெரிதாக பரபரப்பான செய்தியாக பேசப்படாவிட்டாலும், பிரித்தானிய அரச குடும்பம் பற்றிய செய்திகள் நாளுக்கு நாள் புதுப்புது சுவாரஷ்யமான (?) தகவல்களுடன் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இவ்விடத்தில் ஒன்றை ஞாபகப் படுத்துகிறேன் பிரித்தானிய அரச குடும்பத்தில் இளவரசி டயானாவின் விடயத்திலும் ஊடகங்கள் அதிக சிரத்தையெடுத்து இறுதியில் அவருடைய இறப்புக்கும் அவைகளே காரணமாக அமைந்தன.இளவரசி டயானா தொடர்பாக முன்னர்  இட்ட பதிவினை நேரமிருப்பின் இங்கே சென்று படித்துக் கொள்ளுங்கள்


பிரித்தானிய அரச குடும்பத்தில் குறிப்பாக இளவரசர்கள் தொடர்பான செய்திகள் மேலைத்தேய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருக்கின்றது. இதன் போது ஊடகங்கள் அரச குடும்பத்தின் தனிப்பட்ட முறையிலான வேண்டுகோள்களையும் ஏற்றுக்கொள்ள மறுத்திருப்பது வியப்புக்குறியதாக இருக்கிறது.
இளவரசர்கள் ஒரு கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. இவர்களின் சிறு வயது முதலான அனைத்து செயற்பாடுகளிலும் ஊடகங்கள் மிகவும் அக்கரை கொண்டுள்ளது. இவர்களின் பள்ளிபடிப்பு தொடக்கம்  இவர்களது திருமணம் முதல் அனைத்து விடயத்தையும் ஊடகங்கள் செய்திகளாக வெளியிட்டுள்ளன.

இவர்களும் எல்லோரையும் போன்று ஒரு சாதாரண மனிதனுடைய உணர்வு கொண்டவர்கள்தான். இவர்களுக்கென்று விஷேட உணர்வுகளைக் கொண்டு இறைவன் இவர்களைப் படைக்கவில்லை. இன்று உலகம் இவர்களை வேற்றுப் பிறப்பாக பார்ப்பது போல் எனக்குத் தோன்றுகிறது. இவர்கள் குளித்தாலும் செய்தியாக வெளியிடுகிறார்கள் குடித்தாலும் செய்தியாக வெளியிடுகிறார்கள். ஊடகங்கள் இவ்விடத்தில் மிகப் பெரிய தவறிழைக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். 
சாதாரண மனிதர்கள் செய்யக்கூடிய அனைத்து செயற்பாடுகளையும் இளவரசர்கள் செய்கிறார். ஆனால் அவைகள் கொட்டை எழுத்துக்களில் செய்திகளாக வெளியாகிறன. இறுதியாக இளவரசர் வில்லியம் தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்தது வரை ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றன. இந்த செய்திகளினால் அல்லது இந்தக் காணொளிகளினால் இளவரசரின் உள்ளம் எவ்வளவு நிம்மதியிழந்திருக்கும் என்பதனை இந்த செய்திகளை வெளியிட்டவர்கள் சிறிதளவும் சிந்தித்திருப்பார்களா ? அல்லது இந்த செய்திகளுக்காக பகிரங்கமாக இல்லாவிட்டாலும் தனிப்பட்ட முறையிலாவது அவரிடம் மன்னிப்புக் கேட்டிருப்பார்களா ? இருக்கவே இருக்காது.


இதற்கு முன்னர் இளவரசர் ஹரி நிர்வாணமாக தோன்றிய புகைப்படங்களை வெளியிட்டு அவருடைய மனதினில் வேதனையை ஊடகங்கள் உண்டு பண்ணின என்பதனையும் இவ்விடத்தில் சொல்லிக் கொள்ளவது பொருத்தமானதாகும்.

தனிமனிதருடைய சுதந்திரம் தொடர்பில் ஊடகங்கள்  தவறிழைக்கின்றன. ஊடக சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக தனக்குக் கிடைக்கக் கூடிய அனைத்தையும் செய்திகளாக வெளியிடுவது என்பது மிகவும் பிழையான ஒன்றாக கருதப்படுகிறது என்னைப் பொருத்தவரையில்.

அதுவுமில்லாமல் ஒருவருடைய குறைகளை ஆழ ஆராய்தல் என்பது ஊடக தர்மமாக இருக்க முடியாது. இன்றைக்கு நாம் ஒருவருடைய குறைகளைக் தேடி அலைகிறோம், நாளைக்கு யாரோ ஒருவர் எம்முடைய குறைகளைத் தேடி அலைவார். உலக முடிவு வரையிலும் இது தொடர்ந்து கொண்டிருப்பது ஆரோக்கியமானதொன்றா ?

ஒருவருடைய அல்லது முக்கிய பிரமுகர் ஒருவருடைய தனிப்பட்ட வாழ்வை ஊடகங்கள் பின் தொடர்கிறது என்றால் அந்தப் பின் தொடர்தலில் சமூகத்துக்கு அல்லது அந்த ஊடகத்துக்காகவது நன்மை கிடைக்கிறது என்றால் அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் பரபரப்புக்காகவும் தன்னுடைய ஊடகத்தை முன்னிலைப்படுத்தி காட்ட வேண்டும் என்பதற்காகவும் ஒருவருடைய தனிப்பட்ட விடயங்களை அம்பலப்படுத்துவதென்பது ?
அண்மையில் ஊடகங்களில் வெளிவந்த செய்திகளால் மனமுடைந்த இளவரசர்கள்  அல்லது மிஷல் ஒபாமா சில வேளைகளில் தற்கொலை செய்து கொண்டால் அவர்களின் இறப்பினை இந்த ஊடகங்கள் பிரதியீடு செய்திடுமா ? இவர்கள் பிரபலங்கள் தற்கொலைக்கு முயற்சிப்பது சில வேளைகளில் இவர்களுக்கு கோழைத்தனமாக தெரியலாம். ஆனால் சரியான தகவல்களை / உண்மைத் தன்மையினை அறியாமல் வெளியிடுப்படும் செய்திகளினால் சாதாரண மக்கள் தினமும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். (தற்கொலைகள் தொடர்பாக முன்னர் நான் இட்ட பதிவினை நேரமிருப்பின் இங்கு சென்று படித்துக் கொள்ளுங்கள்)

இப்படி பிரபலங்கள் சாதாரண மக்கள் என அனைவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும்  ஊடகங்கள் விளையாடி அனைவரையும் மன நோயாளிகளாகவும் தற்கொலைக்குத் துணிபவர்களாகவும் மாற்றிவிடக்கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை. இதன் பின் உலக அழிவுக்கு விஞ்ஞானிகள் கூற்று ஒரு சத வீதமும் தேவைப்படாது. யாருமில்லா உலகில் அல்லது மன நோயாளிகள் நிறைந்த உலகில் இந்த ஊடகத்தினர் மட்டும் நன்றாக நலமுடன் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் போல...

எதிர்வரும் காலங்களிலும் ஊடகங்கள் தொடர்ந்தும் இவ்வாறு செயற்பட்டால் எதிர்கால சந்ததிகளின் நிலைமை ? இங்கு எதிர்கால சந்ததிகளாக எனதும் உங்களதும் உறவுகளும் குழந்தைகளும் தான். இதனை இன்னுமொரு விதத்தில் பார்க்கப் போனால் ஊடகங்களின் மூலம் எமது குழந்தைகளை அழிவிற்குத் தயாராக்கிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லுவதிலும் தவறில்லை எனத் தோன்றுகிறது.

ஆகவே எமக்குக் கிடைக்கும் இப்படிப்பட்ட பிறருடைய குறைகளை உள்வாங்கிய அல்லது ஒருவரின் தனிப்பட்ட வாழ்வில் பாதிப்புச் செலுத்தும் விடயங்களைத் தாங்கிவருகின்ற செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதனால் அவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு எம்மையரியாமல் நாமும் உரமிடுகிறோம்.

பிறருடைய குறைகளைத் துருவித் துருவி ஆராயாதீர்கள் . 

0 கருத்துகள்: