தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.10.11

டெல்லியில், பார்முலா-1 கார்பந்தயம்; தகுதி சுற்றில் செபாஸ்டியன் வெட்டல் முதலிடம்

கார் பந்தயங்களில் உலக அளவில் பிரசித்தி பெற்றது, பார்முலா-1 கார்பந்தயம். பார்முலா-1 வடிவிலான கார்கள் தான், உலக கார் ரேசில் அதிவேகத்தில் செல்லக்கூடியதாக கருதப்படுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 360 கிலோமீட்டர் வரை சீறிப்பாயும். பார்முலா-1 கார்பந்தய சாம்பியன்ஷிப் போட்டி 1950-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான பார்முலா-1 பந்தயம் உலகம் முழுவதும் 19 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதில் 12 அணிகளை சேர்ந்த 24 வீரர்கள் பங்கேற்று வருகிறார்கள். ஒவ்வொரு சுற்றிலும் முதல் 10 இடங்களை பிடிக்கும் வீரர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும். இதில் இதுவரை 16 சுற்று போட்டிகள் முடிந்து விட்டன.
ரெட்புல் அணி வீரர் செபாஸ்டியன் வெட்டல் மொத்தம் 349 புள்ளிகள் குவித்து முதலிடம் வகிப்பதுடன், இந்த ஆண்டுக்கான பார்முலா-1 உலக சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார். இங்கிலாந்தின் ஜென்சன் பட்டன் 222 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஸ்பெயினின் பெர்னாண்டோ அலோன்சா 212 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
இந்த நிலையில் பார்முலா-1 கார்பந்தயத்தின் 17-வது சுற்றான இந்தியன் கிராண்ட்பிரீ, தலைநகர் டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. பார்முலா-1 கார்பந்தயம் இந்தியாவில் முதல் முறையாக நடக்க இருப்பதால் போட்டியை ரசிகர்கள் உள்பட அனைத்து பிரபலங்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
கிரேட்டர் நொய்டா, டெல்லியில் இருந்து 24 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு 875 ஏக்கர் பரப்பளவில் உலக தரத்திலான சர்வதேச கார்பந்தய ஓடுதளத்தை, போட்டி அமைப்பாளரான ஜெய்ப்பீ நிறுவனம் அமைத்துள்ளது. புத்தா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பந்தய களம்
ரூ.2 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
போட்டிக்கான டிக்கெட்டுகள் ரூ.2500 முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. போட்டியை ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் நேரில் ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   இதையொட்டி தகுதி சுற்று போட்டி நேற்று நடந்தது. 24 வீரர்கள் பங்கேற்ற இதில் இரண்டு முறை சாம்பியனான ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் 1 நிமிடம் 24.178 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்தார்.
இதன் மூலம் இன்றைய பந்தயத்தின் போது அவரது கார்முதல் வரிசையில் இருந்து புறப்படும். இந்த சீசனில் மட்டும் ரெட்புல் அணி 16-வது முறையாக தகுதி சுற்றில் முதலிடத்தை ஆக்கிரமித்துள்ளது. இதன் மூலம் பார்முலா-1 பந்தய வரலாற்றில் ஒரு சீசனில் 16 முறை தகுதி சுற்றில் முதலிடத்தை பிடித்த முதல் அணி என்ற சாதனையை ரெட்புல் அணி பெற்றுள்ளது.
தகுதி சுற்றில் வெட்டலை விட 0.296 வினாடி பின்தங்கிய இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெக்லரன் அணி) 2-வது இடத்தையும், ஆஸ்திரேலியாவின் மார்க் வெப்பர் (ரெட்புல் அணி) 3-வது இடத்தையும், ஸ்பெயினின் பெர்னாண்டோ அலோன்சா (பெராரி அணி) 4-வது இடத்தையும், 7 முறை உலக சாம்பியனான ஜெர்மனியின் மைக்கேல் ஷூமாக்கர் 12-வது இடத்தையும் பெற்றனர்.
இந்திய தொழிலதிபர் விஜய்மல்லையாவுக்கு சொந்தமான சகாரா போர்ஸ் இந்தியா அணி சார்பில் களம் இறங்கிய ஜெர்மனியின் அட்ரியன் சுதில் தகுதி சுற்றில் 8-வது இடத்தை பிடித்தார். சகாரா போர்ஸ் இந்தியா அணியின் மற்றொரு வீரர் பால்டி ரெஸ்டா (இங்கிலாந்து) 13-வதாக வந்தார்.
இன்றைய பிரதான சுற்று போட்டி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.
பந்தய தூரம் 16 வளைவுகளுடன் கூடிய 5.14 கிலோ மீட்டர் கொண்டது. இதனை 60 முறை சுற்றி வர வேண்டும். இதன்படி பந்தயத்தின் மொத்த தூரம் 308.4 கிலோ மீட்டர் ஆகும். இதில், தொடர்ந்து முத்திரை பதித்து வரும் தகுதி சுற்றில் முதலிடம் பிடித்த செபாஸ்டியன் வெட்டலே வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
அவருக்கு அவரது அணியை சேர்ந்த மார்க் வெப்பர், அலோன்சா, ஹாமில்டன், பிரேசிலின் பெலிப் மாசா ஆகியோர் கடும் சவாலாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. தகுதி சுற்றில் 2-வதாக வந்த ஹாமில்டன், முந்தைய நாள் பயிற்சியின் போது, மஞ்சள் கொடி எச்சரிக்கையை மீறி செயல்பட்டதால் அவருக்கு, புறப்படும் வரிசையில்
3 இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது.
இதன்படி அவர் 5-வது வரிசையில் இருந்து இன்று காரை இயக்குவார் என்பது குறிப்பிடத்தக்கது. செபாஸ்டியன் வெட்டல் இந்த சீசனில் இதுவரை நடந்துள்ள 16 போட்டிகளில் 10-ல் முதலிடம் கண்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
எஞ்சிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் ஓர் சீசனில் அதிகமுறை வெற்றி பெற்றுள்ள மைக்கேல் ஷூமாக்கரின் சாதனையை (2004-ம் ஆண்டு 13 வெற்றி) சமன் செய்து விடுவார். ஏற்கனவே பட்டத்தை உறுதி செய்து விட்ட நிலையில், வெட்டலின் தற்போதைய இலக்கு ஷூமாக்கரின் சாதனையை சமன் செய்வது தான்.
இந்த போட்டியை ஸ்டார் போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

0 கருத்துகள்: