காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு, கர்ப்பப் பை வாய் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர், நியூயார்க்கில் புற்றுநோய் சிகிச்சைக்கு பிரபலமான, “மெமோரியல் ஸ்லோன் – கெட்டரிங் கேன்சர் சென்டர்’ என்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா, சமீப காலமாக, பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை.
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரிலும் பங்கேற்கவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்பது கூட, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு தெரியவில்லை. இந்நிலையில், கடந்த 4ம் தேதி, காங்., பொதுச்செயலர்களில் ஒருவரான ஜனார்த்தன் திவேதி,”சோனியாவுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக, வெளிநாடு சென்றுள்ளார். அதுவரை கட்சிப் பணிகளை கவனித்துக் கொள்வதற்காக, ராகுல், அந்தோணி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ என்றார்.ஆனாலும், சோனியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், எந்த நாட்டில் சிகிச்சை பெறுகிறார் என்றும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம், காங்., கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,”சோனியாவுக்கு, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில், அவரை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். சிகிச்சை பெறுவது அவரது சொந்த விஷயம் என்பதால், அதுகுறித்த விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டாம் என, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது’ என, தெரிவிக்கப்பட்டது.
நேற்று முன்தினமும், சோனியாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றும் அவர் சிகிச்சை பெற்று வரும் நாடு குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. எனினும், அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதாக, அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில், “தெகல்கா’ பத்திரிகையின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில், “அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள புற்று நோய் சிகிச்சைக்கு பிரபலமான, “மெமோரியல் ஸ்லோன் – கெட்டரிங் கேன்சர் சென்டர்’ என்ற மருத்துவமனையில், சோனியா அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல முக்கியஸ்தர்கள், நியூயார்க்கிற்கு படை எடுத்துள்ளனர்.
சோனியாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, மருத்துவமனை வட்டாரங்கள் கூறியதாவது: கர்ப்பப் பை வாய் புற்றுநோய் (செர்விகல் கேன்சர்) தொடர்பான பாதிப்பு, சோனியாவுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காகவே, அவர் நியூயார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள விஷயம் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, மருத்துவமனை நோயாளிகள் தொடர்பான பதிவேட்டில் கூட, அவரது பெயர் இடம் பெறவில்லை. வி.ஐ.பி., என்ற அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோனியாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டவர், இந்திய – அமெரிக்க டாக்டரான தத்தாத்ரேயுடு நூரி. இவர் தலைமையிலான டாக்டர்கள் தான், சோனியாவுக்கு சிகிச்சை மேற்கொண்டனர்.
அமெரிக்க பத்திரிகை ஒன்று, சமீபத்தில் நடத்திய ஆய்வில், பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதில் சிறந்து விளங்கும் டாக்டராக, தத்தாத்ரேயுடுவை தேர்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர், நியூயார்க்கில் உள்ள பிரபல மருத்துவக் கல்லூரியின் பேராசிரியராகவும், கதிர்வீச்சு புத்தாக்கவியல் துறையின் தலைவராகவும் உள்ளார். சோனியா குடும்பத்துக்கு நெருக்கமானவரும், உலக வங்கிக்கான இந்தியாவின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருபவருமான புலோக் சட்டர்ஜி தான், சோனியாவுக்கு, நியூயார்க் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார். (சட்டர்ஜி, விரைவில் பிரதமர் அலுவலகத்தின் முதன்மைச் செயலராக பதவியேற்கவுள்ளார்) சட்டர்ஜியும், அவரது உதவியாளர் ருபேஸ் தலாலும், கடந்த வாரமே நியூயார்க்கிற்கு சென்று, சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.
சோனியாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய விவரங்கள் வெளியில் தெரியக் கூடாது என்பதற்காக, இது தொடர்பான தகவல்களை, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம், மிகவும் ரகசியமாக வைத்திருந்தது. அறுவை சிகிச்சையில் இருந்து, சோனியா குணமடைந்த பின், அதற்கு பின் ஒரு மாத காலம் வரை, அவர் ஓய்வெடுக்கக் கூடும் என தெரிகிறது. அப்போதும், அவர் சில தொடர் சிகிச்சைகளை மேற்கொள்வார்.
இதனால், நியூயார்க்கில் உள்ள, பிரபலமான ஓட்டல் ஒன்றில், அனைத்து வசதிகளுடன் கூடிய அறையில் அவர் தங்க உள்ளார். அல்லது நியூயார்க்கில் உள்ள மருத்துவ பல்கலையில் அவர் தங்குவார். எனினும், அறுவை சிகிச்சைக்கு பின், சோனியாவுக்கு “ரேடியஷன் தெரபி’ தொடர்பான சிகிச்சைகளை மேற்கொள்வது குறித்து, மருத்துவமனை நிர்வாகம், இன்னும் முடிவு செய்யவில்லை. இவ்வாறு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. வார்டுக்கு மாற்றம் : இதற்கிடையே, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து, தனி வார்டுக்கு சோனியா மாற்றப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் கட்சி சார்பில், நேற்று தெரிவிக்கப்பட்டது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக