தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.7.11

புருலியா ஆயுத வீச்சு வழக்கு: கிம் டேவியை ஒப்படைக்க டென்மார்க் மறுப்பு

புதுடெல்லி, ஜூலை. 1-  புருலியாவில் ஆயுதங்களை வீசிய வழக்கின் முக்கிய குற்றவாளி கிம் டேவியை இந்தியாவிடம் ஒப்படைக்க டென்மார்க் உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

மேற்கு வங்காள மாநிலம் புருலியா மாவட்டத்தில் கடந்த 1995-ம் ஆண்டு டிசம்பர் 17-ந் தேதி, தாழ்வாக பறந்து வந்த ஒரு விமானம், ஆயுத குவியலை வீசிவிட்டு சென்றது. அதில், நூற்றுக்கணக்கான ஏ.கே.47 ர
க துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், டாங்கி எதிர்ப்பு கையெறி குண்டுகள் ஆகியவை இருந்தன. அந்த விமானத்தில் இருந்த லாட்வியா நாட்டைச் சேர்ந்த 5 பேரும், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பீட்டர் பிளீச் என்பவனும் கைது செய்யப்பட்டனர். ஆனால் முக்கிய குற்றவாளியான டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கிம் டேவி (வயது 49) தப்பி ஓடி விட்டான். அவன்தான் இந்த காரியத்தை திட்டமிட்டு அரங்கேற்றியது என்று பிடிபட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதற்காக, லண்டனில் இருந்து சரக்கு விமானத்தை கடத்தி வந்து, ஈரான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து ஆயுதங்களை போட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, கிம் டேவியை சி.பி.ஐ. தேடத் தொடங்கியது. அவனுக்கு எதிராக இன்டர்போல் மூலம் தேடுவதற்கான நோட்டீசு வெளியிடப்பட்டது.
விசாரணைக்காக, கிம் டேவியை இந்தியாவிடம் ஒப்படைக்க டென்மார்க் அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, டென்மார்க் நீதிமன்றம் ஒன்றில் கிம் டேவி வழக்கு தொடர்ந்தான். அதில், இந்தியாவில் உள்ள சிறைகளின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அங்கு தன்னை சித்ரவதை செய்வார்கள் என்றும் அவன் தனது மனுவில் கூறி இருந்தான்.
ஆனால், கிம் டேவிக்கு மரண தண்டனை வழங்கப்பட மாட்டாது என்றும், டென்மார்க் நீதிமன்றம் விரும்பினால், அவன் டென்மார்க் சிறையிலேயே தண்டனையை அனுபவிக்கலாம் என்றும் சி.பி.ஐ. உத்தரவாதம் அளித்தது. ஆயினும், இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து டென்மார்க் உயர் நீதிமன்றத்தில் டென்மார்க் அரசு அப்பீல் செய்தது. அந்த மனு, 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில், உயர் நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது. கிம் டேவியை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என்று கூறி, டென்மார்க் அரசின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்திய சிறைகளில் கிம் டேவி சித்ரவதை செய்யப்படுவான் என்றும், மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவான் என்றும் கூறி, அவனை ஒப்படைக்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
இந்த தீர்ப்பு, சி.பி.ஐ.க்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இது குறித்து சி.பி.ஐ. செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:-
இந்த வழக்கில், சி.பி.ஐ.க்கு எதிராக உயர் நீதிமன்றம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தீர்ப்பின் நகல் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. கிடைத்த பிறகு, தீர்ப்பை எதிர்த்து டென்மார்க் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யுமாறு தூதரகம் மூலமாக டென்மார்க் நீதித்துறை அமைச்சகத்தை கேட்டுக் கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்: