தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.7.11

ரூ.5 லட்சம் வரை சம்பளம் பெறுவோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை

சென்னை, ஜூலை. 3-   ரூ.5 லட்சம் வரை சம்பளம் பெறுவோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை என்று சென்னை வருமான வரி தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை வருமான வரி தலைமை ஆணையர் பிரேமா மாலினி வாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சம்பளதாரருக்கான புதிய வருமான
வரிப் படிவம் இந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை பூர்த்தி செய்ய படிவத்துடன் இணைக்கப்பட்டுள்ள கணக்கிடுதலுக்கு `ஒர்க் ஷீட்'ஐ பயன்படுத்த வேண்டும். இந்த படிவத்துடன் எந்த ஒரு ஆவணத்தையும் இணைக்க வேண்டியதில்லை. இந்த படிவத்தின் தாள்கள் ஸ்டேபிள் செய்து தரப்பட்டுள்ளதால் மேலும் ஸ்டேபிள் செய்வதோ, கட்டுவதோ தேவையில்லை. படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள பெட்டி இடம் தவிர மற்ற இடங்களில் எழுதக்கூடாது. படிவத்தை மடக்க கூடாது. டிடிஎஸ் விவரங்களை பூர்த்தி செய்ய படிவத்தில் உள்ள 2-ம் பக்கம் போதுமானதாக இல்லை என்றால், படிவத்துடன் இணைக்கப்பட்ட துணைத்தாள்களை பயன்படுத்தலாம். படிவத்தில் கறுப்பு வெள்ளையிலான நகல்களை பயன்படுத்தக் கூடாது.
ரூ.5 லட்சத்துக்கு குறைவாக வருமானம் பெறும் சம்பளதாரர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து மத்திய வாரியம் விலக்கு அளித்துள்ளது. இந்த விலக்கு 2010-11 முதல் அமலாக்கப்பட்டுள்ளது. இது சம்பளதாரருக்கு மட்டுமே பொருந்தும். மேலும் சம்பள வருமானத்துடன் சேமிப்பு வங்கி வட்டி ரூ.10 ஆயிரத்துக்குள் இருப்பவரும் இந்த திட்டத்தின் கீழ் வருவர். சம்பளதாரர் தன்னுடைய வருமானம் பற்றிய அனைத்து விவரங்களையும் தன்னுடைய சம்பள பட்டுவாடா அதிகாரியிடம் தெரிவித்து அதற்குண்டான முழு வரியையும் செலுத்தியிருக்க வேண்டும். ஒரு நபர் கடந்த வருடத்தில் இரு வேறு நிறுவனங்களில் பணிபுரிந்திருந்தாலும், சம்பளத்தை தவிர வேறு வருமானம் பெற்றவரும் மேலும் ரீபண்டு வர வேண்டியிருந்தாலும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
சம்பளதாரர் மற்றும் வியாபாரிகளுக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூலை 31. இந்த வருடமும் வருமான வரி அலுவலகத்தில் ஜூலை கடைசி வாரத்தில் சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்படவுள்ளது. இவற்றை தாம்பரம் மற்றும் காஞ்சீபுரம் வருமான வரி அலுவலகத்தில் கணக்கு தாக்கல் செய்பவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் பெரிய நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கான சிறப்பு கவுன்ட்டர்கள் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களிலேயே ஜூலை முதல் மற்றும் 2-வது வாரத்தில் திறக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 கருத்துகள்: