தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.5.11

பின் லேடனை கடலில் வீசியது தவறு

ஒசாமா பின் லேடனை இஸ்லாமிய வழக்கத்திற்கு எதிராக கடலில் வீசியது தவறு என்று முஸ்லிம் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமியர்களின் உடல்கள் தலை புனித நகரான மெக்கா இருக்கும் திசை நோக்கி வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்படும். ஆனால் பின் லேடனின் உடல் கடலில் வீசப்பட்டுள்ளது.
ஒருவர் கப்பலில் பயணிக்கும் போது இறந்துவிட்டால் அவரை கடலில் அடக்கம் செய்யலாம். முஸ்லீம்களை
கேவலப்படுத்துவதற்காகவே அமெரிக்கர்கள் இவ்வாறு செய்துள்ளனர். ஆனால் அமெரிக்க நிர்வாகத்திற்கு இதில் உடன்பாடு இருந்த மாதிரி தெரியவில்லை என்று லெபனானின் மூத்த மதத் தலைவரான ஒமர் பக்ரி முகமது தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஒரு அமெரிக்க அதிகாரி கூறியதாவது,
அவரது உடலை எந்த நாடும் ஏற்றுக் கொள்ளும் என்று நினைக்கவில்லை. அதனால் தான் கடலில் அடக்கம் செய்தோமே தவிர நிலத்தில் செய்திருந்தால் போராளிகள் அவருக்கு சமாதி கட்டிவிடுவார்கள் என்று நினைத்து செய்யவில்லை என்றார்.
இஸ்லாமிய முறைப்படி தான் லேடனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார். இஸ்லாமிய வழக்கப்படி உடலைக் குளிப்பாட்டி, அதன் பிறகு வடக்கு அரபிக் கடலில் அடக்கம் செய்யப்பட்டது என்று பென்டகன் கூறியுள்ளது.
துபாய் இஸ்லாமியத் தலைவர் முகமது அல் குபைஸி கூறியதாவது, அவர்கள் கடலில் அடக்கம் செய்ததாகக் கூறலாம். ஆனால் இஸ்லாமிய சட்டப்படி செய்ததாகக் கூற முடியாது. அவரது குடும்பத்தார் உடலை வாங்க மறுத்தால் குழியைத் தோண்டி, பிரார்த்தனை செய்து அடக்கம் செய்யலாம். அசாதாரணச் சூழ்நிலைகளில் கடலில் அடக்கம் செய்யலாம். ஆனால் இது அந்த வகையைச் சேராது என்றார்.
ஜோர்டான் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய சட்டப் பேராசிரியராக இருக்கும் முகமது குதா கூறியதாவது, உடலை வாங்கவும், முஸ்லிம் முறைப்படி அடக்கம் செய்யவும் யாரும் இல்லை என்றால் கடலில் அடக்கம் செய்வதை யாரும் தடுக்கமாட்டார்கள். நிலமும், கடலும் இறைவனுடையது. அவனே மக்களை பாதுகாத்து, இறுதித் தீர்ப்பு நாளில் இறந்தவர்களை எழுப்புவான். பின் லேடன் உடலை வாங்க யாருமேயில்லை என்று கூறுவது உண்மையில்லை என்றார்.
ஷியா தலைவர் இப்ராஹிம் அல் ஜபாரி தெரிவித்ததாவது, ஒருவர் கப்பலில் இறந்தால் கடலில் அடக்கம் செய்யலாம். ஆனால் அவர் நிலத்தில் இறந்தால், நிலத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டுமே தவிர அவரை கடலில் வீசக் கூடாது என்றார்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள புகழ்பெற்ற அபு ஹனிபா மசூதியில் போதிக்கும் அப்துல் சத்தார் அல் ஜனாபி கூறுகையில், அமெரிக்கர்கள் செய்தது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களைத் தூண்டிவிடக்கூடியது. இந்த செயலை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு முஸ்லிமின் உடலை கடலில் வீசுவது குற்றத்திற்கு சமம். லேடனின் உடலை அவரது குடும்பத்தாரிடம் கொடுத்திருக்க வேண்டும் என்றார்.
இதற்கிடையே பின்லேடனின் உடலை அவரது சொந்த நாடான செளதி அரேபியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க அதிபர் ஒபாமா விரும்பியதாகவும், ஆனால், அதை ஏற்க செளதி மன்னர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

0 கருத்துகள்: