தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.4.11

தேர்தல் பணம் ஐந்து கோடி பறிமுதல் ?


ஷெட்டில் நின்றிருந்த தனியார் ஆம்னி பஸ்சின் மேற்கூரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 5.11 கோடி ரூபாயை, திருச்சி ஆர்.டி.ஓ., சங்கீதா, தனி ஆளாக சென்று பறிமுதல் செய்து, சாதனை படைத்துள்ளார். இது தொடர்பாக, ஆம்னி பஸ் உரிமையாளர் உள்ளிட்ட மூவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுப் போடுபவர்களுக்கு வீடு, வீடாக பணம் வினியோகம் செய்ய, இந்த பணத்தை திருச்சிக்கு கடத்தி வந்த பிரமுகர் யார் என்பது இன்னமும் புதிராக உள்ளது.
போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு போட்டியிடும், திருச்சி மேற்கு தொகுதிக்கு பணம் கடத்தப்படுவதாக நேற்று முன்தினம் நள்ளிரவில், திருச்சி ஆர்.டி.ஓ.,வும் தேர்தல் நடத்தும்
அலுவலருமான சங்கீதாவுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது.அமைச்சர் நேருவுக்கு நெருக்கமான உதயகுமார் என்பவருக்கு
சொந்தமான, “எம்.ஜே.டி., ஆம்னி’ பஸ்சின் மேற்கூரையில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அந்த தகவலில் கூறப்பட்டிருந்தது.உடனடியாக விரைந்து செயல்பட்டார் ஆர்.டி.ஓ., சங்கீதா. நள்ளிரவு என்றும் பாராமல், அவரது டிரைவர் துரை மற்றும் உதவியாளர் ஒருவர் என மூன்று பேர் மட்டும், நள்ளிரவு, 2.30 மணியளவில் புறப்பட்டனர். பொன்னகரில் உள்ள எம்.ஜே.டி., ஆம்னி பஸ் நிறுவனத்தின் ஷெட்டுக்கு அவர்கள் சென்றனர். அங்கு நின்றிருந்த பஸ்சின் மேற்கூரையில் ஏறி சோதனை செய்தனர். பஸ் அருகில் நின்றிருந்த டிரைவர், அப்போது அங்கிருந்து நைசாக நழுவிச் சென்றுவிட்டார்.
பஸ் மேற்கூரையில் மூடப்பட்டிருந்த தார்பாயை விலக்கி பார்த்தபோது, ஐந்து டிராவல் பேக்குகள் இருந்தன. அவற்றை திறந்து பார்த்தபோது, சங்கீதா அதிர்ச்சியடைந்தார். அவற்றில், கட்டுக்கட்டாக, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன.உடனடியாக, மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர் ராஜகோபால், தேவதாசன் மற்றும் போலீசாருக்கு ஆர்.டி.ஓ., சங்கீதா தகவல் தெரிவித்தார். அந்த ஆம்னி பஸ்சை மாற்று டிரைவர் மூலம், ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து, வருமான வரித்துறை உதவி கமிஷனர் ஆல்பர்ட் மனோகரனுக்கும் தெரிவிக்கப்பட்டு, அவரும் திருச்சி ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு வந்தார். பணத்தை எண்ணிப் பார்த்த போது, 5 கோடியே, 11 லட்சத்து, 27 ஆயிரம் ரூபாய் இருந்தது.
அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், சம்பவ இடத்தில் நின்றிருந்த ஆம்னி பஸ் உரிமையாளரின் இன்னோவா காரையும் பறிமுதல் செய்தனர். அதன்பின், போலீசாரும், தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பஸ் உரிமையாளரான உதயகுமாரனின், பொன்னகர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். வீட்டில் உதயகுமாரனின் மனைவி உமா மகேஸ்வரி மட்டுமே இருந்தார்.அவருடைய அனுமதியுடன் தேர்தல் பார்வையாளர்களும், வருமான வரித்துறையினரும் விசாரணை நடத்தினர்; வீட்டையும் சோதனையிட்டனர். வீட்டில், 81 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கிடைத்தது. ஆம்னி பஸ் மேலாளர் பாலுவிடம் விசாரணை நடத்தி, அவருடைய வீட்டையும் சோதனையிட்டனர்; அப்போது சில ஆவணங்கள் சிக்கின. அவற்றையும் தேர்தல் பார்வையாளர்கள் வருமான வரித்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.
பின், ஆம்னி பஸ் உரிமையாளர் உதயகுமாரன், அவரது மகன் அருண் பாலாஜி மற்றும் ஆம்னி பஸ் நிறுவன மேலாளர் பாலு ஆகியோரை விசாரணைக்காக வருமான வரித்துறை அதிகாரிகள், அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். காலை முதல் மாலை வரை தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் காரணமாக, தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி அனுமதியின்றி கணக்கில் வராத பணத்தை எடுத்துச் செல்லும் பலரும், லட்சக்கணக்கான ரூபாயுடன், தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை இல்லாத வகையில், ஒரே நேரத்தில், 5 கோடியே, 11 லட்சத்து, 27 ஆயிரம் ரூபாய் பிடிபட்டுள்ளது, தேர்தல் கமிஷனை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மந்திரி நேரு மறுப்பு : வருமான வரித்துறையிடம் சிக்கியுள்ள ஆம்னி பஸ் உரிமையாளர் உதயகுமாரன், போக்குவரத்துத்துறை அமைச்சர் நேருவுக்கும், அவரது தம்பி ராமஜெயத்துக்கும் மிகவும் நெருக்கமானவர். அவர்கள் அனைவரும், ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அமைச்சர் நேருவின் பணம் தான், உறவினர் மூலம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது’ என்ற தகவல், திருச்சி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.இதையறிந்த அமைச்சர் நேரு, “எனக்கும், பிடிபட்ட பணத்துக்கும், என் உறவினர்களுக்கும், எவ்வித தொடர்பும் இல்லை’ என, அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: