தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.4.11

சாய்பாபா மரணம் குறித்து தஸ்லிமா நஸ்ரின் விமர்சனம்


சாய்பாபாவின் மரணம் குறித்தும், இதற்காக கிரிக்கெட் விளையாடாமல் பிரார்த்தனை செய்வதாக அறிவித்த சச்சின் டெண்டுல்கர் குறித்தும் விமர்சனம் செய்து, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்.
தஸ்லிமாவின் எழுத்துக்களை விட அவரது சர்ச்சைப் பேச்சுக்களும், கருத்துக்களும்தான் பிரபலமாக உள்ளது. அவரது லஜ்ஜா என்ற நூல் வங்கதேச மதவாதிகளின் ஆத்திரத்தைக் கிளப்பியதால் அவருக்கு மதவாதிகள் பாத்வா விதித்தனர். இதையடுத்து அங்கிருந்து தப்பி தலைமறைவான தஸ்லிமா பல நாடுகளில் தஞ்சமடைந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
இந்தியாவில் இவர் கடைசியாக தஞ்சமடைந்து தங்கினார். ஆனால் இங்கும் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பவே 2008ம் ஆண்டு வெளியேற்றப்பட்டார்.
தற்போது ஸ்வீடன் நாட்டுக் குடியுரிமையைப் பெற்று ஸ்வீடனில் பாதுகாப்புடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது புதிதாக ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் தஸ்லிமா. சாய்பாபாவின் மரணம் குறித்தும், இதற்காக பிரார்த்தனை செய்யுமாறு சச்சின் டெண்டுல்கர் விடுத்த அழைப்பையும் அவர் விமர்சித்துள்ளார்.
சாய்பாபாவை விமர்சித்தும், கேலி செய்தும் ட்விட்டரில் அவர் பல தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் விடுத்துள்ள ஒரு செய்தியில், ஏன் சாய்பாபாவின் மரணத்திற்காக மற்றவர்கள் சோகமாக இருக்க வேண்டும். அவருக்கு 86 வயதாகி விட்டது. அவரை மரணமடைய அனுமதிப்பதுதான் சரியானது, நியாயமானது. சச்சின், அவருக்காக பிரார்த்தனை செய்வதாக கூறியிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது என்று கூறியுள்ளார் தஸ்லிமா.
இதேபோல இன்னொரு ட்விட்டர் செய்தியில், சாய்பாபா இறந்து விட்டார். 2022ம் ஆண்டுதான் இறப்பேன் என்று முன்பு அவர் கூறியிருந்தார். ஆனால் அதற்கு முன்பே இறந்து போய் விட்டார் என்று கிண்டலடித்துள்ளார்.
இன்னொரு ட்விட்டர் செய்தியில், யாரும் சாய்பாபாவின் அஸ்தியை தங்களது விரல் நக இடுக்குகளில் மறைத்து எடுத்துக் கொண்டு வந்து அதைப் பத்திரப்படுத்த முயல மாட்டார்கள் என்று நம்புகிறேன் என்று சற்று காட்டமாகவே விமர்சித்துள்ளார்.
அதேபோல இன்னொரு ட்விட்டர் செய்தியில், ஒரு பாபா போய் விட்டார். இனி ஆயிரக்கணக்கானோர் அந்த இடத்தைப் பிடிக்க முயல்வார்கள். காரணம், பக்தி பிசினஸ் தற்போது நல்ல லாபகரமானதாக இருப்பதால் என்று கூறியுள்ளார். பாபா குறித்த தஸ்லிமாவின் கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

0 கருத்துகள்: