தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.3.11

லிபியா மீதான மேற்கின் அக்கறை - மனிதநேயத் தோற்றத்தில் ஒரு ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு!


இரு தினங்களுக்கு முன் ஐ.நாவின் பாதுகாப்புச்சபை லிபியாவில், விமானம் பறக்க முடியாத வான் வெளிப் பிரகடனம் எனும் வரலாறு காணாத தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் லிபிய வெளிவிவகார அமைச்சர் யுத்த நிறுத்ததை அறிவித்திருந்தும் பிரான்சின் போர் விமானம் லிபியா மீது தாக்குதலை நிகழ்த்தியிருந்தது. ஐரோப்பிய நேரப்படி நேற்று சனிக்கிழமை பிற்பகலில் அமெரிக்க மற்றும் பிரித்தானிய கடற்படை படையணிகள் 110 ரொக்கற்றுக்கள் லிபியாவின் 20 இடங்கள் மீது தாக்குதலை நிகழ்த்தியுள்ளன. இத்தாக்குதலுக்கு Odyssey Dawn எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இது தவிர அமெரிக்கா, பிரான்ஸ் பிரித்தானியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து 25 போர் விமானங்களையும் நீர்முகிழ்கிக் கப்பல்களையும் மத்தியதரைக்கடல் பிராந்தியத்தில் நிறுத்தியுள்ளன. அமெரிக்காவினதும்
நோர்வேயினதும் விமானங்கள் வான்வெளியைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. மொத்தமாக 20 விமானங்களும், வானூர்த்திதாங்கிக் கப்பலும் தயார் நிலையில் இருக்கின்றன. நோர்வே F16 விமானங்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏகாதிபத்தியத்திற்கு துணைபோகும் நாடுகளாக கொள்ளக்கூடிய துனிசியா, எகிப்து பஹ்ரைன் போன்ற நாடுகளில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிகள் அடிப்படைக்கட்டமைப்புக்கள் எதையும் மாற்றக்கூடியளவிற்கு சக்தி வாய்ந்தவையல்ல என்பதுடன் இவைகள் தற்காலிக மற்றும் இடைக்காலத் தீர்வுகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. இதன் உச்சக்கட்டமாக எகிப்தில் நடைபெறும் மக்கள் வாக்கெடுப்பைக் கூறலாம்.
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்க சார்பு கொண்ட நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளில் இருக்கும் ஆட்சிமுறைகளும், எண்ணை வளத்தைக் கொண்டுள்ள நாடுகளில் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டிருப்பவர்களும் சர்வாதிகாரிகள் என்ற கருத்தில் சர்கோசிக்கும் ஒபாமாவும் பிரித்தானிய பிரதமரும் ஐக்கியமாக இருக்கிறார்கள். இந்த மூன்று நாடுகளும் உலகின் பல நாடுகளை தமது காலனித்துவக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த்ததும் ஆக்கிரமிப்பு யுத்தங்களை மேற் கொண்டதும், அந்த நாடுகளின் வளங்களைச் சூறையாடி, பிரித்தாளும் தந்திரத்தைப் பயன்படுத்தி கூட்டாக வாழ்ந்த பல இனங்களிடையே துவேசப் போக்கினைத் தூண்டி நாடுகளில் அமைதியின்மையை ஏற்படுத்தி விட்டு அகன்றவை.
இப்போது ஐக்கியநாடுகளின் துணையுடன் சனநாயகவாதிகளாகவும் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களாகவும் வெள்ளையுடையணிந்த கனவான்களாகவும் வலம் வருகின்றனர்.
வன்னியில் இறுதியுத்தம் என இலங்கை அரசு  மக்கள் மீது போர் நடத்திய போது, பிரித்தானிய, பிரான்சின் வீதிகளில் புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் சமூகத்தின் இளம் சந்ததியினரின் போராட்டங்கள் எமது மனத்திரையை விட்டு அகலவில்லை, அமெரிக்க மற்றும் பிரித்தானிய இராணுவத்தினர் ஆப்கானிஸ்தானில் வழங்கி வரும் ” சேவைகள்” எமக்குத் தெரியாதவையல்ல.
சவூதி அரேபியாவில் மனித உரிமைகள் மீறப் படவில்லையா, அங்குள்ள மக்கள் எண்ணை வளம் மூலம் கிடைக்கும் நன்மைகள் முழுமையாக அநுபவிக்கிறார்களா, இந்த மக்களின் சனநாயக உரிமைகள் பற்றி ஏன் இதுவரை அமெரிக்காவோ, பிரித்தானியாவோ, பிரான்சோ அக்கறை கொள்ளவில்லை?. சதாம் ஹுசைனை உருவாக்கியதும், குர்திஷ் இன மக்களை அழிக்க துணையாகச் செயற்பட்டதும், பின்லாடனின் வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்கியதும், ஆப்கானிஸ்தானில் படைகளை குவித்தமைக்கும் பின்னணி என்ன என்பது எமக்குத் தெரிந்ததே.
துனிஷியா, எகிப்தில் மக்கள் எழுச்சிகள் நடைபெற்ற போது இந்த நாடுகளை ஆண்டவர்கள் முப்பது வருடங்களுக்கு மேலாக ஆட்சி அதிகாரத்தில் நீடித்தவர்கள், நாட்டின் வளங்களைச் தமக்கும் தமது உறவினர்களின் நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டவர்கள்தான். அப்போது பிரான்ஸ், பிரித்தானியா, அமெரிக்காவும் கண்டன அறிக்கையுடன் தம்மை மட்டுப்படுத்திக் கொண்டன. ஐநாவும் அமைதி காத்தது.
இரண்டு வருடங்களுக்கு முன் முள்ளிவாய்க்காலில் அப்பாவி மக்கள் அமெரிக்கா,இந்தியா உட்பட்ட பல நாடுகளின் ஆயுத பலத்தினால் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட போது ஐநாவின் அமைதிகாக்கும் படை, மனிதஉரிமை பாதுகாப்பு அமைப்பு இன்னபிற அமைப்புக்கள், தற்போது லிபியாவின் அப்பாவிமக்களின் உரிமைகளை பாதுகாக்க இராணுவ நடவடிக்கைக்கு கங்கணம்கட்டிக் கொண்டு புறப்படும் நாடுகள் எதுவும் இலங்கை அரசிற்கு எதிராக ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியவில்லை.
முட்கம்பி முகாம்களுக்குள் அடைக்கப்பட்ட மக்கள் இன்னமும் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமல் படும் அவலம் இன்னமும் தொடர்கிறது. அப்போதெல்லாம் இல்லாத அக்கறை லிபிய மக்கள் மீது மட்டும் உடைப்பெடுத்து வருவதற்குரிய காரணங்கள் தான் என்ன?
1969 இல் கடாஃபி ஆட்சியதிகாரத்திற்கு வந்த வேளை இரண்டாம் உலக யுத்தத்தின் விளைவாக அரபு தேசிய அலை வீசிக் கொண்டிருந்த காலம். இவர் இதனைப் பேணிப் பாதுகாப்பவராகவும், எகிப்திய தலைவரான ஜமால் அப்துல் நசாரின் கொள்கைகளின் பால் ஈர்க்கப்பட்டவராக இருந்தார், இவரின் மாதிரியைப் பின்பற்றி மன்னராட்சி முறைக்கு மாற்றாக குடியரசைப் பிரகடனம் செய்தார். அரபு இனத்தின் ஐக்கியத்தில் ஆர்வமுள்ளவராகச் செயற்பட்டார். Wheelus airbase இலிருந்து அமெரிக்க படைகளை வெளியேற்றினார், இதன் பின்பு சமூக மாற்றத்திற்கான முயற்சிகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
லிபிய ஆட்சிமுறை அக்கால சமூக, அரசியல் மாற்றங்களுக்கு அமைய ஒரு தனி வழியைப் பின்பற்றியது. இஸ்லாமிய மயப்படுத்தப்பட்ட மாவோயிசத்தால் ஈர்க்கப்பட்டது இந்த நாட்டின் தலைமை. 1970 க்களில் இறுதியில் தேசியவாத அலை வீசிக் கொண்டிருந்த வேளை கடாஃபி மக்களுக்கான நேரடியா ஜனநாயகத்தை அறிமுகப்படுத்துவதாக கூறி குடியரசாக இருந்த நாட்டை மக்கள் குடியரசாக மாற்றினார். இவ்வேளை மக்கள் தம்மை தாமே ஆளுகின்ற ஜனநாயக மக்கள் சோசலிச நாட்டை தாம் உருவாக்கி விட்டதாக இவர்கள் நம்பினார்கள்.
சோவியத்யூனியனில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து கடாஃபியும் தனது கொள்கைகளா மாற்றிக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை மேலைத்தேய சந்தைக்கு திறந்து விட ஆரம்பித்தார். லிபியாவில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக கடாஃபியும் அவரது குடும்பத்தினரும் அதிகாரத்தை கொண்டிருக்கின்றனர், இவரும் இவருக்கு ஆதரவான அதிகாரத்திலிருக்கும் குழுவினரும் பதவி விலக வேண்டும் என போராடிக் கொண்டிருக்கும் எதிர்அணியினர் கூறுகின்றனர். இந்த எதிர் அணி மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஜனநாயக உரிமைக்காகப் போராடுபவர்கள், புத்திஜீவிகள் பழங்குடியினர் மற்றும் இஸ்ஸாமிய சக்திகள் என ஒரு பரந்தபட்ட கொள்கைப் பற்றுக் கொண்டவர்களை உள்ளடக்குகிறது.
லிபிய எழுச்சியின் பிரதான அரசியல் சக்தியாக இருப்பது Youth of the 17 th of feburary Revolution ஆகும். ஒரு ஜனநாயக அடித்தளத்தைக் கொண்டுள்ள இவர்கள் சட்டமும் ஒழுங்கும் கடைப்பிடிக்கப்பட வேண்டும், ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்பவற்றுடன் சுயாதீனமான தேர்தல்களையும் கோரி நிற்கிறார்கள் இவர்கள். இந்த அணியில் அரசாங்கத்திலிருந்தும் இராணுவத்திலிருந்தும் பிரிந்து வந்த சக்திகளும் இணைந்துள்ளன.
மேலைத்தேய ஜனநாயகவாதிகளின் நாட்டம் முழுவதும் லிபியாவில் இருக்கும் எண்ணை தொடர்பானவை என்பது எல்லோரும் அறிந்ததே. மோதல்கள் நீண்ட காலம் நீடிக்கும் பட்சத்தில் அல்லது மனிதப்படுகொலைகள் அதிகம் நிகழும் பட்சத்தில் லிபியாவின் எண்ணை விற்பனை தொடர்பாக தடைகளை, கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டி ஏற்படலாம், இதனால் எண்ணை விலையை தற்போதுள்ள நிலைமை போல தொடர்ந்தும் உயர்வாகப் பேண வேண்டும், அத்தோடு உலகப் பொருளாதாரம் தற்போதுள்ள நிலையில் தொடர்ந்து நீடிப்பதானது தவிர்க்க இயலாததாகிவிடும், இது பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஆக மொத்தத்தில் மேற்குலக வெள்ளைக் கணவான்கள் காட்டும் மனிதநேய முகம் என்பதும் மற்றுமொரு கோரமுகம், அல்லது வெறும் மாயத் தோற்றம் !
4தமிழ்மீடியாவிற்காக: மாதுமையாள்

0 கருத்துகள்: