தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.1.11

காவிக் கொடியவர்களின் கையில் சிக்கி தவிக்கும் தேசியக்கொடி!!


இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களை, படுகொலைகளை எதிர்த்து சுதந்திரத்திற்காக ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் அனைவரும் இரத்தம் சிந்தி போராடும் கஷ்மீரிகளின் உணர்வுகளை புண்படுத்துவதற்காக திட்டமிட்டு பாசிச பா.ஜ.க சங்பரிவார தொண்டர்களை திரட்டிக்கொண்டு ஸ்ரீநகர் சென்று குடியரசு தினத்தன்று (இன்று,26,ஜனவரி.2011) தேசியக்கொடியை ஏற்றப் போவதாக அறிவித்ததை தொடர்ந்து கஷ்மீரில் பதட்டம் நிலவுகிறது.

தேசப்பற்று, தேசியக்கொடி என்ற பெயரில் மீண்டும் சங்பரிவார் கும்பல்கள் இந்திய சிறுபான்மை முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வை பெரும்பான்மை மக்களிடம் விதைக்க ஆரம்பித்துள்ளது.கொடி பிடிக்க காரணமென்ன? அஜ்மீர், மாலேகான், மற்றும் மக்கா மஸ்ஜித்களில் வெடிகுண்டு வைத்து பலரின் உயிரிழப்புக்கு காரணமானது சங்பரிவார்தான் என்று பட்டவர்த்தனமாக அவர்களின் முகமூடி கழற்றியெறியப்பட்டு நிர்க்கதியாய் நிற்கும் இச்சூழ்நிலையில் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக தேசப்பற்று என்ற மற்றொரு முகமூடியணிந்து வந்திருக்கிறது சங்பரிவார்.பா.ஜ.க தலைமையிலான அந்த மதவெறி சக்திகள் இன்று (26,ஜனவரி.2011) காஷ்மீர் ஸ்ரீநகரில் குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடியை ஏற்றப்போவதாக அறிவித்து பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. காக்காய் பிடிப்பதில் வல்லர்களான 'காவி' வந்தேறிகள் ஆங்கில 'வந்தேறிகளோடு' கைக்கோர்த்து பிரிட்டிஷ் ஆண்டைகளின் அடிமைகளாக செயல்பட்ட இவர்களால் 'மூவர்ண தேசியக் கொடி' சுதந்திரப் போராட்ட காலத்தில் ஒருபொழுதும் பிடிக்கப்பட்டதே இல்லை. ஒட்டு மொத்த இந்தியாவே ஆங்கிலேய அரசை எதிர்த்த போது இவர்கள் மட்டும் பிரிட்டிஷாருக்கு வக்காலத்து வாங்கி ஒத்து ஊதினர் என்பது வரலாறு. இந்திய தேசியக் கொடியை கையிழேந்தும் அருகதை சங்பரிவாரத்திற்கு உள்ளதா? என்று வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் உண்மை விளங்கும்.
சுதந்திரத்திற்கு முன்பிருந்தே காவிக் கொடியை தவிர வேறொன்றும் பிடிக்காத கயவர்களுக்கு மூவர்ணக் கொடி அறவே பிடிக்காது. சங்பரிவாரின் ஆங்கில ஊதுகுழலான ஆர்கனைசர் (ஜூலை 17, 1947) இதழில், சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியாக 'மூவர்ண கொடியை தேர்ந்தெடுத்தது பற்றி மிகவும் வருந்தியும் காவிக் கொடிதான் தேர்ந்தெடுக்கபட்டிருக்க வேண்டும் என்றும் முகப்பு கட்டுரை வடித்தது. ஆகஸ்ட் 14 (1947) அன்று எழுதிய மற்றொரு முகப்பு கட்டுரையில் 'மூவர்ணக் கொடியை' பற்றி மிகவும் இழிவாக 'மூன்று என்ற எண்ணே அபசகுனமானது அதனால் மூன்று வர்ணங்களை கொண்ட தேசியக்கொடி பாரதமாதாவிற்கு கேடு விளைவிக்கும்' என்று பூச்சாண்டி காட்டி காவிக் கொடியை தேசியக் கொடியாக அறிவிக்க வேண்டுமென்று பலமுறை முயன்று தோற்றது.

இந்திய சுதந்திரத்திற்கு பிறகு வெளியான கோல்வால்க்கரின் 'சிந்தனை கொத்துக்கள்' என்ற நூலில்கூட தேசியக் கொடியை விமர்சித்து காவிக் கொடியை புகழ்ந்து, இந்தியாவில் வசிக்கும் அனைவரும் ஒருநாள் காவிக்கொடி முன் தலைவணங்க வேண்டிய நிலை உருவாகும் என்று எழுதியிருந்தது. சங்பரிவாரம் நடத்தும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் மூவர்ணக் கொடிக்கு இன்று வரை இடமே கிடையாது. அதன் தலைமையகமான நாக்பூர் அலுவலகத்திலோ அல்லது அது 'ஷாகா' பயிற்சி நடத்தும் மைதானங்களிலோ தேசியக் கொடியை பறக்கவிட்டதே இல்லை. ஆனால் எப்பொழுதெல்லாம் இந்திய முஸ்லிம்களை சீண்டி மதக்கலவரம் உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறதோ அப்பொழுது மட்டுமே சங்பரிவாரின் கண்களுக்கு மூவர்ண தேசியக்கொடி தென்படும்.சில ஆண்டுகளுக்கு முன்பாக ஜோசியத்தை பள்ளிக் கல்லூரிகளில் பாடமாக்க வேண்டும் என்று முன்மொழிந்த முரளிமனோகர் ஜோஷீ தலைமையில் ஸ்ரீநகர் லால்சௌக்கிலும், உமாபாரதி தலைமையில் கர்நாடக ஈத்கா மைதானத்தில் தேசிய கொடியேற்றி கலவரம் விளைவிக்க முயன்றனர். ஹிந்துக்களுக்கு மதவெறி ஊட்ட காவிக் கொடியையும் முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்த மூவர்ணக் கொடியையும் சந்தர்பத்திற்கு தகுந்தாற்போல் பயன்படுத்தி வந்திருக்கிறது. பாப்ரி பள்ளிவாசலை இடிப்பதற்காக அதன் மண்டபங்களின் மீது ஏறிய ஹிந்து வன்முறைகும்பலின் கையில் 'காவி' கொடி இருந்ததை நாமெல்லாம் மறந்திருக்க முடியாது.

ஸ்ரீநகரில் தேசியக்கொடி ஏற்றப்போகிற சாக்கிலே கலவரம் விளைவித்து மத நல்லிணக்கத்திற்கு வேட்டு வைக்க முயலும் காவி பச்சோந்திகள் சட்டத்தை சந்திக்க திராணியில்லாது தாங்கள் செய்த 'காலித் தனத்துக்கு' மூவர்ணம் பூசி தப்பிக்க முயற்சிக்கிறார்கள். அரசியல் ஆதாயம் தேடும் இவர்களின் ஈனச் செயலை இந்திய ஒருமைப்பாட்டில் அக்கறை கொண்டவர்கள் மக்களுக்கு தோலுரித்து காட்டவேண்டும்.

நன்றி : பிறைநதிபுரத்தான்

0 கருத்துகள்: