தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.12.10

எனது கணவரின் தியாகத்தை அவமதிக்காதீர்கள்-காங்.குக்கு கர்கரே மனைவி கடும் கண்டனம்

மும்பை: எனது கணவர் மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்கும், இந்து அமைப்புகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உங்களது வாக்கு வங்கி அரசியலுக்காக எனது கணவரின் தியாகத்தை கொச்சைப்படுத்தி, அவமதிக்காதீர்கள் என்று காங்கிரஸ் கட்சியின் திக்விஜய் சிங்குக்கு மகாராஷ்டிர முன்னாள் தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரேவின் மனைவி கவிதா கர்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மும்பை தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு என்னிடம் கர்கரே பேசினார். அப்போது தனக்கும், தனது குடும்பத்திற்கும் இந்து அமைப்புகளால் ஆபத்து இருப்பதாக கூறியிருந்தார் என்று நேற்று பரபரப்புதகவலை வெளியிட்டிருந்தார் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிங்கின் இந்தப் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியிலும் கூட திக்விஜய் சிங்கின் பேச்சுக்கு கடும் அதிருப்தி எழுந்துள்ளது. இந்த நிலையில் ஹேமந்த் கர்கரேவின் மனைவி கவிதாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், திக்விஜய் சிங்கின் கூற்றை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன். எனது கணவர் உள்பட மும்பை தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த அனைவரையும் கொன்றது பாகிஸ்தான் தீவிரவாதிகள்தான். இதை நான் 100 சதவீதம் நம்புகிறேன், ஏற்கிறேன். திக்விஜய் சிங், இந்த பிரச்சினையை அரசியலாக்க முயலுகிறார். தேவையில்லாமல் இந்துக்களை இந்த பிரச்சினையில் இழுத்து விட்டு அரசியல் லாபம் காண முயலுகிறார். இது வேதனை அளிக்கிறது.

திக்விஜய் சிங் இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே பெரும் விரோதத்தை ஏற்படுத்த முயலுகிறார். அதில் குளிர்காய நினைக்கிறார். இது நிச்சயம் நமது நாட்டுக்கு நல்லதல்ல, பாகிஸ்தானுக்குதான் திக்விஜய்சிங்கின் பேச்சு முழுப் பலனையும் கொடுக்கும்.
Read: In English
மேலும், மும்பை தாக்குதல் சம்பவ விசாரணை கடுமையாக பாதிக்கப்படும் சூழலும் எழுந்துள்ளது. விசாரணையின்போக்கு திசை திரும்பி விடும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. எனது கணவர் நேர்மையானவர், அதேசமயம், யாருக்கும் அஞ்சியவரும் அல்ல. ஒரு இந்துவாக இருந்தாலும், நடுநிலையுடன்தான் அவர் செயல்பட்டார். அனைத்து மதத்தையும் சமமாக கருதியவர் அவர்.

தற்போது அவரது தியாகத்தையும், மரணத்தையும் அவமதிப்பது போல திக்விஜய் சிங் பேசியிருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. மிகவும் மோசமாக உணர்கிறேன். எனது குழந்தைகள் இப்போது வெளிநாடுகளில் உள்ளனர். சமயங்களில் இங்கு நடப்பதைப் பார்க்கும்போது பேசாமல் அவர்களுடன் போய் செட்டிலாகி விடலாமா என்று கூட எனக்கு விரக்தி ஏற்படுகிறது என்றார் கவிதா.

0 கருத்துகள்: