தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.1.11

திருவாரூர் அருகே கம்யூ. பிரமுகர் வெட்டிக்கொலை; கடை-வீடுகளுக்கு தீவைப்பு; பஸ்கள் ஓடவில்லை

திருவாரூர், ஜன. 20-
திருவாரூர் அருகே கம்யூனிஸ்டு பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.   திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியைச் சேர்ந்தவர் நாவலன். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளராக இருந்து வந்தார். நேற்று நாகையில் நடை பெற்ற கட்சி கூட்டத்தில் நாவலன் கலந்து கொண்டார். இரவு 7.30 மணிக்கு பேரளத்துக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டு இருந்தார். அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ராஜா (40) என்பவரும் சென்றார்.
பேரளம் அருகே மாங்குடி என்ற இடத்தில் சென்ற போது எதிரே மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் நாவலனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் சம்பவ இடத்திலேயே நாவலன் இறந்தார். அவருடன் வந்த ராஜா அதிர்ச்சி அடைந்து தப்பி ஓடி விட்டார்.   நாவலன் கொலையுண்ட தகவல் பரவியதும் பேரளம் பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. கடைவீதியில் இருந்த கடைகள் மற்றும் வீடுகளுக்கு நாவலனின் ஆதரவாளர்கள் தீ வைத்தனர். அந்த வழியாக வந்த 3 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு மயிலாடுதுறை - காரைக்கால் ரோட்டில் நாவலனின் ஆதரவாளர்கள் ரோட்டின் குறுக்கே மரங்களை வெட்டிப் போட்டனர். பேரளம்-காரைக்கால் ரோட்டிலும், பேரளம்- கொல்லு மாங்குடி ரோட்டிலும் ஆங்காங்கே மரங்களை வெட்டிப் போட்டு போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தினர். இதனால் மயிலாடுதுறை- காரைக்கால், மயிலாடுதுறை-திருவாரூர், பேரளம்-கும்பகோணம் மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
பேரளம் பகுதியில் பதட்டம் நிலவியதால் நேற்று இரவு முதல் பஸ்கள் ஓட வில்லை. இன்று காலையிலும் பஸ்கள் செல்லவில்லை. இதனால் பேரளம் பஸ் நிலையம் வெறிச்சோடியது.   பேரளம் பகுதியைச் சேர்ந்த சாராய வியாபாரி பன்னீர் என்பவருக்கும் நாவலனுக்கும் முன் விரோதம் இருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் இருதரப்பினரும் மோதிக் கொண்டனர். அப்போது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. இதில் கட்டிட தொழிலாளி விஜி என்பவர் இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பன்னீர் உள்பட 12 பேர் மீதும், நாவலன் உள்பட 26 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் நாவலன் நேற்று மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளார். சாராய வியாபாரி பன்னீர் ஆட்களால் நாவலன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பேரளம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த இடுகை(post)தங்களை கவர்ந்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

0 கருத்துகள்: