தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.9.11

இஸ்ரேலில் லட்சக்கணக்கானோர் பிரமாண்ட பேரணி


இஸ்ரேலில், விலைவாசி உயர்வைக் கண்டித்து, நேற்று முன்தினம் இரவு, நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் நடந்தன.
மத்திய கிழக்கின் மிக முக்கிய நாடான இஸ்ரேல், மொத்தம் 77 லட்சம் மக்கள் தொகை கொண்டது. 5.5 சதவீதம் வேலையில்லாத் திண்டாட்டம் அங்கு உள்ளது. அங்கு, தற்போது பொருளாதார வளர்ச்சி அதிகரித்து
வருவதால், கட்டுமானத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ஏற்றம் காணப்படுகிறது. அதேநேரம், வாடகை வீடு, சொந்த வீடு இவற்றின் செலவுகள், சராசரி இஸ்ரேலியனால் சமாளிக்க முடியாத அளவுக்கு எகிறியுள்ளன. கடந்த ஜூலை மாத நடுவில், விண்ணை முட்டும் விலைவாசியை எதிர்த்து, நாடு முழுவதும் போராட்டங்கள் துவங்கின.
இந்நிலையில், நேற்று முன்தினம் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம், ஹைபா உள்ளிட்ட முக்கிய நகரங்களில், நேற்று நான்கு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர். வீடு, உணவு மற்றும் கல்வி ஆகிய முக்கியத் துறைகளில், எகிறி வரும் விலைவாசியைக் குறைக்க வேண்டும் என்பதுதான், மக்களின் முக்கியக் கோரிக்கையாக இருந்தது. "வரியைக் குறைக்க வேண்டும், இலவசக் கல்வி அளிக்க வேண்டும், அரசு செலவில் வீடுகள் கட்டித் தர வேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள், மக்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த பேரணியில் மாணவர் ஒன்றிய தலைவர் இட்சிக் ஷ்முயேலி பேசுகையில், எங்களை இந்த நாட்டில் வாழ விடுங்கள் என்று பிரதமரை கேட்டுக்கொண்டார். எங்களுக்கு தேவை ஒன்றே ஒன்று தான், அது இந்த நாட்டில் வாழ வேண்டும் என்பது தான். இந்த நாட்டை நேசிப்பதை தவிர, இந்த நாட்டில் கவுரவமாக வாழவேண்டும் என்பதும் எங்கள் ஆசையாகும் என்றும் அவர் கூறினார்.
கடந்த வாரங்களில் நடந்த, இதுபோன்ற தொடர் போராட்டங்களால், மக்களின் கோரிக்கைகளை ஆராய்ந்து, அரசுக்குப் பரிந்துரை செய்ய ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. ஆனால், மக்கள் வைத்துள்ள அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாது என, பிரதமர் நேடான் யாகு தெரிவித்துள்ளார்.
வெளியில் இருந்து பார்க்கும்போது, இஸ்ரேல் பொருளாதார வளர்ச்சியில் இருப்பதாகத் தெரிந்தாலும், நாட்டின் வளங்கள் அனைவருக்குமாக பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பதே, இஸ்ரேலியர்களின் முக்கியக் குற்றச்சாட்டு. ஏற்கனவே, லிபியா, சிரியா போன்ற நாடுகளில் நடந்து வரும் மக்கள் எழுச்சிக்கு மத்தியில், இஸ்ரேலிலும் அதுபோன்ற சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக உள்ள அரசு, இதுகுறித்த நடவடிக்கைளை விரைந்து எடுக்க முயன்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: