தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.6.11

ஏமன் அதிபர் சலேக்கு சவுதியில் அவசர சிகிச்சை


ரியாத், ஜூன்.5- அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் நடத்திய ராக்கெட் வீச்சில் படுகாயமடைந்துள்ள ஏமன் அதிபருக்கு சவுதி அரேபியாவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்குப் பின்னர் அவர் நாடு திரும்புவதும் சந்தேகமே என்று தெரிகிறது.
ஏமனில் அதிபர் அலி அப்துல்லா சலே (69) பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை அடக்க ராணுவத்தை ஏவி விட்டுள்ளார் அதிபர். இந் நிலையில் இரு தினங்களுக்கு முன் அவரது அரண்மனை மீது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பழங்குடியினர் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்கினர். இதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

அதிபர் சலேவின் மார்புப் பகுதியில் ஒரு இரும்புத் துண்டு பாய்ந்தது. மேலும் முகம், மார்பில் தீக் காயங்களும் ஏற்பட்டுள்ளன. படுகாயததுடன் அவர் உயிர் தப்பினாலும் உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது.
ஆனால், ஏமனில் எந்த மருத்துவமனையில் போய் சிகிச்சைக்கு சேர்ந்தாலும், அந்த மருத்துவமனையும் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது. இதையடுத்து அவருக்கு சவுதி அரேபியாவில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.
நேற்று அவர் சவுதி அரேபியாவின் ரியாத் நகருக்கு தனி விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார். மற்றொரு விமானத்தில் அவரது குடும்பத்தினரும் சென்றனர். ரியாத் நகரில் சவுதி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிகிச்சைக்கு பின் அவர் ஏமனுக்கு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சலே நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என்றும் ஏமன் அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து துணை அதிபர் அப்தெல் மன்சூர் ஹாதி தற்போது அதிபர் பொறுப்பை கவனித்து வருகிறார். ஆனால, சலே திரும்பி வரும் முன்னரே அங்கு பழங்குடியினத்தைச் சேர்ந்த ராணுவ தளபதிகளில் யாராவது ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. தனது குடும்பத்தினரையும் சவுதிக்கு அழைத்துக்கொண்டதால், சலே நாடு திரும்புவாரா என்பதே சந்தேகமாகியுள்ளது.

0 கருத்துகள்: