தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.5.11

ராணுவ பயிற்சி மையம் முன்பு 2 தற்கொலை படை தாக்குதல்: 73 பேர் பலி; 100 பேர் படுகாயம்


இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நேற்று ராணுவ பயிற்சி மையத்தின் முன்பு தீவிரவாதிகள் நடத்திய 2 தற்கொலை தாக்குதல்களில் 73 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன், அமெரிக்க படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். பின்லேடன் மரணத்திற்கு
காரணமான பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை பழி வாங்குவோம் என்று தலீபான் தீவிரவாதிகளும், மற்ற தீவிரவாத அமைப்புகளும் கூறி வருகின்றன.
இந்த நிலையில், நேற்று காலை பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் அருகே ஷப்காதர் என்ற இடத்தில் அமைந்துள்ள ராணுவ பயிற்சி மையத்தின் முன்பு தற்கொலைப் படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
தாக்குதல் நடத்தப்பட்ட ராணுவ பயிற்சி மையத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அவர்கள் அனைவரும் கடந்த 5-ந் தேதிதான் தங்களுடைய பயிற்சியை முடித்தனர். நேற்று காலை அவர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஓய்வில், அவரவர் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
பயிற்சி மையத்தின் வாசலில் இருந்து அவர்கள் அனைவரும் வெளியேறிக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக நடந்து வந்த, தற்கொலை தீவிரவாதி ஒருவன், தனது உடலில் கட்டி வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இதில், சந்தோஷமாக வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த ராணுவ வீரர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
அந்த பகுதி முழுவதும் ராணுவ வீரர்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறி, பிணக் குவியல்களாக கிடந்தன. அந்த உடல்களை மற்ற ராணுவத்தினர் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், முதல் தாக்குதல் நடந்து சுமார் 8 நிமிட இடைவெளியில், அந்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலை தீவிரவாதி ஒருவனும், தான் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.
இந்த 2 தற்கொலை தாக்குதல்களிலும், 73 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் பயிற்சி முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த ராணுவ வீரர்கள் ஆவார்கள்.
காயம் அடைந்த ராணுவத்தினர் அனைவரும், பெஷாவர் மற்றும் ஷப்காதர் நகரில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 20 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
இந்த தற்கொலை தாக்குதல்களுக்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெரிக்-இ-தலீபான் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இந்த தாக்குதலானது, தீவிரவாதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பழிக்குப்பழி என்றும், இதுபோன்ற தாக்குதல்கள் இன்னும் தொடரும் என்றும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது. பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு பாகிஸ்தானில் நடைபெற்ற முதல் மிகப்பெரிய தாக்குதல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: