தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.11.11

அப்சல் குரு தூக்கு ரத்து கருத்து தேசதுரோகம் இல்லை - உயர் நீதிமன்றம்!


"அப்சல் குருவின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று  காஷ்மீர் முதலமைச்சர் தெரிவித்த கருத்து தேசதுரோகம் இல்லை" மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி தீர்ப்பு கூறியுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.நீலமேகம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில்,"ராஜீவ்காந்தி கொலையாளிகளான சாந்தன், முருகன்,
பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனைக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தமிழக சட்டமன்றத்திலும் சாந்தன் உள்ளிட்ட 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை விமர்சித்து காஷ்மீர் முதல் அமைச்சர் உமர் அப்துல்லா கடந்த 31.8.2011ல் பேஸ் புக் இணையதளத்தில், 'தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தைப் போன்று, காஷ்மீர் சட்டமன்றத்தில் அப்சல்குருவின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினால் பொதுமக்கள் கண்டுகொள்ளாமல் இருப்பார்களா?' என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

உமர் அப்துல்லாவின் இந்தப் பொறுப்பற்ற அறிக்கை நாடு முழுவதும் எதிர்விளைவை ஏற்படுத்தி உள்ளது. இதன்மூலம் நாட்டின் ஒற்றுமை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உமர் அப்துல்லா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2.9.2011 ல் தென்மண்டல காவல்துறை ஐ.ஜிக்கு மனு அனுப்பினேன். அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஆகியோரிடம் இருந்து சட்டக்கருத்துக்களைப் பெற்று உமர்அப்துல்லா மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறை ஐ.ஜிக்கு உத்தரவிட வேண்டும்"
என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கே.சந்துரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும்,
"மனுதாரர் தனது புகாரைச் சம்பந்தப்பட்ட காவல்துறை துணை ஆய்வாளரிடம் அளித்து இருக்க வேண்டும். ஆனால் அவர் தனது புகாரை நேரடியாக காவல்துறை ஐ.ஜியிடம் அளித்துள்ளதாக கூறி உள்ளார். ஆனால் ஐ.ஜியிடம் புகார் கொடுத்ததற்கு எந்தவித ஆதாரங்களையும் மனுதாரர் தாக்கல் செய்யவில்லை.

துணை ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாற்றுத் தீர்வுகள் உள்ளன. உமர்அப்துல்லா தனது வலைதளத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கள் அவதூறு ஏற்படுத்தும் வகையிலோ, தேசத்துக்குத் துரோகம் விளைவிக்கும் வகையிலோ இல்லை"
என்று நீதிபதி தன் தீர்ப்பில் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்: