நைஜீரியா கடற்கரை பகுதியில் இந்திய மாலுமிகளுடன் எண்ணெய் கப்பலை கடற் கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர்.நைஜீரியா பகுதியில் கடல் கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. அங்குள்ள ஹர்கோர்ட் துறைமுகம் அருகே நேற்று முன்தினம் 'ஹலிபாக்ஸ்' என்ற எண்ணெய் கப்பல் சென்று
கொண்டிருந்தது. அது, கிரீஸ் நாட்டைச் சேர்ந்த அன்கோரா என்ற கப்பல் நிறுவனத்துக்கு சொந்தமான கப்பல் ஆகும்.
ஹர்கோர்ட் பகுதியில் கப்பல் சென்றபோது பயங்கரமான ஆயுதங்களுடன் கடல் கொள்ளையர்கள் முற்றுகையிட்டனர். மேலும், கப்பலை சிறைப்பிடித்து கைனா வளைகுடா நோக்கி கொண்டு சென்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து நைஜீரிய கடற்படையினர் விரைந்து சென்றனர். ஆனால், அவர்களால் கடல் கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை.
கடத்திச் செல்லப்பட்ட கப்பலில் இரண்டு இந்தியர்கள், ஒரு இத்தாலியர், பிலிப்பைன்சை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட மாலுமிகள் இருந்தனர். மற்றவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. அதுபோல, இந்திய மாலுமிகள் பற்றிய முழு விவரங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இதுபோன்ற சரக்கு கப்பல்களை பிடித்துச் சென்றால் சரக்கு முழுவதையும் எடுத்த பிறகே கப்பலை கொள்ளையர்கள் விடுவிப்பது வழக்கம். இதுபோலவே, இந்த கப்பலையும் இன்னும் ஒரு வாரத்துக்குள் கொள்ளையர்கள் விடுவிக்கலாம் என தனியார் கடல் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்தது. இதே பகுதியில் கடந்த ஜூலை மாதம் 20 மாலுமிகளுடன் கிரேக்க எண்ணெய் கப்பலை கடல் கொள்ளையர்கள் கடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக