புதுடில்லி : "ஒன்றுபட்ட ஆந்திர மாநிலமே நீடிக்கலாம் என்றும், ஆந்திராவை இரண்டாக பிரிக்கலாம் என்ற பரிந்துரைகளை ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி தெரிவித்துள்ளதால், தனி தெலுங்கானா விவகாரத்தில் அரசியல் கட்சிகள் இடையே கருத்து ஒற்றுமை இல்லை. வேறுபாடு துவங்கியுள்ளது. இதனால், மேலும் குழப்பமான நிலைமையே உருவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
"ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும்'என்பது, தெலுங்கானா பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை. இதை வலியுறுத்தி, அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஐந்து பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி, ஆந்திராவுக்கு 28 முறை சுற்றுப் பயணம் செய்து, அரசியல் கட்சிகள், அமைப்புகள், பொதுமக்களிடம் கருத்தை கேட்டது. அதன் அடிப்படையில் அறிக்கையை தயார் செய்து, கடந்த மாதம் 30ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் அறிக்கை அளிக்கப்பட்டது. இந்நிலையில், உள்துறை அமைச்சர் சிதம்பரம், உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை உள்ளிட்டோருடன் ஆந்திர அரசியல் கட்சிகள் நேற்று ஆலோசனை நடத்தின. தெலுங்கு தேசம், டி.ஆர்.எஸ்., - பா.ஜ., ஆகிய கட்சிகள் இதில் பங்கேற்கவில்லை. காங்கிரஸ், பிரஜா ராஜ்யம், இடதுசாரி கட்சிகள் ஆகியவை மட்டுமே பங்கேற்றன. இதன்பின், ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அளித்த 461 பக்க அறிக்கையின் நகலை, உள்துறை அமைச்சர் சிதம்பரம் வெளியிட்டார். அதில் கீழ்கண்ட ஆறு முக்கிய பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.
1. தற்போது இருப்பதை போலவே, ஆந்திரா ஒரே மாநிலமாக இருக்கலாம். தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவருக்கு முதல்வர் அல்லது துணை முதல்வர் பதவி தரலாம். தெலுங்கானா பகுதியை மேம்படுத்துவதற்காக, சட்ட ரீதியான சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை கணக்கில் கொண்டு பார்க்கும்போது, ஒருங்கிணைந்த ஆந்திராவே சிறந்ததாக உள்ளது.
2. ஆந்திராவை சீமாந்தரா, தெலுங்கானா என, இரண்டு மாநிலங்களாக பிரிக்கலாம்.
3. தெலுங்கானா பிராந்திய கவுன்சிலை உருவாக்க அதிகாரம் அளிக்கும் வகையிலான சட்டத்தை அரசு இயற்றலாம்.
4. ஆந்திராவை இரண்டாக பிரிக்கும்போது, ஐதராபாத்தை யூனியன் பிரதேசமாக்கலாம். இரண்டு புதிய மாநிலங்களுக்கும், தனித், தனி தலைநகரங்களை உருவாக்கலாம்.
5. ஆந்திரா, தெலுங்கானா என, இரண்டு மாநிலங்கள் உருவாக்கும்போது, ஐதராபாத்தை தெலுங்கானாவின் தலைநகராக அறிவிக்கலாம்.
6. ஆந்திராவை ராயல் - தெலுங்கானா, கடலோர ஆந்திரா என இரண்டு மாநிலங்களாக பிரிக்கலாம். அப்போது, ஐதராபாத்தை ராயல் தெலுங்கானாவின் தலைநகராக அறிவிக்கலாம்.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது: ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி, ஆறு பரிந்துரைகளை தெரிவித்துள்ளது. இவற்றில் முதல் மூன்று பரிந்துரைகளை செயல்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியமற்றது என, கமிட்டியே அவற்றை நிராகரித்துள்ளது. கமிட்டியின் இந்த அறிக்கையை அனைத்து அரசியல் கட்சிகளும் கவனமுடன் ஆய்வு செய்ய வேண்டும். உடனடியாக எந்த முடிவுக்கும் வந்து விடக் கூடாது. நான் அழைப்பு விடுத்த கூட்டத்துக்கு, சில அரசியல் கட்சிகள் பங்கேற்கவில்லை. இது வருத்தம் அளிக்கிறது. தெலுங்கானா விவகாரம் தொடர்பாக இந்த மாதத்திற்குள் மீண்டும் அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தி, ஆலோசிக்கப்படும். இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் பரிந்துரையால், பரவலாக கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், தெலுங்கு தேசம், பா.ஜ., - தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகள், தனித் தெலுங்கானா மாநிலம் அமைய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. தனித் தெலுங்கானாவை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சந்திரசேகர ராவ் நேற்று அறிவித்தார். இந்த அறிக்கை குழப்பமானது, ஏற்கமுடியாதது என்று பா.ஜ., கூறியிருக்கிறது. ஏற்கனவே மத்திய அரசு உறுதி கூறியபடி தனித் தெலுங்கானா அமைக்க சட்டம் இயற்றாமல் தாமதப்படுத்தும் முயற்சி என்று கூட்டு நடவடிக்கை குழு அறிவித்திருக்கிறது. தெலுங்கானா மோதல் மீண்டும் ஆந்திராவில் துவங்கிவிட்டது.