"தீவிரவாத குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றவாளியான அசிமானந்தாவுடன் பாஜகவுக்கோ சங்கபரிவாரங்களுக்கோ எவ்வித தொடர்பும் இல்லை" என பாஜக தலைவர் நிதின் கட்காரி கேரள பத்திரிக்கையாளர்களிடையே பேசும் போது தெரிவித்துள்ளார்.
கேரளத்திலுள்ள பாஜக தலைமையகத்தில் கேரள பத்திரிக்கையாளர்களுக்கு மட்டுமேயான தனிப்பட்ட சந்திப்பு ஒன்றைப் பாஜக தேசிய தலைவர் நிதின் கட்காரி நடத்தினார். இதில், "குஜராத் மாடலில் கேரளத்தை முன்னேற்றும் வகையில் திட்டங்கள் அறிவிப்பதன் மூலம் 8 சதவீதம் வரை பாஜக ஓட்டு வங்கியை அதிகரித்து, 5 எம்.எல்.ஏக்களையாவது வருகின்ற கேரள சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெறும். இதற்கென கட்சி, தேசிய நிலைபாடுகள் எடுக்கும்.
கேரளத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் தலைமை வகிக்கும் இரு கூட்டணிகளுக்கு எதிராகத் தனித்து நிற்க பாஜக முடிவு செய்துள்ளது. பாஜகவைச் சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்று காங்கிரஸ் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. இது தவறான பிரச்சாரமாகும். நாட்டில் வாஜ்பாய் தலைமையிலான அரசே சிறுபான்மையினருக்கு அதிக முன்னேற்றத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. பீகார் தேர்தலில் முஸ்லிம்கள் காங்கிரஸ் கட்சியைக் கைகழுவி விட்டதாலேயே காங்கிரஸ் இவ்வாறான தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.
சிறுபான்மை மக்களோடு பாஜகவுக்கு எவ்வித விரோதமும் இல்லை. பாஜக, சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. தீவிரவாத குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றவாளியான அசிமானந்தாவுடன் பாஜகவுக்கோ சங்கபரிவாரங்களுக்கோ எவ்விதத் தொடர்பும் கிடையாது" என்று கட்காரி கூறினார்.
"குஜராத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக மோடி அரசு நடத்திய அராஜகங்களைக் குறித்து" பத்திரிக்கையாளர்கள் இடைமறித்து கேள்வி எழுப்பினர். அப்போது,
"குஜராத்தில் நடந்தவை வருந்தத்தக்க நிகழ்வுகளே. ஆனால் அதே சமயம் அதுதொடர்பாக செய்திகளில் வந்தவைகளில் மிகப்பெரும்பான்மையான சம்பவங்களும் பத்திரிக்கைகளின் தவறான மிகைப்படுத்தல்களாகும். குஜராத்தில் 30 சதவீத முஸ்லிம்களும் பாஜகவுக்கே ஓட்டளித்துள்ளனர்" என்று பதிலளித்தார்.
"தீவிரவாத்தைத் தீவிரவாதமாகவும் குற்றவாளிகளைக் குற்றவாளிகளாகவுமே காணப்படவேண்டும். ஜாதி, மதத்தின் பெயரால் பிரிவினை ஏற்படுத்தி ஓட்டு வங்கியை உருவாக்க காங்கிரஸ் முயல்கிறது" என்று அவர் மேலும் கூறினார். இந்த இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி