
ராமநாதபுரம் : விடுமுறையை கழிக்க தீவுக்கு உல்லாச பயணம் சென்றவர்களின் படகு கவிழ்ந்தது. இச்சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் சிலரின் கதி என்னவானதென்று தெரியவில்லை. சுனாமி நினைவு நாளில் ராமநாதபுரம் அருகே இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக் கொண்டு சென்றதே, படகு கவிழக் காரணம் எனக் கூறப்படுகிறது.
ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தைச் சேர்ந்தவர் அப்துல் குத்தூஸ். ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இவர், கடந்த வாரம் திருமணம் ஒன்றுக்காக தனது குடும்பத்தாருடன் பெரியபட்டினம் வந்தார். வந்த இடத்தில், உறவினர்களுடன் அருகில் உள்ள முல்லித்தீவிற்கு சுற்7றுலா செல்ல தயாராகினர்.இரண்டு வேன்களில் அருகில் உள்ள முத்துப்பேட்டை கடற்கரைக்கு சென்றவர்கள், அங்கிருந்த பெரியபட்டினத்தைச் சேர்ந்த ஐயூபு கான், ரசூல் என்பவர்களுக்கு சொந்தமான படகுகளில் முல்லித்தீவிற்கு கிளம்பினர்.ரசூல் படகில், பிரியாணி தயாரிக்கத் தேவையான பொருட்கள், காஸ் அடுப்பு, சிலிண்டர், இரண்டு ஆடுகளுடன், 15 ஆண்கள் சென்றனர். ஐயூபு கானின் படகில் பெண்கள், குழந்தைகள் என, 38 பேர் சென்றுள்ளனர். பெண்கள், குழந்தைகள் சென்ற படகு தீவுக்கு முன், ஒரு கி.மீ., தூரத்தில் நிலைதடுமாறி மூழ்கியது. படகை ஓட்டிச் சென்ற ஐயூபு கான், ஹாஷரத்(16) ஆகியோர் நீந்தி, முன்னால் சென்ற படகிற்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், மீட்புக் குழுவினர் விரைந்து சென்றனர். படகு முழுவதும் மூழ்கிய நிலையில், இரு பலகைகள் மட்டுமே சம்பவ இடத்தில் மிதந்தன. சிறிது தூரத்தில் மிதந்து கொண்டிருந்த அப்துல் குத்தூஸ் மனைவி சலிமா பீவி(48), சலாவுதீன் மனைவி மர்லியா(42), இபுனு மகள் நாதீரா(7), குத்தூஸ் தங்கைகள் பரகத்(37), ஹமீதா நிஷா(38), பெரியபட்டினத்தைச் சேர்ந்த சீனி முகமது மனைவி பிரிதவ் பானு(40), சீனி ஊர்து மனைவி பர்சானா(35), அஜ்மல் கான் மகள் ஹர்ஷதா(15), ஜாஹிர் மகள் மகுபு(16), சதகத்துல்லா மனைவி அலிமுத்து(45), சாகுல் ஹமீது மகள் முஸ்பிலிகா(12), கீழக்கரை தெற்குத் தெருவைச் சேர்ந்த சீனி மகன் கலீல்(11), சீனி முகமது மகன் அப்துல் வஹாப்(12) ஆகியோரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன.பெயர் தெரிந்த சீனி முகமது மகள் நஜியா(18), ரஹிமா(13) மற்றும் சிலரின் நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை. இறந்தவர்களின் சடலங்களை உறவினர்கள் கைப்பற்றி வீடுகளில் வைத்து பூட்டினர். பிரேத பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்து, அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுத்தனர்.கலெக்டர் ஹரிஹரன், டி.ஐ.ஜி., அமல்ராஜ், எஸ்.பி., பிரதீப்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு பேச்சு வார்த்தை நடத்தியும் அவர்கள் பெயர் விவரங்கள் உட்பட எந்த தகவலையும் கூற மறுத்து விட்டனர்.
விபத்து நடந்தது எப்படி?பெரியபட்டினம் பகுதியிலிருந்து அருகில் உள்ள தீவுகளுக்கு அடிக்கடி சுற்றுலா செல்வது வழக்கமாக நடந்து வருகிறது. அனுமதியில்லாமல் 2,000 ரூபாயில் மேற்கொள்ளும் இப்பயணத்திற்கு நாட்டுப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. முல்லித்தீவு செல்லும் வழி வழக்கமாக 15 அடி ஆழத்தில் இருக்கும்.விபத்து நடந்த பகுதியில் மட்டும் 30 அடி ஆழம் இருக்கும். படகு இப்பகுதியை நெருங்கியதும், லேசாக குலுங்கியுள்ளது. மிரண்டு போன பெண்கள், ஒருவருக்கு ஒருவர் பிடித்துக் கொண்டு ஒரே இடத்தில் திரண்டுள்ளனர். விபத்துக்குள்ளான படகு பலவீனமாக இருந்ததாலும், பதட்டத்தில் படகின் இன்ஜினை "ஆப்' செய்ய தவறியதாலும் கவிழ்ந்ததுஅதிகாரிகளை புலம்ப வைத்த மக்கள் : அதிகாரிகள் வருவதற்கு முன்னரே உடல்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், அவற்றை கைப்பற்றிய உறவினர்கள் வீடுகளில் வைத்து பூட்டினர். அதன் பின் வந்த கலெக்டர், அமைச்சர், எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தியும், பிரேத பரிசோதனைக்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். "அரசின் சட்ட திட்டங்களுக்கு ஒத்துழைக்குமாறு' சம்பந்தப்பட்ட ஜமாத்தார்களிடம் வலியுறுத்தி சென்றனர்.
அதிகாரிகள் பதில் என்ன? கலெக்டர் ஹரிஹரன் குறிப்பிடுகையில், "சம்பவத்திற்கு காரணமானவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால், உடனே நடவடிக்கை எடுப்பது சரியாக இருக்காது. தீவுப் பகுதிகளுக்கு சென்றது குறித்து வனத்துறையினர் விசாரிப்பர். அடிக்கடி பலரும் தீவுகளுக்கு செல்வதாக கூறுவது தவறானதாகும்' என்றார்.
எஸ்.பி., பிரதீப்குமார் கூறுகையில், "விபத்து நடந்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் நிலை தெரியவில்லை; விசாரித்து வருகிறோம்' என்றார்.
விபத்தில் சிக்கிய படகில் சென்ற ஹாஷரத் என்ற சிறுவன் குறிப்பிடுகையில், "எனது அம்மா என் கண் முன்னே மூழ்கி பலியானார். எனக்கு நீச்சல் தெரிந்ததால் நீந்தி தீவுக்குச் சென்றேன். படகு மூழ்கிய மறுநொடியே அனைவரும் மூழ்கினர். சிறுவர்கள் நிறைய பேர் மூழ்கி விட்டனர்' என்றான்.
படம்-நன்றி: தினமலர்