தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.12.10

ஜிஎஸ்எல்வி 2வது முறையாக தோல்வி-ராக்கெட் வெடித்துச் சிதறியது


சென்னை: தொலைக்காட்சி, தொலை மருத்துவம் மற்றும் தொலைக் கல்வி போன்றவற்றை மேம்படுத்தும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறை இஸ்ரோ அதிக எடை கொண்ட ஜிசேட் 5 பி- செயற்கைக் கோளை செலுத்தும் முயற்சி இன்று தோல்வியில் முடிந்தது.

ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்பட்ட சில விநாடிகளிலேயே ராக்கெட் வெடித்துச் சிதறியது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்டும் தோல்வியில் முடிவடைந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இஸ்ரோவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்திலிருந்து மாலை 4 மணிக்கு ராக்கெட் ஏவப்பட்டது. ஏவப்பட்ட சில விநாடிகளிலேயே ராக்கெட் வெடித்துச் சிதறியது. முதல் கட்டத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் ராக்கெட் ஏவுதல் தோல்வியில் முடிவடைந்தது.

கடந்த ஆண்டு இந்திய தொழில்நுட்பத்தில் உருவாகி தோல்வியடைந்த ஜிஎஸ்எல்வி - டி 3-க்குப் பிறகு, நடந்த ஜிஎஸ்எல்வி முயற்சி இது.

இந்த ஜிசாட் 5 பி செயற்கைக் கோள் 24 சி பேண்ட் ட்ரான்பாண்டர்கள் மற்றும் 12 விரிவாக்கப்பட்ட சி பேண்ட்கள் கொண்டது. தொலைக்காட்சி சேவையை மேம்படுத்தவும், தொலைக் கல்வி மற்றும் தொலை மருத்துவம் போன்ற வசதிகளை சிறப்பாக அளிக்கவும் இந்த செயற்கைக் கோள் பயன்பட்டிருக்கும்.

ரஷ்யாவின் கிரயோஜெனிக் எஞ்ஜின் மூலம் இந்த முறை ஜிஎஸ்எல்வி இயக்கப்பட்டது.

12 ஆண்டுகள் இயங்கக்கூடிய வகையில், பெங்களூர் இஸ்ரோ சாட்டிலைட் மையத்தில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக் கோள், ஜிசாட் வரிசையில் தயாரான 5வது செயற்கைக் கோள் ஆகும்.

கடந்த டிசம்பர் 20-ம் தேதி செலுத்த உத்தேசித்து பின் தள்ளிப்போடப்பட்டது இந்த செயற்கைக் கோள்.

ஜிஎஸ்எல்வி ராக்கெட் முயற்சி தொடர்ந்து 2வது முறையாக தோல்வியில் முடிந்திருப்பது இந்திய விண்வெளித் திட்டங்களுக்குப் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதில் நாம் சிறப்பான வெற்றியைப் பெற்றால்தான் நம்மால் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்துவது எளிதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை நாமே ஏவும் திட்டத்திற்கும் இது பெரும் முட்டுக்கட்டையாக மாறியுள்ளது.

ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் இடம் பெற்றிருந்த ஜிசாட்-5பி செயற்கைக் கோள் ரூ. 125 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

0 கருத்துகள்: