உச்ச நீதிமன்றத்தின் இக்குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அலகாபாத் உயர் நீதமன்றத்தின் சார்பில் விளக்கம் கேட்டு உயர் நீதிமன்றத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.பி. ராவ் வாதாடினார். அலாகாபத் உயர் நீதிமன்றத்தில் உள்ள பல நல்ல நீதிபதிகளும் தற்போது சந்தேக வட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் நீதிபதிகளின் நம்பகத் தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதற்கு கோபமுடன் பதில் அளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி மர்கண்டேய கட்ஜு, அனைத்து விஷயங்களையும் கூறிக் கொண்டிருக்காதீர்கள். நானும் எனது குடும்பத்தினரும் 100 ஆண்டுகளுக்கு மேலாக அலகாபாத் உயர் நீதிமன்றத்துடன் தொடர்பில் இருந்து வந்தவர்கள்தான். எந்த நீதிபதி கறைபடிந்துள்ளார். எவர் நேர்மையானவர் என்பது மக்களுக்குத் தெரியும். எனவே இவை பற்றியெல்லாம் என்னிடம் கூறாதீர்கள் என்று கூறினார்.
நாளை மர்கண்டேய கட்ஜு லஞ்சம் வாங்கினால், நாடு முழுவதும் நான் லஞ்சம் வாங்கியது வெளியில் தெரிந்துவிடும். எனவே எவர் நேர்மையானவர்; எவர் கறை படிந்துள்ளவர் என்பது போன்று என்னிடம் கூற வேண்டாம் என்றும் கட்ஜு கூறினார்.
உச்ச நீதிமன்றத்தின் முந்தைய கருத்து முழு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நடத்தையையே கேள்விக்குட்படுத்தி இருப்பதால், கிராமப்புற மக்களுக்கு நேர்மையான நீதிபதி யார், கறைபடிந்த நீதிபதி யார் என்ற வேறுபாடு தெரியாது. எனவே இது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று ராவ் கேட்டிருந்தார்.
கிராமப்புற மக்கள் குறித்தெல்லாம் என்னிடம் கூறிக் கொண்டிருக்காதீர்கள். அவர்கள் இப்போது மிகவும் தெளிவாக உள்ளனர். இந்திய மக்கள் முட்டாள்கள் என்று எண்ணிக் கொண்டிருக்க வேண்டாம் என்று கட்ஜு பதில் அளித்தார்.
கடந்த நவம்பர் 27ஆம் தேதி உத்திரப் பிரதேச மாநிலம் பரைச் என்ற ஊரில் வக்ஃப் வாரியத்திற்குச் சொந்தமான நிலத்தை, ஒவ்வோர் ஆண்டும் மே மற்றும் ஜூன் மாதத்தில் நடைபெறும் சர்கஸ் காட்சி நடத்துவதற்கு ஒதுக்குமாறு அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு எதிராக கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்திருந்தனர்.
"டென்மார்க நாட்டில் ஏதோ அரசியல் கறைபடிந்துள்ளது" என்று ஷேக்ஸ்பியர் தம்முடைய நாவலான ஹேம்லெட்டில் கூறியுள்ளார். அதுபோல, அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஏதோ கறை படிந்துள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு மற்றும் கியான் சுதா மிஷ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிமன்றம் கூறியிருந்தது. "அலகாபாத் உயர் நீதிமன்றத்தை சுத்தப்படுத்த வேண்டும்" என்றும் அவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.