பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானியின் ஜாமீன் மனு மீதான விசாரணையைக் கர்நாடகா உயர் நீதிமன்றம் மூன்றாம் முறையாக தள்ளிவைத்தது.
ஜாமீன் மனுக்கு எதிரான எதிர்ப்பு மனு தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞர் மேலும் கால அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து, மேலும் 10 நாட்கள் அரசு தரப்புக்கு நீதிமன்றம் கால அவகாசம் அளித்து விசாரணையை வரும் 16 ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தது.
நாசர் மதானியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது அரசு சார்பாக எதிர்ப்பு மனு தாக்கல் செய்ய மேலும் இரு வாரங்கள் அதிகம் கால அவகாசம் வேன்டும் என அரசு வழக்கறிஞர் கோரினார். இதற்கு மதானியின் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். "எதிர்ப்பு மனு தாக்கல் செய்ய இதுவரை இருமுறை அரசுக்குக் கால அவகாசம் நீட்டித்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக வழக்கு விசாரணையை மாற்றி வைப்பதும் அரசுக்குக் கால அவகாசம் வழங்குவதும் நியாயமல்ல" என மதானியின் வழக்கறிஞர் வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து அரசு தரப்பு எதிர்ப்பு மனு தாக்கல் செய்ய மேலும் 10 நாட்கள் கால அவகாசம் வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்தது. "இதுவே இறுதி முறை. எதிர்ப்பு மனு தாக்கல் செய்வதற்காக இனிமேல் ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் தள்ளி வைக்காது" என அரசு தரப்பு வழக்கறிஞருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை செய்தது.
நாசர் மதானி ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 16 ஆம் டேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதிமன்றம் அறிவித்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக