தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.11.11

பெட்ரோல் விலை உயர்வுக்கு கேரள ஐகோர்ட்டு கண்டனம்


அடிக்கடி பெட்ரோல் விலையை உயர்த்துவதற்கு, கேரள ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்து உள்ளது. வரவு-செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்யும்படியும், எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது.நேற்று முன்தினம் நள்ளிரவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.80 உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த ஒரே ஆண்டில் 11 முறை
பெட்ரோலியபொருட்களுக்கு விலை உயர்த்தப்பட்டு இருப்பதற்கு நாடு தழுவிய எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஆளும் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள கட்சிகளும் இந்த விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் புதிய திருப்பமாக, பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. முன்னாள் எம்.பி. பி.சி.தாமஸ் என்பவர் இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
"பெட்ரோல் விலை உயர்வு அறிவிக்கப்பட்டதும் அரசியல் கட்சிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன. ஆனால், இதனால் நேரடியாக பாதிப்புக்கு உள்ளாகும் நுகர்வோர்கள் அடிக்கடி நிகழும் இந்த உயர்வை எப்படியோ சமாளித்து வருகிறார்கள்.
குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சிறிய கார் உரிமையாளர்களைத்தான் இந்த விலை உயர்வு மிகவும் பாதிக்குமே தவிர, டீசலில் ஓடும் கார்களை வைத்திருப்பதால் பணக்காரர்களை பாதிக்காது." இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
தற்காலிக தலைமை நீதிபதி சி.என்.ராமச்சந்திரன் நாயர், நீதிபதி கோபிநாதன் ஆகியோரைக் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மாநில அரசு சார்பில் ஆஜரான வக்கீல், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
விசாரணையின்போது பெட்ரோல் விலை அடிக்கடி உயர்த்தப்படுவதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்து கருத்து வெளியிட்டனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பெட்ரோலிய பொருட்களின் விலை 40 சதவீதம் உயர்த்தப்பட்டு இருப்பது சாதாரண மக்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த மனு மீது மத்திய மாநில அரசுகள் 3 வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த பிரச்சினையில் மத்திய மாநில அரசுகள் தங்களுக்கு பொறுப்பில்லை என்று கைவிரிக்க முடியாது என்றும் கருத்து தெரிவித்தனர்.
அத்துடன் இந்தியன் ஆயில் மற்றும் ரிலையன்ஸ் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், தங்கள் வரவு-செலவு திட்ட அறிக்கை மற்றும் காலாண்டு அறிக்கைகளை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
அதே நேரத்தில், பெட்ரோலிய பொருட்களுக்கு விலை நிர்ணய அதிகாரம் வழங்குவது மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதாலும், இது தேசிய பிரச்சினை என்பதாலும் விலை உயர்வுக்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

0 கருத்துகள்: