டென்மார்க்கில் உள்ள வைத்தியர்கள் பெற் என்ற ஸ்கானிங் முறை மூலம் புற்றுநோயை மட்டுமல்ல அது எவ்வளவு பரவியுள்ளது என்பதையும் கண்டறிய முயன்றுள்ளனர். இதன் காரணமாக புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உடனடியாக சிகிச்சை அவசியமா இல்லையா என்ற முடிவை எடுக்கலாம். இது வைத்தயத்துறைக்கு ஏற்படும் பாரிய செலவைக் குறைப்பதோடு, சமுதாயத்தில் நிலவும் வைத்தியத் தாமதப் பதட்டத்தையும் குறைக்க உதவும்
என்றும் கூறுகிறார்கள். பெற் ஸ்கானிங் இயந்திரத்தில் ஒருவரை செலுத்த முன்னர் நோயாளியின் உடலில் புற்றுநோய் பரவலைக் காட்டும் றேடியோ அக்டிவ் தாதுப் பொருளை ஊசி மூலம் செலுத்தி பின் ஸ்கேனிங் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் பெற் ஸ்கானிங் புற்றுநோய் எவ்வளவு தூரம் பரவியுள்ளது என்பதைக் காட்டும். ஒரு தடவை உடலை படமெடுத்தாலே போதும் புற்றுநோய் பரவிய அளவை அது காட்டிவிடும். இந்த ஸ்கானிங் இயந்திரங்கள் புற்றுநோய் பரவும் அளவை தெளிவாகக் காட்டவல்லது என்பதால் இதன் பாவனையை சகல இடங்களிலும் அதிகரிக்க வேண்டுமெனவும் வைத்தியர்கள் கருதுகிறார்கள். பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோயின் பரவுதலை விரைவாகக் கண்டறிய இது பெரிதும் உதவும். முதலில் 13.3 மில்லியன் குறோணர்கள் இதற்காக ஒதுக்கப்படவுள்ளது. இரண்டொரு வருடங்களில் டேனிஸ் வைத்தியசாலைகளில் இத்தகைய ஸ்கானிங் முறை சாதாரண பாவனைக்கு வந்துவிடும். புற்றுநோய் ஆபத்தானது ஆனால் அதைவிட ஆபத்தானது அது பரவுவதை கண்டு பிடிக்காமல் இருப்பதுதான்.இது இவ்விதமிருக்க அவுஸ்திரேலியாவுடன் டேனிஸ் சுகாதாரத்துறை பல விடயங்களில் சேர்ந்தியங்குகிறது. இதன் ஞாபகார்த்தமாக அங்குள்ள வெஸ்ற்மாட் கான்சர் சென்டரின் பெயர் டேனிஸ் முடிக்குரிய இளவரசி மேரியின் பெயரில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவுஸ்திரேலியாவில் பிறந்த டேனிஸ் இளவரசி மரிய மேற்கண்ட வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக