தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.11.11

கோலாகலமாக நடக்கும் 30வது ஷார்ஜா புத்தகக் கண்காட்சி!


ஷார்ஜா:ஷார்ஜாவில் 30வது புத்தகக் கண்காட்சி நவம்பர் 16ம் தேதி துவங்கியது. ஷார்ஜா ஷேக் ஸுல்தான் பின் முஹம்மத் அல் காஸிமி இந்தக் கண்காட்சியைத் துவக்கி வைத்தார். பல நாடுகளின் பதிப்பகங்கள் பங்குபெறும் இந்தக் கண்காட்சியில் இந்திய பதிப்பகங்கள் அதிக ஸ்டால்களைப் போட்டுள்ளதால் அனைவரின் கவனமும் அங்கே திரும்பியுள்ளது.

ஷார்ஜாவின் கலாச்சாரம் மற்றும் தகவல் துறை அமைச்சகம் இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. நவம்பர் 16 முதல் 26 வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 42 நாடுகளிலிருந்து 720 பதிப்பகங்கள் பங்குபெற்றுள்ளன.
அல் தாவூன் மாலுக்கு அருகிலுள்ள ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் வைத்து நடைபெறும் இந்தக் கண்காட்சியில் மொத்தம் 40,000 பார்வையாளர்களும், 10,000 மாணவர்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களுக்கு நூற்களின் விலையில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும்.
இந்திய விமானப் போக்குவரத்துத் துறை மற்றும் வெளிநாட்டு இந்திய விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி இந்தக் கண்காட்சியின் துவக்க தினத்தில் கலந்துகொண்டார்.
“கண்காட்சி நடக்கும் இந்த வருடம் ‘இந்தியா ஃபோக்கஸ்’ வருடமாக இருக்கும். முக்கியமான இந்திய எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் இங்கே வரவுள்ளார்கள். அவர்களது புத்தகங்களில் அவர்கள் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பார்கள். அவர்களுடன் கலந்துரையாடவும் முடியும்” என்று டி.சி. புக்ஸ் என்ற மலையாள புத்தகப் பதிப்பகத்தின் தலைமை அதிகாரி ரவி கூறினார்.
சசி தரூர், எம்.டி. வாசுதேவன் நாயர், ரஸ்கின் பாண்ட், ஷோபா டெ, சேத்தன் பகத், ஜெய்ஸ்ரீ மிஸ்ரா, டாக்டர் லக்ஷ்மி நாயர், உம்பாயி, எம். முகுந்தன் ஆகிய நூலாசிரியர்கள் இதில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.
கடந்த 18ம் தேதி வெள்ளிக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது. பல்வேறு நாடுகளைச் சார்ந்த ஆண்களும், பெண்களும் ஆர்வமாகப் புத்தகங்களை வாங்கினர். அரபுலகின் பிரசித்தி பெற்ற தாருஸ்ஸலாம் பதிப்பகத்தின் ஸ்டாலில் நல்ல பல ஆங்கில, அரபி நூற்கள் உள்ளன. மலையாள பதிப்பகங்கள் அதிகமாகப் பங்கெடுத்துள்ளதால் இந்தியன் பெவிலியனில் மலையாளிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது.
இந்தியன் பெவிலியனில் ஹால் எண் : 1ல், ஸ்டால் எண் : J –7-லுள்ள மலையாளப் பதிப்பகமான தேஜஸ் பப்ளிகேஷன்ஸ் ஸ்டாலில் தமிழ் நூற்களும் இடம் பெற்றுள்ளன.
இஸ்லாத்தின் அடிப்படையில் நேர நிர்வாகம் குறித்து முதன்முதலில் தமிழில் வெளிவந்துள்ள நூலான “இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்” மற்றும் “மனித இனத்திற்கெதிரான குற்றம்”, “கோவை : போலீஸ் நடத்திய வெடிகுண்டு நாடகம்”. “மனதோடு மனதாய்”, “வேர்கள்”, “சிறையில் எனது நாட்கள்” முதலான இலக்கியச்சோலை பதிப்பகத்தின் தமிழ் நூல்கள் அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

0 கருத்துகள்: