தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.12.11

குஜராத் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் ரத்தம் செலுத்தப்பட்டது!


குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி மதநல்லிணக்க உண்ணாவிரதம் இருந்த ஜுனாகத் நகரிலுள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனையில் ஏராளமான குழந்தைகள் தடுப்பூசி மற்றும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சமீபத்தில் 23 குழந்தைகளுக்கு மருத்துவர்கள் ரத்தம் செலுத்தியுள்ளனர். அவர்களுக்குத் தவறுதலாக எய்ட்ஸ் கிருமி பாதித்த ரத்தம் செலுத்தியதாக தெரிகிறது.இதையடுத்து குழந்தைகளின் உடல்நிலை 6 மாதமாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதில் அவர்களுக்குச் செலுத்தப்பட்ட ரத்தத்தில் எய்ட்ஸ் கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு குஜராத் மாநில உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தலா ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்கவும், மருத்துவமனை நிர்வாகத்தின்மீது வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர். தலைமை நீதிபதி பாஸ்கர் பட்டாச்சார்யா வழக்கை விசாரித்து மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்கள்மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதில் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

அதன்படி அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "இந்த மருத்துவமனையில் 100 குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 23 குழந்தைகளுக்கு ரத்தம் மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனை நிர்வாகம், அனுமதி இல்லாமல் செயல்பட்ட சோதனைக் கூடத்தில் இருந்து ரத்தம்பெற்று குழந்தைகளுக்குச் செலுத்தியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில் "ரத்தம் வழங்கிய ரத்த வங்கியின் லைசென்ஸ்சை ரத்து செய்யவேண்டும்" என்று கூறினார். அரசு இறுதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையே சம்பவம் நடந்த நகரில் மோடி உண்ணாவிரதம் இருந்ததால் அவரைக் கண்டித்து பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் காங்கிரசாருடன் சேர்ந்து போட்டி உண்ணாவிரதம் இருந்தனர்.

"நரேந்திர மோடி மக்களுக்கு உண்மையிலேயே நல்லது நடக்க வேண்டும் என்று விரும்பினால் இந்தக் குழந்தைகள் விசயத்தில் அதை செய்து காட்டவேண்டும்" என்று நகர துணை மேயர் கிலிஸ் கொடேசா கூறினார்.

0 கருத்துகள்: