விவசாயத்துறை அமைச்சர் சரத்பவாரை ஹர்வீந்தர் சிங் என்ற இளைஞர் காட்சி ஊடகங்களின் முன்னிலையில் கன்னத்தில் அறைந்தார். அரசியல்வாதிகள் எல்லாம் திருடர்கள், விலைவாசி உயர்வுக்கு சரத்பவார்தான் காரணம் என கூறியவாறு அவ்விளைஞர் பவாரின் கன்னத்தில் அறைந்துள்ளார்.எதிர்பாரதவிதமாக தாக்கப்பட்ட சரத்பவார் அருகிலிருந்து சுவற்றில் பிடித்ததால் கீழே விழாமல் தப்பித்தார். தாக்கிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சில தினங்களுக்கு முன்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட முன்னாள் டெலிகாம் அமைச்சர் சுக்ராமை நீதிமன்ற வளாகத்தில் வைத்து இந்த இளைஞர்தாம் தாக்கியுள்ளார். சரத்பவாரை இளைஞர் தாக்கிய சம்பவத்தை அரசியல் தலைவர்கள் பலரும் வன்மையாக கண்டித்துள்ளனர். பாராளுமன்ற தெருவில் என்.டி.எம்.சி பில்டிங் ஆடிட்டோரியத்தில் இலக்கியம் தொடர்பான பொது நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வருகை தந்த வேளையில்தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. நிகழ்ச்சி முடிந்து வெளியே இறங்கிய பவார் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தவாறு நடந்துக்கொண்டிருக்கும் வேளையில்தான் பவாரின் பின்புறத்திலிருந்து ஓடி வந்த இளைஞர் அவருடைய கன்னத்தில் அறைந்தார். இதற்கிடையே பவாரின் பாதுகாவலர் ஒருவருடன் அந்த இளைஞர் சண்டைப் போட்டுள்ளார். பாதுகாப்பு ஊழியர்கள் இளைஞரை பிடித்த வேளையில் அவர் தனது கிர்ஃபானை (சீக்கியர்கள் தங்கள் மத வழக்கப்படி வைத்திருக்கும் சிறு கத்தி) உருவி தனது கையை கிழித்து கிர்ஃபானை உயர்த்திக்காட்டி முழக்கமிட்டார். கிர்ஃபானை கைப்பற்றிய பாதுகாவலர்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். ‘ஊழல் வாதிகளே’ என உரக்க முழக்க மிட்ட அந்த இளைஞர், பாதுகாப்பு ஊழியர்களிடம் ‘என்னை சுடுங்கள்’ என ஆக்ரோஷமாக கூறியுள்ளார்.
பவாரை தாக்குவதற்குத்தான் இவ்விடத்திற்கு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இச்சம்பவத்தை தொடர்ந்து பிரதமர் பவாருடன் தொடர்புகொண்டு உரையாடினார். தாக்குதல் நடத்தியவரின் நோக்கம் என்ன என்பது தனக்கு தெரியவில்லை எனவும், இதனை விசாரிக்க போலீஸிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பவார் தெரிவித்தார். இச்சம்பவத்தை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் கண்டித்துள்ளனர்.
பவார் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்த பா.ஜ.கவின் ரவிசங்கர் பிரசாத், தாக்கியவரை தண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், பா.ஜ.கவின் தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா, விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளாதது மக்களை வன்முறையின் பாதையை தேர்ந்தெடுக்க தூண்டுவதாக தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை காங்கிரஸ் கட்சிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பவாரின் முகத்தில் அறைந்த நடவடிக்கையை நியாயப்படுத்துவதாக சின்ஹாவின் அறிக்கை அமைந்துள்ளதாக காங்.கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஷித் அல்வி தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்தியவருக்கு ஹிந்துத்துவா அமைப்பான பகத்சிங் கிராந்திசேனா 11 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.News@thoothu
0 கருத்துகள்:
கருத்துரையிடுக