புதுடெல்லி:ராணுவத்தின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து கஷ்மீரில் சில பகுதிகளில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரசட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து சந்தேகம் நிலவுகிறது. வெள்ளிக்கிழமை ஸ்ரீநகரில் கூடிய மாநில அமைச்சரவை கூட்டத்தில் தற்காலம் இவ்விவகாரத்தில் தீர்மானம் எடுக்க வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் உள்பட வடகிழக்கு மாநிலங்களிலும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் தொடர வேண்டும் என்பது ராணுவத்தின் விருப்பமாகும்.
நவம்பர் பத்தாம் தேதி ஜம்முவில் நடைபெறவிருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்து மீண்டும் விவாதிக்கப்படும் என கருதப்படுகிறது. ஆனால், தீர்மானம் உடனடியாக மேற்கொள்ளப்படமாட்டாது. கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் முடிவு எடுத்ததற்கு மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஸைபுதீன் ஸோஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முதல்வர் செயல்படுவதாக ஸோஸ் குற்றம் சாட்டுகிறார். தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்காமல் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெறுவது கேடு விளைவிக்கும் என மாநில காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் கூட்டம் வெள்ளிக்கிழமை நடந்த போதிலும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து விவாதிக்கவில்லை. ராணுவம் எழுப்பியுள்ள சந்தேகங்களை புறக்கணித்துவிட்டு இது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்பது மத்திய அரசின் நிலைப்பாடாகும்.
கஷ்மீரில் க்ரேனேடு தாக்குதல்கள் உள்பட தொடரும் வேளையில் இச்சட்டத்தை வாபஸ் பெறுவது போராளிகளுக்கு சாதகமாக அமையும் என ராணுவம் எச்சரித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியும் ராணுவத்தின் கருத்திற்கு ஆதரவு அளிப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் அறிக்கை வெளியிட்டதன் பின்னணியில் ராணுவ தளபதி வி.கே.சிங்குடன் கடந்தவாரம் ஏ.கே.அந்தோணி விவாதித்ததாக அப்பத்திரிகை கூறுகிறது.
சட்டத்தின் பாதுகாப்பு இல்லாமல் கஷ்மீரில் செயல்பட முடியாது என ராணுவ தளபதி கூறினாராம். இச்சட்டத்தை வாபஸ் பெற்றால் மீண்டும் அமுல்படுத்தமுடியாது எனவும், அரசியல் விருப்பங்கள் தான் இதன் பின்னணியில் உள்ளதாகவும் தரைப்படை தளபதி கூறியுள்ளார்.
ஸ்ரீநகரில் அண்மையில் நடந்த க்ரேனேடு தாக்குதல்கள் ராணுவம் திட்டமிட்டு நடத்தியது என நேஷனல் கான்ப்ரன்ஸ் எம்.எல்.ஏவும் பாரூக் அப்துல்லாஹ்வின் சகோதரருமான முஸ்தஃபா கமால் வெளியிட்ட அறிக்கைக்கு ராணுவம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு ஏஜன்சிகளின் எதிர்ப்பின் காரணமாக உமர் அப்துல்லாஹ் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெறுவதை ஒத்திவைத்துள்ளார். கடந்த வாரம் கேபினட் செயலாளர் அஜித் குமார் ஸேத், உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங், பாதுகாப்பு செயலாளர் எஸ்.கே.ஷர்மா ஆகியோர் கஷ்மீருக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தனர்.
எல்லைக்கு அப்பாலிருந்து ஊடுருவல் முயற்சிகள் தொடரும் வேளையில் எல்லா சூழல்களையும் ஆராய்ந்த பிறகே ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெறும் விவகாரத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கஷ்மீர் சென்ற குழுவினர் பரிந்துரைத்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக