தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.10.11

காட்டுமிராண்டிகளின் உலகை தன் மரணத்தால் உணர்த்திய கடாபி..


ஆலைகள் மட்டும் உலகத்தை வெப்பமாக்கவில்லை.. காட்டுமிராண்டி செயல்களும்தான்...
கேணல் கடாபி 42 வருட சர்வாதிகார ஆட்சியின் வடிவம்..
உலகத்தில் அதிக காலம் ஆட்சியில் இருந்த பெரும் பணக்கார சர்வாதிகாரி..

உலகத் தலைவர்கள் எல்லாம் மண்டியிட்டு அவருடைய வாசலில் நின்றதை கண்ணாரக் கண்டு மமதை கொண்ட மனித வடிவம்..
பிறந்தநாள் பரிசாக பலர்ஸ்கோனியிடமிருந்து ஐ.சி ரயில்வண்டியையே பரிசாகப் பெற்ற உலகின் ஒரே சர்வாதிகாரி..
இப்படியெல்லாம் இருந்தாலும் அவரின் மறுபக்கமோ கொடுங்கோன்மை நிறைந்தது..
அவர் செய்த அநீதிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்படலாம்.. ஆனால் இப்படி ஒரு தண்டனை வழங்கப்படலாமா..?
அவர் பிறந்த நகரான சிற்றாவில் அவர் மரணிக்க வைக்கப்பட்ட முறை கடாபியின் தவறுகளை மூடி மறைத்துவிட்டது. உலகத்தில் இருந்து காட்டுமிராண்டிகள் இன்னமும் மறைந்துவிடவில்லை என்ற எண்ணத்தை நாகரிக உலகத்தில் உருவாக்கியுள்ளது.
போரில் ஈடுபட்டு தோல்வியடையும் ஒருவன் எத்தனை மோசமானவனாக இருந்தாலும், அவன் சரணாகதி அடைந்ததும் வெற்றி பெற்றவர்கள் நடக்க ஒரு மரபு இருக்கிறது.
அந்தப் போர் மரபை மீறிய அரசொன்று இப்போதும் சிறீலங்காவில் இருக்கிறது.. அந்த அரசும் இப்போது கடாபி கொலைக்கு விளக்கம் கேட்டிருக்கிறது..
கடாபி கொலைக்கு விளக்கம் வேண்டுமென்று எவனும் கேட்கலாம் ஆனால் சிறீலங்கா கேட்கலாமா..?
கேட்டிருக்கிறது.. எப்படி..?
இசைப்பிரியாக்களின் உடலத்தை வகிறி எடுத்த வாயால் கேட்டிருக்கிறது..
ஏன் கேட்டது.. இந்தக் கேள்வியால் தானும் தூயவனாக மாறிவிடலாமா என்ற நப்பாசையால் கேட்டுள்ளது.
முள்ளிவாய்க்காலை முன்னுதாரணமாக வைத்துத்தான் முகம்மர் கடாபி கொல்லப்பட்டுள்ளார் என்று உலகம் உதாரணம் காட்ட முன்னர் தானே ஓடிவந்து ஒரு முந்திரிக் கொட்டைக் கேள்வியைக் கேட்டுள்ளது.
அது மட்டுமா..?
அவர் மரணமடைய வைக்கப்பட்ட முறையை மூடி மறைக்கும் நாடகங்கள் சிறீலங்கா போலவே லிபியாவிலும் திரை மறைவில் ஆரம்பித்துவிட்டன.. சற்று முன் முடிந்துள்ள கடாபியின் பிரேத பரிசோதனை அறிக்கை அவருடைய மூளைக்குள் ஒரு துப்பாக்கிக்குண்டு கிடந்ததாகத் தெரிவிக்கிறது.
ஒரு குண்டா கிடந்தது.. மற்றய குண்டுகள் எங்கே…?
பிரேத பரிசோதனை அறிக்கை கடாபியை கொன்ற முறைமைக்கு எதிரான போர்க்குரலாக ஏன் வெளிவரவில்லை.
முள்ளிவாய்க்காலில் மண்ணள்ளிப்போட்டு உண்மைகள் மறைக்கப்பட்டது போல கடாபியின் மரணத்தில் உள்ள போர்க்குற்றமும் மண்ணள்ளி மூடி மறைக்கப்படலாம் என்பதை இந்தப் பிரேத பரிசோதனை அறிக்கை காட்டுகிறது.
ஒருவர் இறந்த பின்னர் அவருடைய உடலம் பூமிக்கும் ஆகாயத்திற்கும் பொதுவானதாகிறது. அதை அவமதிக்கும் உரிமை மனித குலத்திற்குக் கிடையாது. ஆனால் அவருடைய சடலத்தின் முடியைப் பிடித்து உலுக்கியபடி போராளிக் குழுவினர் கிலீரிட்டு அலறியபடி நிற்பது மனிதர்களாகப் பிறந்தவர்களை வெட்கித் தலை குனிய வைக்கிறது.
இப்படியொரு காட்டுமிராண்டிக் கூட்டத்தை ஆட்சியில் அமர்த்தவா நேட்டோ இத்தனையாயிரம் குண்டுகளை வீசியது என்ற கேள்வியை அந்தக் காட்சி ஏற்படுத்துகிறது.
கடாபி மோசமான கொடிய மனிதர்தான்… இருந்தாலும்…
கடாபிக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாட்டை நேட்டோ காட்டப்போகிறது..? இதுதான் நம்முன் எழும் அவலமான கேள்வி.
இப்போது அதே போராளிகள் குழு இஸ்லாமிய ஸாரியார் சட்டங்களின்படி நாட்டை நிர்வாகிக்கப் போவதாகக் கூறுகிறது. தன்னுடைய மத ஒழுக்கத்தைவிட மற்றைய மத ஒழுக்கங்களை அனுமதிக்க மறுக்கும் ஸாரியார் விதிகள் எப்படி பல்வேறு குழுக்கள் கொண்ட ஒரு நாட்டில் ஜனநாயகத்தை மலர்விக்கப்போகிறது..?
இதே ஸாரியார் சட்டங்களால் ஈரானில் நடக்கும் மத சர்வாதிகார ஆட்சியைவிட, துருக்கியில் நடக்கும் போலி ஜனநாயக சர்வாதிகார ஆட்சியைவிட வேறென்ன புதுமையைத் தரப்போகிறது லிபியாவின் புதிய ஆட்சி என்பது அடுத்த கேள்வியாகும்..?
நேட்டோ தனது குண்டுவீச்சுக்களைப்போல இந்த விவகாரத்தையும் இத்துடன் முடித்துக்கொள்ள முடியாது…
கடாபி கொல்லப்பட்ட போது கொலை முடிவுகளை எடுத்த கட்டளைத் தளபதிகள், அங்கு நின்ற படைவீரர்கள் அத்தனைபேரையும் சர்வதேச போர்க்குற்ற நீதி மன்றில் நிறுத்த வேண்டும்.
இல்லாவிட்டால்…
இரண்டு பேரவலங்கள் நடக்கும்..
ஒன்று..
லிபியாவில் வெற்றி பெற்ற போராட்டம் மிக விரைவில் வீழ்ச்சியடைய நேரிடும்.
இரண்டு..
நேட்டோ போட்ட குண்டுகளின் கதை யானை தன் தலையில் மண்ணள்ளிப் போட்டதைப்போல தனக்குத்தானே வீசிய குண்டுகளாக மாறும்.
மறுபுறம்…
கடாபிக்காக நீதி கேட்டுள்ள சிறீலங்கா அரசை அன்று தண்டிக்க மறுத்த காரணத்தால்தான் இன்று லிபியால் இந்தச் சீத்துவக்கேடு நடந்திருக்கிறது என்பதை ஐ.நா செயலர் உணர வேண்டும்..
மானிடம் இன்னொரு குட்டிபோட ஓராயிரம் வருடம் செல்லும்… ஆனால் காட்டுமிராண்டித்தனமோ பார்த்திருக்க பன்றிபோல பதினாறு, பதினாறாய் குட்டிகள் போடும்… சிறீலங்காவில் நடந்த காட்டுமிராண்டித்தனம் எவ்வளவு வேகமாக உலகம் முழுதும் குட்டிகளை வீசுகிறது என்பதை ஐ.நா அவதானிக்க வேண்டும்.
சிறீலங்காவின் வெள்ளைக்கொடி விவகாரமும், கடாபி கொலையும் ஒரேவிதமான குற்றச்செயலே என்று அமெரிக்க மனித உரிமைக்கழகம் கூறியிருப்பதை ஐ.நா கவனிக்க வேண்டும்.
ஐ.நாவுக்கும் அதன் அதிகாரங்களுக்கும் மேல் உலகிற்கு ஒரு நீதி இருக்கிறது.
மனிதனை தாங்கி நிற்கும் புவியின் மேற்பரப்பில் நடக்கக் கூடிய அநீதிகளுக்கும், அக்கிரமங்களுக்கும் ஓர் எல்லை இருக்கிறது.. அதை மீறிய இரண்டு நாடுகளும் தண்டிக்கப்பட வேண்டும்.. இல்லை மூன்றாவது நாட்டிலும் இதுதான் நடக்கும்…
யுத்தக்குற்றம் புரிந்த அனைவருக்கும் தண்டனை…!
புதிய உலகம் அதை யாதொரு சமரசத்திற்கும் இடமின்றி நிறைவேற்ற வேண்டும்..!
உலகம் வெப்பமாவதால் பேரழிவுகள் வருமென்று கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்..!!
ஆனால்
உலகத்தை மாபெரும் நெருப்பாக எரிய வைத்திருக்கிறது சிறீலங்கா வன்னியிலும், லிபியாவின் சிற்றாவிலும் நடந்த நிகழ்வுகள்.
முள்ளி வாய்க்காலில் நடந்ததும், மும்மர் கடாபிக்கு நடந்ததும் ஒன்றுதான்..!
போர்க்குற்றவாளி சிறீலங்கா கேட்டது போல உலக நாடுகள் எல்லாம் தான் செய்த தவறை மறந்து கேள்வி கேட்டால் உலகத்தின் மானிட வரலாற்றின் கெதி என்னவாகும்..?
உலகம் போர்க்குற்றத்திற்கு தப்பாது தண்டனை வழங்க வேண்டும்…!! தவறினால் இயற்கை அதை வழங்கும்..!!
இயற்கையின் தண்டனை மனிதனின் தண்டனையைவிட பல நூறு மடங்கு அதிகமாக இருக்கும்..
அது..
குற்றவாளிகளை மட்டுமல்ல.. அதிகாரம் இருந்தும் தண்டனையை வழங்க மறுக்கும் உலக வல்லரசுகளின் ஆணி வேரையும் பிடுங்கி வீசிவிடும்..
ஆலைகள் மட்டும் உலகத்தை வெப்பமாக்கவில்லை.. காட்டுமிராண்டி மனிதர்கள் செய்யும் வேலைகளும் உலகத்தை வெப்பமாக்குகிறது என்பதை மறந்துவிடக்கூடாது.
மனிதர்களை அல்ல மிருகங்களைக்கூட கடாபியைக் கொன்றது போல கொல்லக்கூடாது.
மனித நாகரிகம் வெட்கத்தால் தலை குனிகிறது…

0 கருத்துகள்: