தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.4.11

'நரிக்கு நாட்டாண்மை கிடைத்தால், கிடைக்கு 2 ஆடுகள் கேட்கும்': தேர்தல் ஆணையத்தை கண்டிக்கும் கலைஞர்


தேர்தல் ஆணையம் அளவு மீறி சென்றுகொண்டிருப்பதாகவும், இந்த நிலைமையை மத்திய அரசு மாற்ற வேண்டுமெனவும், தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
கடலூர் மாவட்ட திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மஞ்சக்குப்பம் மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போது இவ்வாறு கருணாநிதி கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

எதற்கும் ஓர் அளவு இருக்கிறது. அந்த அளவுகடக்கும் போது எல்லை கடக்கும்போது நான் மாத்திரம் அல்ல. இங்கே வீற்றிருக்கும் நம்முடைய கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லாம் ஒன்றுபட்டு ஒருமித்த கருத்துடையவர்கள்.

நரிக்கு நாட்டாண்மை கிடைத்தால், கிடைக்கு 2 ஆடுகள் கேட்கும் என்பது ஒரு பழமொழி. அதேபோல தங்களுக்கு கிடைத்த அதிகாரத்தை நரிக்கு கிடைத்த நாட்டாண்மைபோல் கிடைக்கு 2 ஆடுகள் கிடைக்காதா என்று அந்த அதிகாரத்தை செலுத்திக்கொண்டிருப்பவர்களை, நான் உச்சத்தில் இருப்பவர்களை சொல்லவில்லை. உச்சத்தில் இருப்பவர்களுக்கு அடுத்து இருப்பவர்களை, அடுத்து இருப்பவர்களை சொல்கிறேன். இவர்கள் செய்கிற அதிகாரத்தை பார்க்கிற போது என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

நான் நேற்று விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் பேசிவிட்டு, தங்குவதற்கு எங்கே இடம் என கேட்ட போது, அரசாங்கத்தின் இடம் உங்களுக்கு தர முடியாது என தேர்தல் ஆணையம் கூறுகிறது. வி.ஐ.பி கெஸ்ட் அவுஸ் எதுவும் உங்களுக்கு ஒதுக்கவில்லை. நம்முடைய கட்சி அலுவலகத்திலேயே நீங்கள் இரவு தங்கிக்கொள்ளலாம் என பொன்முடி சொன்னார்.

நமக்கு இந்த கடலூரில் ஒரு டிராவல்ஸ் பங்களா அல்லது அரசாங்கத்துக்கு தொடர்புடைய ஒரு விடுதி ஒதுக்கப்படாததற்கு என்ன காரணம்?

இந்த இயக்கத்தை நடத்துவதற்கு ஊர் ஊராக சுற்றி, கிராமம் கிராமமாக சென்று, நகரங்களில் வலம் வந்து இரவு நேரம் தூங்குவதற்கு தரையில் துண்டை விரித்துக்கொண்டு தூங்கியவன்தான் இந்த கருணாநிதி. அதற்காக மெத்தை, படுக்கை தேவையில்லை என்று நான் சொல்லவில்லை.

இங்கே வருகிற வழியில், கையிலே கொண்டு வந்த மாலை நேரத்து சிற்றுண்டியை அருந்துவதற்கு கூட இங்கு இடம் இல்லை. வேனிலேயே அமர்ந்து யாரும் பார்க்காமல் இருக்க என்னுடன் வந்தவர்கள் ஒரு துண்டை விரித்துக்கொண்டு அங்கேயே சாப்பிட்டு விட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தேன்.

இப்படியெல்லாம் இருக்கலாமா இது நம்முடைய பெருமைக்கு இழிவல்லவா என்று நினைப்பவன் அல்ல நான். என்னை விட கேவலமாக, இழிவாக நடத்தப்படுகின்ற கூட்டம் இந்த நாட்டில் இருப்பது எனக்கு தெரியும் அதையெல்லாம் நினைத்துக்கொண்டு வேனில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு வந்தேன்.

இந்தியா வெற்றிபெற்று இருக்கிறது என்று சொல்லும்போது நானும் அந்த கிரிக்கெட் அணிக்கு ரூ.3 கோடி ரூபாய், அதிலே ஆடி வெற்றிபெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் அஸ்வினுக்கு ரூ.1 கோடி என மொத்தம் ரூ.4 கோடியை அரசின் சார்பில் தருகிறோம் என்ற செய்தியை பத்திரிகைகளுக்கு கொடுத்தேன்.

இந்த 4 கோடி ரூபாயில் 3 கோடி ரூபாய் கிரிக்கெட் அணிக்கும், ஒரு கோடி ரூபாயை அஸ்வினுக்கும் தருகிற கோப்பை நான் தலைமை செயலாளருக்கு அனுப்பினேன். என்னுடைய கையெழுத்தை போட்டு, தலைமை செயலாளர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று உத்தரவையும் போட்டேன்.

அவர்கள் தேர்தல் கமிஷனை கேட்டு இருக்கிறார்கள். அவர்கள் சொல்லி இருக்கிறார்கள், கொடுப்பது சரி, ஆனால் அந்த விளையாட்டு வீரர்களை, முதல்வர் அழைத்து, அவர் அதை தன் கையால் கொடுக்கக்கூடாது, நான் கொடுத்தால், அது தேர்தல் பிரசாரம் ஆகி விடுமாம். அப்படியானால், உலகம் முழுவதும் இருக்கிற மக்கள் பார்த்ததை, கைகொட்டி, வாழ்த்தி, அவர்களை பாராட்டிய அந்த செய்தியை, நான் சொல்லக் கூடாதாம். அப்படி நான் கொடுத்தலும் அதை யாரும் போட்டோ எடுக்கக் கூடாதாம். இப்படி ஒரு ஆணையம். இதுபோல தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு இருக்கிறது என்றால் எனக்கே சந்தேகம்? யார் முதல்வர்?, நான் தானா? என்று எனக்கே ஒரு பிரச்சினை வந்து விட்டது.


நான் மத்திய சர்க்காருக்கு சொல்கிறேன். தேர்தல் கமிஷன் நினைத்தால் பிரதமரைக்கூட கண்டிக்கலாம். பிரதமர் கூட தேர்தல் கமிஷனுக்கு அடங்கி நடக்க வேண்டியது தான், அதன் விதிமுறை அது தான்.

ஆனால் அப்படிப்பட்ட விதிமுறைகளை அப்படிப்பட்ட அதிகாரங்களை அப்படிப்பட்ட கட்டுப்பாடுகளை பெற்று இருக்கிற ஒரு மகத்தான நிறுவனம், புனிதமான நிறுவனம், என்று சொல்லப்படுகின்ற, அந்த தேர்தல் கமிஷனை எப்படி அமைப்பது? யார்-யாரைக்கொண்டு அமைப்பது, எந்த வகையில் அமைப்பது, அதற்குரிய அதிகாரங்களை எப்படி அமல்படுத்துவது என்பதையெல்லாம் கொண்ட ஒரு நிலையை இனியாவது ஏற்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்று இந்த மாபெரும் கூட்டத்தின் சார்பாக நான் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி தெரிவித்தார்.

0 கருத்துகள்: