தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.10.11

மூச்சுப்பயிற்சியினால் என்ன பயன்? : யோகாசன பயிற்சி 7


கடந்த தொடரில்
மூச்சு பயிற்சியின் பல்வேறு வடிவங்களை வரும் தொடரில் பார்க்கலாம் என்று
கூறி முடித்திருந்தோம். ஆனால் அதற்குள் போவதற்கு முன், நாம் உள்ளிழுத்து வெளிவிடும் மூச்சு உடலுக்குள் என்ன மாதிரியான மாற்றங்களை நிகழ்த்துகிறது என்று இந்த பகுதியில் விளக்கம் தெரிந்து கொள்ளலாம்.

யோகாசனப் பயிற்சிகளாலும், மூச்சு பயிற்சிகளாலும் உடலுக்கு என்ன பயன் விளையக்கூடும் என்பது பற்றி பலருக்கும் சந்தேகங்கள் இருப்பது இயல்பு. பொதுவாக அதுவொரு ஆரோக்கிய பயிற்சி என்பது மட்டும் தான் வெளிப்படையாக தெரிந்த செய்தி. ஆனால் யோகாசனப்பயிற்சிகளும், மூச்சு பயிற்சிகளும் உடலில் அரிதான பல மாற்றங்களை நிகழ்த்துகின்றன என்பதே உண்மை. இன்றைக்கு இயங்கும் கம்பியில்லா தகவல் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் கண்ணுக்கு தெரியாத மின்காந்த அலைகள் மூலம் செயல்படுகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

நமது மூளையும் ஏறக்குறைய இதே அடிப்படையில் செயல்பட்டு தான் மனிதனை உலகத்தின் உயர்ந்த பரிணாம அதிசயமாக மாற்றியிருக்கிறது. இன்று வரை மனித மூளையின் முழு ஆற்றலின் வெளிப்பாட்டையும் அறிந்திருக்க முடியவில்லை. ஆனால் வியத்தகு செயல்பாட்டை கொண்ட சில விஞ்ஞானிகளால் மட்டும் உலகின் அரிதான கண்டுபிடிப்புகளை வெளியிட முடிந்திருக்கிறது. இதற்கு காரணம், அவர்களின் உடல் அதிகமான மின்காந்த செயற்பாடுகளை கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.

இதை வேறுவகையில் பார்க்கலாம். இந்த பூமி ஒரு மிகப்பெரிய இயற்கை காந்தம் என்பது உண்மை. இதன் காந்த அலைகள் அதைச்சுற்றிலும் கிட்டத்தட்ட 66 ஆயிரம் மைல்கள் விட்டத்திற்கு ஒரு அடர்த்தியான பரப்பளவில் அலைகளாக விரிந்து கிடக்கிறது. அதன் வட துருவம் வடஅமெரிக்கா வரையிலும், தென்துருவம் தென்விக்டோரியா வரையிலும் படர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அப்படியானால் இந்த காந்த எல்லைக்குள் வசிக்கிற அனைத்து உயிரினங்களும் மின்காந்த துணுக்குகள் தான் என்பதில் மாற்றமில்லை. மின்காந்த சக்தி விதிகளுக்கு உள்பட்டு தான் இந்த உலகமும், அதனுள் இருக்கும் நமது உடலும், உறுப்புகளும் இயங்குகின்றன.

மின்காந்த விதிகளின்படி நமது உடலும் வடதுருவம், தென்துருவமாக பிரிக்கப்பட்டுள்ளது.
காந்த சக்தியின் அடிப்படையில் உடலை ஆராயும் பொழுது மேலிருந்து கீழாக தலை, கைகள்,இடுப்பு வரை மேல்பகுதி வடதுருவமாகவும், இடுப்பிற்கு கீழ்புறம், கால்கள் முதலியவை தென்துருவமாகவும் அமைகின்றன. பக்கவாட்டில் பார்க்கும் போது வலது கை, முன் கை, வலது பாதி வடதுருவமாகவும், இடது கை, முன் கை என்று உடலின் இடப்புறம் முழுமையும் தென்துருவமாகவும் அமைகின்றன. உடலின் முன்புறம் அதாவது, நெற்றி, முகம், மார்பு, வயிறு இவைகள் வடதுருவமாகவும், உடலின் பின்புறமான பிடரி, கழுத்தின் பின்புறம், முதுகுத்தண்டு இவைகள் தென்துருவமாகவும் அமைகின்றன.

இந்த உடல் அமைப்பின் நடுநேர் கோட்டில் தான் மனித உடலை இயக்கும் 7 ஆதார சக்கரங்கள் (சுரப்பிகள்) அமைந்துள்ளன. இந்த சுரப்பிகள் முழுமையாக காந்த ஆற்றலின் விதிகளின் அடிப்படையில் சிறப்பாக இயங்கி மனித உடலையும், மூளையின் ஆற்றலையும் செம்மைப்படுத்துகின்றன. விஞ்ஞானிகளும், மருத்துவஉலகமும் மனித உடற்கூறு இயலையும், பிரபஞ்சத்தின் சக்தி ஆற்றல் அந்த உடலில் செயல்படும் விதத்தையும் கணிக்கும் முன்பே, யோக சக்தியில் வளர்ந்த யோகிகள் மனித உடலின் இந்த சக்கரங்களையும், அவற்றில் மின்காந்த ஆற்றல் செயல்படும் விதத்தையும் துல்லியமாக கணித்து அந்த ஆற்றலை செழுமைப்படுத்தும் விதத்தையும் உலகிற்கு அளித்தனர். அது தான் யோகாசனங்களும், மூச்சுப்பயிற்சியும்.
யோகிகளின் கூற்றுப்படி, மனித உடல் 7 சக்கரங்களில் இருந்து இருகூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சக்கரம் என்றால் ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது முனைப்பு. இந்த குறிப்பிட்ட இடங்களில் உள்ள நரம்புகள் மூளையில் உள்ள முக்கியமான நாளமில்லா சுரப்பிகளோடு தொடர்புடையவை. இந்த குறிப்பிட்ட சக்கரங்கள் அல்லது முனைப்புகள் தூண்டப்படும் போது அந்த குறிப்பிட்ட நாளமில்லா சுரப்பிகள் செவ்வனே இயங்கி உடல் உறுப்புகளை சரியாக இயங்க செய்கின்றன. இந்த சக்கரங்களின் மூலமாகவே உடலின் ஜீவசக்தி பல பாகங்களுக்கும் அனுப்பபடுகிறது என்கிறார்கள். ஆக, இந்த சக்கரங்கள் இயங்க தேவையான சரியான மின்காந்த ஆற்றலை அவற்றுக்கு நாம் தொடர்ந்து அளித்திட வேண்டும். அதற்கு உதவுவது தான் யோகசனங்களும், மூச்சுப்பயிற்சியும்.

இப்போது இந்த சக்கரங்கள் என்று சொல்லப்படக்கூடிய 7 ஆதாரங்களையும் மருத்துவரீதியாக பார்க்கலாம்.

1. மூலாதார சக்கரம்
இந்த சக்கரம் எருவாய்க்கும் கருவாய்க்கும் இடையில் இருக்கிறது. இதுவே குண்டலி சக்தியின் இருப்பிடம் என்பார்கள். இது பாலுணர்வு தொடர்பான உணர்வுகளுக்கு இருப்பிடம். இதன் மையம் மூளையிம் அடிப்புறமாகும். ஆண்களில் டெஸ்டிஸ் எனப்படும் உறுப்பும், பெண்களில் சினைப்பையும் இதன் பிரதிபலிப்பாகும்.

2. சுவாதிஷ்டான சக்கரம்
இந்த இடத்தில் சோலார் பிளக்ஸ் என்று சொல்லப்படும் நரம்பு மண்டலம் உள்ளது. இது அட்ரீனல் சுரப்பிகளுடனும், கழிவு மண்டலத்துடனும் தொடர்புள்ளது. சிறுநீரக மண்டலம் இருக்கும் இந்த இடம் ஆண்குறி அல்லது பெண்குறி. இது குதத்தையும், கால்களையும் கட்டுப்படுத்தக்கூடியது. கர்ப்பபையும், சினைப்பையும் இதன் கட்டுப்பாட்டில் உள்ளது.

3. மணிபூரக சக்கரம்
இதன் இருப்பிடம் தொப்புள். இது அக்கினி சக்தியாக கருதப்படுகிறது. இது கணையத்துடன் தொடர்புடையது. வயிறு, குடல், கல்லீரல், பித்தப்பை, கணையம் போன்றவை இதன் கட்டுப்பாட்டில் உள்ளன.

4. அனாகத சக்கரம்
இது இருக்கும் இடம் இதயம். இது தைமஸ் சுரப்பியுடன் தொடர்புடையது. இது இதயத்தையும், நுரையீரலையும் கட்டுப்படுத்துகிறது. வேகஸ் நரம்பு மண்டலம் என்னும் அதி முக்கிய நரம்பு மண்டலம் இதன் கட்டுப்பாட்டில் உள்ளது.

5. விசுத்த சக்கரம்
இதன் இருப்பிடம் கழுத்து மற்றும் பின்புற எலும்புகள் அமைந்துள்ள இடம். காதுகள், மூக்கு, தொண்டை, கண்கள், உணவுக்குழல், பாரா தைராய்டு ஆகியவை இதன்கட்டுப்பாட்டில் உள்ளன. இது தைராய்டு சுரப்பியை குறிக்கிறது.

6. அஜ்ந சக்கரம்
இது முளையின் நடுமையத்தில் வெளிப்புறமாக இரண்டு புருவ மத்தியில் அமைந்துள்ளது. இது பீனியல் கிளாண்ட் எனப்படும் சுரப்பியைக் குறிக்கிறது. இந்த பீனியல் கிளாண்டுக்கு மூன்றாவது கண் என்ற பெயர் உண்டு. இது மூளையின் கீழ்புறத்தையும்,காதுகளையும், மூக்கையும் கட்டுப்படுத்துகிறது.

7. சகஸ்ரார சக்கரம்
இது பிட்யூட்டரி சுரப்பியை குறிக்கிறது. தலையின் உச்சியில் அமைந்துள்ளது. பிட்யூட்டரி நாளமில்லா சுரப்பிகளின் தலைவன் என்ற பெருமை கொண்டது. அதீதமான அறிவுத்திறனை ஒருவர் பெறுவதற்கு இந்த பிட்யூட்டரி சுரப்பியின் ஆற்றல் தான் காரணம்.

ஆக..இந்த 7 சக்கரங்களை தூண்டி நன்றாக செயல்படும் படி செய்யவும், உடலுக்கு வரும் நோய்களை தடுத்து நிறுத்தவும் வந்த நோய்களை குணப்படுத்தவும் உடலுக்கு இயங்கும் காந்தசக்தியை வலுப்படுத்தவும் மூச்சுப்பயிற்சியும், யோகப்பயிற்சியும் உதவுகின்றன. அதாவது நமது உடலுக்குள் வலுவான காந்தசக்தியை இந்த பயிற்சிகள் உருவாக்குகின்றன. ஒருவர் மிகவும் சராசரி அறிவுத்திறனுடன், எதிலும் பிடிப்பில்லாமல் இயங்குகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவர் இந்த பயிற்சிகளை செய்து வருகையில் மேற்கண்ட சகஸ்ரார சக்கரம் தூண்டப்பட்டு மிகுந்த சுறுசுறுப்புடனும், நல்ல நினைவாற்றலுடனும், மிகுந்த திறனுடனும் விளங்கும் நபராக மாற்றத்தை காண முடியும்.

இந்த மின்காந்த சக்திகள் எப்படி நோய்களை குணப்படுத்துகின்றன என்பதற்கு வேறு ஒரு உதாரணத்தையும் கூறலாம். நமது அன்றாட வாழ்வில் காற்றில் கலந்திருக்கும் எத்தனையோ நுண்கிருமிகள் நமது மூச்சின் வழியாக உள்ளிழுக்கப்பட்டு உடலுக்குள் புகுந்து விடுகின்றன. ஆனால் இந்த நுண்கிருமிகளை எல்லாம் நமது ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் கொன்று போட்டு உடலை பாதுகாக்கின்றன. அதாவது குறிப்பிடத்தக்க வெப்பம் உடலில் உருவாக்கப்பட்டு இந்த நோய்க்கிருமிகள் கொல்லப்படுகின்றன என்பதே உண்மை. இது போல் அதீதமான திறனுடைய வெப்பத்தை யோகாபயிற்சியும், மூச்சு பயிற்சியும் நமக்கு தருகிறது.

இந்த பயிற்சிகளால் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்படுத்தப்படுகிறது. இதனால் உடலுக்குள் நுழையும் கிருமிகள் தடுக்கப்பட்டு கொல்லப்படுகின்றன. உடல் எப்போதும் ஆரோக்கியமாகவும், புத்துணர்வுடனும் இருக்கிறது.

இதுதவிர பயிற்சிகளின் உச்சத்தில் ஒருவரால் கண்களால் கூட பொருள்களை நகர்த்தும் ஆற்றலை (சைக்கோகீனசிஸ்) என்ற ஆற்றலை பெறும் அளவுக்கு கூட முன்னேற முடியும் என்கிறார்கள் நிபுணர்கள். சிவனின் மூன்றாவது கண் என்பது கூட ஒரு வித ஆற்றலின் வெளிப்பாட்டு வடிவம் தான்.
இனி வரும் தொடரில் மூச்சுபயிற்சியின் பல்வேறு வடிவங்களையும், இந்த பயிற்சிகளால் உடலில் என்ன மாறுதல் நடக்கும் என்பதையும் பற்றி பார்க்கலாம்.

0 கருத்துகள்: