புதுடெல்லி:பா.ஜ.க ஊழலில் சிக்கி தவிக்கும் வேளையில் ஊழலுக்கு எதிரான போராளியாக களமிறங்கியுள்ள பாப்ரி மஸ்ஜித் இடிப்பு புகழ் எல்.கே.அத்வானியின் ரத யாத்திரையை அவரது குடும்ப யாத்திரை என பா.ஜ.கவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் அத்வானியின் ஜனசேதனா யாத்திரைக்கு பேரணிகள் தேவையில்லை என சங்க்பரிவார தலைமை உத்தரவிட்டுள்ளது. ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிரான மக்களின் உணர்வுகளை ஆதாயமாக்க குடும்பத்தினருடன் ரதயாத்திரை கிளம்பியுள்ள 84 வயதான அத்வானிக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் எதிர்ப்பால் வரவேற்பு மங்கியுள்ளது.
பீகாரில் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்த ஊரான ஸிதாப் தியராவிலிருந்து ரதயாத்திரையை துவக்கிய அத்வானியுடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளனர். 84 வயதான அத்வானி பிரதமர் வேட்பாளராக மாற குடும்பத்தினருடன் நடத்தும் பரிவார யாத்திரை என ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் வர்ணித்துள்ளார்.
யாத்திரையின் பொறுப்பு வகிக்கும் பா.ஜ.கவின் தேசிய பொதுச்செயலாளர் அனந்தகுமார் மட்டுமே அத்வானியுடன் இருக்கும் ஒரே கட்சி தலைவர். வரவேற்பு கூட்டங்களில் உரை நிகழ்த்த ஹைடெக் ரதத்தின் மேலே செல்ல லிஃப்டில் அத்வானி ஏறுவது அவருடைய மகள் பிரதீபா உடனாகும். உரைநிகழ்த்தும் பீடத்திற்கு அருகே இதர பா.ஜ.க தலைவர்களை அத்வானி அண்டவிடமாட்டார். சங்க்பரிவார தலைமை மற்றும் கட்சியுடனும் ஆலோசனை நடத்தாமலேயே சுயமாக அத்வானி ரதயாத்திரையை அறிவித்தார். ஆர்.எஸ்.எஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமையகம் அமைந்திருக்கும் நாக்பூருக்குச் சென்று ஆர்.எஸ்.எஸ் தலைவரை சந்தித்துவிட்டு இது பிரதமர் பதவிக்கான யாத்திரை அல்ல என அத்வானி விளக்கம் அளித்தார் ஆனால் யாத்திரை துவங்கியவுடன் அடுத்த தேர்தலில் பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளருக்கான யாத்திரையாக அத்வானி மாற்றினார்.
உடல்நலம் அனுமதிக்குமானால் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவேன் என அத்வானி வெளியிட்ட அறிக்கை ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரம் குறித்து உரிய நேரத்தில் சங்க்பரிவார தலைமை முடிவெடுக்கும் என ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் சுனில் ஜோஷி தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக