தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.10.11

கடாபி கொலை யுத்த மீறல் நேட்டோ மீது ரஸ்யா கோபம்


கேணல் கடாபி சர்வதேச போர்க்குற்ற விசாரணை மன்றிடம் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். இப்படியொரு முறையில் அவர் கொல்லப்பட்டது தப்பு என்று ரஸ்ய வெளிநாட்டு அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ் தெரிவித்தார். கடாபி காயமடைந்த நிலையில் கைதாகியுள்ளார். அதன் பின்னர் பெருந்தொகையான இராணுவத்தின் கைகளில் அவர் ஒப்படைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார், இது தப்பான செயல் என்றார். போரில் ஒருவர் கைதான பின்னர் அவர் மீது இப்படியான நடவடிக்கையை மேற்கொள்வது போர்க்
குற்றமாகும் என்றும் தெரிவித்தார். அதிகாலை எட்டுமணியளவில் சிற்றா நகரைவிட்டு 75 கவச வாகனங்களில் அவர் வெளியேறியுள்ளார். அத்தருணம் பிரான்சிற்கு சொந்தமான நேட்டோ விமானம் தாக்குதல் நடாத்தியுள்ளது. இந்த தாக்குதலின் பின் நடந்த சம்பவங்களுக்கு நேட்டோவின் பாத்தியதையும் உண்டு என்று அவர் சுட்டிக்காட்டினார். மேலும் விமானம் பறக்க தடையுள்ள பகுதியிலேயே நேட்டோவின் தாக்குதல் நடைபெறுமென தொரிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் தாக்குதல் நடந்த இடம் அப்படியான இடமல்ல. மேலும் பெருமளவு வெடி மருந்துகளுடன் இந்த வாகனத்தொடரணி நகர்ந்துள்ளது. அதில் சென்ற 10 கார்கள் தகர்க்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் இருந்த வெடி மருந்து வெடித்தால் பொது மக்களுக்கு பாரிய சேதம் ஏற்படும். இது போரின் விதி மீறல் ஆகவே இந்த இடத்தில் குண்டு வீசியிருக்கக் கூடாது என்று அவர் கூறினார்.
இது இவ்விதமிருக்க லிபியாவில் இடம் பெற்ற நேட்டோ தாக்குதல் வரும் 31 திகதியுடன் முடிவடைவதாக நேட்டோ செயலர் ஆனஸ்போ ராஸ்முசன் தெரிவித்தார். மொத்தமுள்ள 28 நேட்டோ நாடுகளின் பிரதிநிதிகளுடன் நேட்டோ செயலர் சுமார் மூன்று மணி நேரம் தொடர் பேச்சுக்களை நடாத்திய பின்னர் இந்த முடிவை வெளியிட்டார். அதேவேளை நேட்டோ படைகள் சிறியளவு கண்காணிப்பை எப்போதும் வைத்திருக்கும் என்பதை அவர் மறுக்கவில்லை. பொது மக்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டால் அதை கட்டுப்படுத்த நேட்டோ அவதானிப்பு வேண்டும் என்றும் கூறினார். கடந்த ஏழு மாதகாலமாக நேட்டோவின் உதவியில்லாவிட்டால் லிபியப் போரை முக்கிய இடத்திற்கு கொண்டு வந்திருக்க முடியாது என்பது தெரிந்ததே. நேட்டோ விமானங்கள் 25.000 தடவைகள் பறந்துள்ளன, 9000 தடவைகள் தாக்குதலை நடாத்தியுள்ளன.

0 கருத்துகள்: