கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ள மம்தா பானர்ஜி, குண்டு துளைக்காத காரை திருப்பி அனுப்பி விட்டு சாதாரண காரிலேயே பயணம் செய்கிறார். முன்அறிவிப்பு இல்லாமல் பல்வேறு இடங்களுக்கு 'திடீர்' ஆய்வுக்கு செல்வதால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேற்கு வங்காளத்தி
ல் 34 ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்து வந்த இடதுசாரி ஆட்சியை மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தின் முதல் பெண் முதல்-மந்திரியாக கடந்த 20-ந் தேதி மம்தா பானர்ஜி பதவியேற்றார். பதவியேற்ற அன்றே தனது எளிமையை பறை சாற்றினார்.பதவியேற்றதும் கவர்னர் மாளிகையில் இருந்து தலைமைச் செயலகத்துக்கு நடந்தே சென்று முதல்-மந்திரி அலுவலகத்தில் பொறுப்பேற்றார். வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அவரை வாழ்த்தினார்கள். அப்போது ஏற்பட்ட நெரிசலில் பாதுகாப்பு தடுப்பு வளையங்கள், தடுப்பு கம்பிகள் போன்றவற்றை மக்கள் தள்ளி விட்டனர். முதல்-மந்திரி அலுவலகம் முன்பும் கும்பல் சேர்ந்ததால் பாதுகாப்பு போலீசார் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது தொடங்கிய மம்தாவின் அதிரடியான எளிமை இப்போதும் தொடருகிறது. இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு குண்டு துளைக்காத கார் மற்றும் அவருடைய பயணத்தின்போது முன்அறிவுப்பு செய்ய பைலட் கார் போன்றவை அளிக்கப்பட்டன. ஆனால், குண்டு துளைக்காத கார் மற்றும் பைலட் கார் ஆகியவற்றை திருப்பி அனுப்பிவிட்டார்.
மேலும், சாலையில் செல்லும்போது போக்குவரத்தை நிறுத்தி தனக்காக கூடுதல் ஏற்பாடுகள் எதையும் செய்ய வேண்டாம் என்றும் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். சாதாரண மக்களைப் போலவே போக்குவரத்து சிக்னலை மதித்து தனது காரும் சிக்னலில் நின்று செல்லும் என உறுதியாக தெரிவித்து விட்டார். அதுவும், கட்சியினர் அளித்த காரிலேயே இப்போதும் பயணம் செய்கிறார்.
இதனால், மம்தா பானர்ஜிக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து போலீசார் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். "பயணத்தின்போது கூடுதல் கார்கள், பைலட் கார், குண்டு துளைக்காத கார் எதுவும் தேவையில்லை என முதல்-மந்திரி மம்தா கூறி விட்டார்" என்று மாநில போலீஸ் டி.ஜி.பி. நபராஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
எனினும், மம்தா பாதுகாப்புக்காக சாதாரண உடை அணிந்த போலீசாரை அதிக அளவில் பணியில் அமர்த்தி இருப்பதாகவும், மம்தாவை சுற்றி வளையம் போல எப்போதும் அவர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் என்றும் முதல்-மந்திரியின் பாதுகாப்பு விஷயத்தில் எந்தவித சமரசமும் செய்ய முடியாது என்றும் நபராஜித் தெரிவித்தார்.
இதுபோல, முன் அறிவிப்பு இல்லாமல் பல்வேறு இடங்களுக்கு 'திடீர்' என விஜயம் செய்கிறார். அங்கு கூடி இருக்கும் மக்களுடன் நெருக்கமாக சென்று பேசுகிறார். கடந்த ஒரு வாரத்தில் எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனை மற்றும் பங்குர் நரம்பியல் மருத்துவமனை ஆகிய இரண்டு அரசு மருத்துவமனைகளில் 'திடீர்' என மம்தா ஆய்வு மேற்கொண்டார்.
ஆர்.ஜி.கர் மருத்துவமனைக்கு அவர் சென்றபோது அவரை நேரில் பார்ப்பதற்காக ஏராளமான கூட்டம் கூடி விட்டது. இதனால், நோயாளிகளுக்கு தொந்தரவு ஏற்படும் என்பதால் மருத்துவமனை வாசல் வரை சென்று விட்டு, அப்படியே திரும்பி விட்டார். மருத்துவமனைகளில் புதிய கருவிகள் வாங்கினால் மந்திரி மற்றும் எம்.எல்.ஏ.க்களின் தொடக்க விழாவுக்காக காத்திருக்க வேண்டாம் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
"இதற்கு முன்பு முதல்-மந்திரியாக இருந்தவர்களுக்கு வழக்கமாக முறையில் பாதுகாப்பு வழங்கினோம். ஆனால், மம்தாவின் அதிரடி நடவடிக்கைகளால் அவருக்கு பாதுகாப்பு வழங்க தினமும் புதிது புதிதாக யோசனை செய்ய வேண்டியது இருக்கிறது" என பாதுகாப்பு போலீசார் புலம்புகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக