இஸ்லாமாபாத், அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக இருக்கின்றன. அவற்றை தலீபான்களால் கைப்பற்ற முடியாது என்று பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கான் தெரிவித்து இருக்கிறார்.
பாகிஸ்தான் அணு ஆயுத நாடு ஆகும். அது நூற்றுக்கணக்கில் அணு ஆயுதங்களை தயாரித்து வைத்து உள்ளது. பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள், அணு ஆயுதங்களை கைப்பற்றி விட கூடும் என்ற அச்சம் அமெரிக்காவுக்கும்,
இந்தியாவுக்கும் இருக்கிறது. இதை அவ்வப்போது அந்த நாடுகள் வெளிப்படுத்தி வருகின்றன.இந்த நிலையில் அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவற்றை தலீபான்களால் கைப்பற்ற முடியாது என்றும் பாகிஸ்தானின் அணு விஞ்ஞானி கான் தெரிவித்து இருக்கிறார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அணு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்ட நாள் முதல் அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. அவை பற்றி மற்ற நாடுகள் கவலைப்பட தேவையில்லை. அவற்றை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்.
அணு ஆயுதங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் பாதுகாக்கப்படவில்லை. அவை எங்கே பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பதை ஒரு சிலர் மட்டுமே அறிவார்கள். அணு ஆயுதங்கள் பாதுகாக்கப்படும் இடங்களை அறிந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
இந்த ஆயுதங்கள் பாதாள சுரங்கத்துக்குள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றை சம்பந்தப்பட்டவர்கள் அல்லாமல் மற்றவர்கள் நெருங்க முடியாது. அவற்றை தலீபான்களால் கைப்பற்ற முடியாது.
அணு ஆயுதங்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை முன்னாள் பிரதமர் பூட்டோ வகுத்தார். எந்த தவறும் நேராதபடி அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
பூட்டோவுக்கு பிறகு பதவிக்கு வந்த ஜியால் உல் ஹக், மீர்சா அஸ்லாம் பெக் ஆகியோரும் அந்த பாதுகாப்பை மேலும் பலப்படுத்தினார்கள். அதற்கு பிறகு அவை மேலும் வலுப்படுத்துபட்டு, உள்நாட்டில் உள்ளவர்களாலும், வெளிநாட்டினராலும் அணுக முடியாத அளவுக்கு அவை பலப்படுத்தப்பட்டு உள்ளன.
பாகிஸ்தான் அணு உலைகள் தொடர்ந்து திருப்திகரமாக செயல்பட்டு வருகின்றன. யுரேனியத்தை செறிவூட்டும் பணியும் தடையில்லாமல் நடந்து வருகிறது. அணு உலைகள் ஆண்டுக்கு 8 முதல் 20 ஆயுதங்களை தயாரிக்கக்கூடிய திறன் உள்ளவை. இவ்வாறு அணு விஞ்ஞானி கான் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக