விவசாய நிலங்களை, விவசாயிகளிடம் இருந்து பறித்து ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் கொடுப்பதை தாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம் என்றும், அது சமுதாயத்தின் ஒரு பகுதியை மட்டும் வளர்ப்பதாகும் என்றும், அவ்வாறு மாயாவதி அரசு செய்யும் பட்சத்தில் அதில் உச்சநீதிமன்றம் தலையிடும் என்றும் கூறியுள்ளது உச்சநீதிமன்றம்.
சமீபத்தில் மாயாவதி அரசு உத்தரப்ரதேசத்தில் உள்ள நொய்டா அருகில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு, நில கையகப்படுத்துதல் சட்டத்தைப் பயன்படுத்தி அவரசமாக அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிலங்கள் ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் கொடுப்பதற்காக
கையகப்படுத்தப்பட இருந்தது. இது குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம், மாயாவதி அரசின் இந்த செயல் சட்டவிரோதமானது என்றும், ஒருதலைப் பட்சமானது என்றும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது என்றும் கூறோ கண்டனம் தெரிவித்து இருந்தது.
இதனை எதிர்த்து மாயாவதி அரசு, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் சதாசிவம், பட்நாயக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், உயர்நீதிமன்ற தீர்ப்பை ஆமோதித்ததோடு, விவசாய நிலங்களைப் பறித்து தொழிலதிபர்களிடம் கொடுப்பதை அனுமதிக்க முடியாது என்றும், அவ்வாறு மாயாவதி அரசு செய்தால் உச்சநீதிமன்றம் வேடிக்கை பார்க்காமல் நடவடிக்கை எடுக்கும் என்றும் மாயாவதி அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.
மேலும், யாருக்காக பிளாட்கள் கட்டப்பட இருக்கின்றன? என்ன விலைக்கு விற்பனை செய்யப்பட உள்ளன? கட்டப்போவது யார்? என்று கேள்விகளை எழுப்பி உள்ள உச்சநீதிமன்றம், மாயாவதி அரசு, அவசரகால சட்டத்தை பயன்படுத்தியதைக் கண்டித்துள்ளதோடு, தாங்கள் நந்திகிராம் போன்ற பிரச்சனைகள் நாடு முழுவதும் எழுவதை பார்த்துகொண்டு இருக்க முடியாது என்றும் கூறியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக