தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.6.11

தபால் நிலையங்களை மூடக்கூடாது: பிரதமர் மன்மோகன்சிங்க்கு, தங்கபாலு வேண்டுகோள்



தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
ஏழைஎளிய, நடுத்தர மக்களுக்கு காலம் காலமாய் 'கடுதாசி” மூலம் தங்களது உறவினர்கள் நண்பர்கள் மற்றும் தொழில்கள் தொடர்புக்கு உறுதுணையாய் இருந்து வருவது தபால்துறை. சமுதாயத்தில் தகவல் தொடர்பு செயல்பாடு தொடங்கியது முதல் இன்றளவும் அத்துறை சமூகத்தின் அனைத்துத்துறை வளார்ச்சிக்கும் பயன்பட்டு வருகிறது.
அதற்கென தமிழகத்தில் 12 ஆயிரம் நிலையங்கள் உட்பட நாடெங்கும் 1 1/2 லட்சம் தபால் நிலையங்கள் குக்கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை இயங்கி வருகின்றன. அவற்றில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் தகவல் தொடர்பில் வளர்ந்துள்ள வேறுபல விஞ்ஞான
நுட்பங்களையும் மற்றும் நிர்வாக வசதி, வாடகை போன்ற காரணங்களையும் காட்டி பல இடங்களில் தபால் நிலையங்களை மூடிவிட மத்திய அரசு முடிவு மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
அந்நடவடிக்கை முற்றிலும் தவறானது. ஏழைஎளிய, நடுத்தர மக்களின் நலனுக்கு எதிரானது. மத்திய அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது தகவல் தொடர்பு, தபால்துறைகளின் பாராளுமன்ற நிலைக்குழுவில் 5 ஆண்டுகள் உறுப்பினராக பணியாற்றியுள்ளேன்.
அப்போது நாடெங்குமுள்ள வங்கிகளை விட தபால் துறையின் வருவாய் கூடுதல் என்பதையும், சிறுசேமிப்பு போன்ற நிதி ஆதாரங்கள் வழியாக மத்திய அரசின் பல்வேறு மக்கள்நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதையும், மேலும் வேலை வாய்ப்புகளை அதிகமாக உருவாக்கித்தரும் துறையாக சேவை மனப்பான்மையோடு செயல்பட்டு வருவதை நினைவுறுத்தியும் அவ்வாறு இயங்கி வரும் அத்தபால் துறைக்கு நாடெங்கும் மேலும் புதிய நிலையங்கள் திறக்கப்பட வேண்டுமென்று பாராளுமன்ற நிலைக்குழுவில் அன்றைக்கு பரிந்துரை அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைத்தோம்.
அதேநிலைதான் இன்றைக்கும் தபால்துறையில் உள்ளது. எனவே எக்காரணம் கொண்டும் தபால் நிலையங்கள் மூடப்படக் கூடாது. மாறாக மேலும் கூடுதலாக திறக்கப்பட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும். வளர்ந்து வரும் தகவல் தொடர்புத்துறையின் வேறுபல காரணங்களால் தபால்துறை லாபம் ஈட்ட இயலவில்லை என்ற நிலை இருக்குமாயின் தபால் நிலையங்களை மூடாமல் செயல்பட தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
தேவைப்பட்டால் உரிய மானியங்களை வழங்கி ஏழைஎளிய, நடுத்தர மக்களின் தகவல் தொடர்பு சாதனமான தபால் நிலையங்கள் சீராக செயல்படவும், மேலும் பல நிலையங்களை திறந்து வைக்கவும் தபால்துறை ஊழியர்களுக்கு உரிய முறையில் ஊதியத்தை உயார்த்தியும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று பிரதமர் மன்மோகன்சிங் அவர்களையும், மத்திய தொலைத்தொடார்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில்சிபல் அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு தங்கபாலு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்: