டென்மார்க் 23.03.2011 புதன் மதியம்
நேற்று செவ்வாய் திரிப்போலி நகரில் உள்ள தனது மாளிகையின் முன்னாள் தோன்றிய கடாபி தனது ஆதரவாளர் மத்தியில் சுமார் ஐந்து நிமிடங்கள் ஆவேச உரை நிகழ்த்தினார். அத்தருணம் அவர் மேலை நாடுகளுக்கு எதிரான போரில் தான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்று சூளுரைத்தார். இது என்னுடைய வீடு, இது உங்களுடைய வீடு இதற்குள் எதிரி வர இடமளிக்க மாட்டேன். நமது படைகள் குறுங்கால அடிப்படையிலும், நீண்ட கால அடிப்படையிலும் போரை தொடரும். பதவி விலகி ஓடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை, ஏனென்றால் இது என்னுடைய வீடு என்று ஆவேசமாக குரல் எழுப்பி முடித்தார்.
நேற்று முன்தினம் லிபியாவில் பயங்கர இராணுவ படுகொலைகளை செய்து வந்த கடாபியின் மகன்
காமீஸ் கடாபி மரணமடைந்த வேதனை, அமெரிக்க, பிரிட்டன் கடற்படை கப்பல்களும், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களும் 20 ற்கும் மேற்பட்ட தோமாகுவாக் குண்டுகளை ஏவி லிபிய விமானப்படை தலைமையகத்தை தகர்ததால் அவருடைய தலைமைத் தளபதி குசேன் அல் வாபலி மரணமடைந்தமை போன்ற கோபங்கள் அவருடைய குரலில் தொனித்தன.கடாபியைப் பொறுத்தவரை குறுங்கால போருக்கே வெளிநாட்டு படைகள் தயாராக வந்துள்ளன என்று விளங்கியுள்ளார். ஆகவே அவர் தலைமறைவாகி நீண்ட கெரில்லா தாக்குதல்களை நடாத்துவதற்கு முனையலாம். காலத்தை நீடிக்க நீடிக்க வெளிநாட்டு படைகள் சலிப்படைந்துவிடும் என்பதே அவருடைய போர் வியூகமாக உள்ளது. ஆனால் லிபியப் பாலைவனம் கெரில்லா போருக்கு உகந்தல்ல என்கிறார்கள் மேலை நாட்டு நிபுணர்கள்.
நேற்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிளரி கிளின்டன் கடாபி விரைவில் பதவியில் இருந்து வெளியேறிவிடுவார் என்று கூறியிருந்தார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் கடாபி பதவியில் இருந்து வெளியேறியே ஆகவேண்டும் என்று கேட்டிருந்தார். இந்த இருவருக்கும் பதிலளிக்குமுகமாக சுரங்கத்தில் இருந்து வெளியே வந்த கடாபி பதவியை விட்டு போவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக