டென்மார்க் 23.03.2011 புதன் மதியம்
தற்போது வடக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கில் உருவாகியுள்ள மக்கள் புரட்சியால் அதிகம் வயிற்றுக் கலக்கத்திற்கு உள்ளாகியிருப்பது சவுதி மன்னர் குடும்பம்தான். புரட்சித் தீ பரவியதும் சவுதி மன்னர் அங்குள்ள மக்களுக்கு எண்ணற்ற சலுகைகளை அறிவித்தார். இப்போது உள்ளுராட்சி தேர்தல்களை அறிவித்து சிறிய அளவில் அதிகாரப் பரவலாக்கத்தை செய்யலாம் என்றும் புறப்பட்டுள்ளார். இன்று வெளியாகியுள்ள சவுதி மன்னரின் இணையச் செய்தி வரும் 19 மே 1432 இஸ்லாமிய வருடம் இந்தத் தேர்தல்கள் நடக்கும் என்று தெரிவிக்கிறது. இதனுடைய கிறீத்தவ திகதி இவ்வாண்டு 23ம் திகதி ஏப்ரலாகும். சவுதி மன்னரின் கொன்ஸ்சவேட்டிவ் முறையிலான குடும்ப சர்வாதிகார ஆட்சியால் நொந்துபோன மக்கள் அங்கும் உரிமை கேட்க
களமிறங்குவார்கள் என்ற அச்சம் மன்னர் குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ளது. அதேவேளை வீணாக சலுகைகளை அறிவிக்கும் மன்னர் குடும்பம் படுத்துக்கிடந்த சவுதி மக்களின் மூக்கில் தும்பு விடும் வேலையை செய்து வருவது கவனிக்கத்தக்கது. இப்போது மட்டும் ஏன் இவ்வளவு சலுகைகளும் கிடைக்கின்றன.. வடக்கு ஆபிரிக்க புரட்சிக்கு பயந்தே இவை கிடைக்கின்றன. இதற்கு முன் ஏன் கிடைக்கவில்லை, அப்படியானால் மன்னர் குடும்பம் முன்னர் செய்தது சரியா.. ? என்ற கோணத்தில் சிந்தனைகள் வளரும்போது சவுதியிலும் சிக்கல் உருவாகலாம். சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்ற பழமொழி சவுதியில் சபையேறப்போகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக