தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.3.11

அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா: எதிர்த்து மகிந்த ராஜபக்ச அதிரடி உத்தரவு !


லிபியாவுக்கு எதிரான படை நடவடிக்கையை ஆரம்பித்துள்ள அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற மேற்கு நாடுகளைக் கண்டித்தும், லிபிய ஜனாதிபதி கேணல் கடாபிக்கு ஆதரவாகவும் போராட்டங்களை நடத்துமாறு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிய வருகின்றது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கத் தலைவரும், மேல் மாகாண ஆளுநருமான அலவி மௌலானா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா
ஜனாதிபதியின் மூத்த ஆலோசகருமான ஏ.எச்.எம்.அஸ்வர் ஆகியோரை மையப்படுத்தி இப் போராட்டங்களை நடத்துமாறு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்துடன், தொழிற்சங்கங்கப் போராட்டம் என்ற ரீதியிலேயே இப் போராட்டங்களை நடத்துமாறு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியதாகவும் கூறப்படுகின்றது. லிபிய ஜனாதிபதி கேணல் கடாபி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பர் என்ற ரீதியிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

அதேவேளை, லிபியா மீது மேற்கத்தைய நாடுகள் மேற்கொண்டு வருத் படை நடவடிக்கைகளுக்கு மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா நேற்றுக் கண்டனம் தெரிவித்துள்ளார்.  வேறொரு நாட்டின் மக்களின் உரிமைகளில் தலையிட வேறெவருக்கும் அதிகாரம் கிடையாது என கொழும்பில் செய்தியாளர்களிடம் குறிப்பிட்ட அவர், லிபியாவில் தலைமைத்துவ மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் அதனை அந்த நாட்டு மக்களே மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். இது குறித்து அவர் ஊடகவியலாளர்களுக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது:

`லிபிய மக்களின் சுதந்திரத்தில் தலையிட அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. ஈராக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஏகாதிபத்தியத் தாக்குதல் 48 நாடுகளில் தொடர்கிறது. லெபனான், யேமன் மற்றும் சகல அரபு நாடுகள் மீதும் எதிர்காலத்தில் இந்த ஏகாதிபத்தியத் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சம் காணப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தமது நிபுணர்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பி போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை செய்ய முயற்சிக்கின்றார். ஆனால் விடுதலைப் புலிகள் கடந்த காலங்களில் மேற்கொண்ட மனிதவுரிமை மீறல்கள் அவர்களின் கண்களுக்குத் தெரியவில்லை.

லிபியாவுக்கு எதிரான மேற்குலக நாடுகளின் படைநடவடிக்கைகளைக் கண்டித்து மேற்கொள்ளப்படவுள்ள போராட்டங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறும் ஜும்மா தொழுகையை அடுத்து ஆரம்பித்து வைக்கப்படும்` என அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.


வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மேற்கத்தைய நாடுகள் வற்புறுத்தி வருகின்றன.

இந் நிலையில், லிபியா மீதான தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிறிலங்கா அரசாங்கம் மேற்கத்தைய நாடுகளுக்கு எதிரான போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவையின் அனுமதியுடன் லிபியா மீது அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற மேற்கத்தைய நாடுகளின் கூட்டுப்படையினர் மேற்கொண்டு வரும் படை நடவடிக்கைகளுக்கு தேசிய சுதந்திர முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இன்று (22.03.11) தேசிய சுதந்திர முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக நாடுகளை சமாதான பாதைக்கு கொண்டுச் செல்வதற்கே ஐக்கிய நாடுகள் சபைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், உலக நாடுகளில் சமாதானம் நிலைப்பதற்காக போர் ஒன்றுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேலவை அனுமதி வழங்கியதை தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தேசிய சுதந்திர முன்னணி இவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

அத்துடன், அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு லிபியாவிலுள்ள பொதுமக்களை பாதுகாப்பது நோக்கமல்ல எனத் தெரிவித்துள்ள தேசிய சுதந்திர முன்னணி, அங்குள்ள எண்ணெய் வளத்தை சுரண்டுவதே மேற்குலக நாடுகளின் நோக்கம் எனவும் தனதறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதேவேளை, மேற்குலக நாடுகளினால் லிபியா மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி ஏற்கனவே எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 கருத்துகள்: