தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.3.11

விளாடிமிர் புற்றின் – அதிபர் டிமிறிட்ஜ் மெடேவ் மோதல் ஆரம்பித்தது


வடக்கு ஆபிரிக்க புயல் சீனாவிற்குள் போக முன்னர் ரஸ்யாவிற்குள் போகப்போகிறதா..?
லிபியாவுக்கு எதிராக ஐ.நாவின் பாதுகாப்புச் சபை எடுத்த தீர்மானத்திற்கு எதிராக ரஸ்யா வீட்டோ அதிகாரத்தை பாவிக்காமல் தவிர்தது எப்படி.. அதற்குக் காரணம் அதிபரான டிமிறிட்ஜ் மெடேவ்தான். ரஸ்யாவின் உச்சகட்ட வெளிநாட்டு விவகாரத்தைத் தீர்மானிப்பது பிரதமரான விளாடிமிர் புற்றின் அல்ல அதிபரான டிமிறிட்ஜ் மெடேவ்தான்.

டிமிறிட்ஜ் மெடேவ் எடுத்த தீர்மானம் இப்போது புற்றினுக்கும் அவருக்கும் இடையே வெளிப்படையான மோதலாக மாறியிருக்கிறது. ஐ.நா பாதுகாப்புச்சபை லிபியாவுக்கு எதிராக எடுத்த தீர்மானமானது ஒரு பழையகால சிலுவை யுத்தம் போன்றது என்று நேற்று முன்தினம் ரஸ்ய பிரதமர் விளாடிமிர் புற்றின் கூறியிருந்தார்.
இவருடைய கருத்து உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இப்படியொரு கருத்து ரஸ்யாவுக்கு இருந்தால் அதை ரஸ்யா சார்பில் வெளியிட வேண்டியது விளாடிமிர் புற்றின் அல்ல அதிபரான டிமிறிட்ஜ் மெடேவ்தான். ஆனால் அவரை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் கருத்துரைத்த புற்றினின் செயல் உலக நாடுகளுக்கு அவர் மீது மெல்லிய சந்தேகத்தை ஏற்படுத்தியது.
ஸ்டாலின் காலத்து ரஸ்யாவின் அரசியல் இரவுகள் ஆரம்பித்துவிட்டனவா என்ற சந்தேகத்தையும் கிளப்பியது..
இது இவ்விதமிருக்க..
நேற்று சுலோவேனியா சென்று, அங்கு மக்கள் மத்தியில் உரையாற்றிய புற்றின் நாட்டின் அதிபர் டிமிறிட்ஜ் மெடேவ் சரியான பாதையில் செல்ல வேண்டும் என்ற கண்டனக் குரலை முன் வைத்தார். காலத்துக்கு ஏற்ற வகையில் அதிபர் தனது கொள்கையை வகுக்க வேண்டும் என்றும் அவரை வெளிப்படையாக விமர்சித்தார்.
இதுவரை புற்றினின் சுண்டு விரலுக்கு ஏற்ப ஆடுபவர் என்று வர்ணிக்கப்பட்ட டிமிறிட்ஜ் மெடேவ் அவருடைய கைகளை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டார் என்ற உண்மையை தானாகவே தெருவில் போட்டும் உடைத்தார்.
ஆக,
அதிபருக்கும், பிரதமருக்குமான கருத்து மோதல் சந்திக்கு வர லிபிய விவகாரம் காரணமாக அமைந்துவிட்டது. ஒருவர் அதிபர் பதவியில் இரண்டு தடவைகளுக்கு மேல் இருக்க முடியாது என்ற காரணத்தால் டிமிறிட்ஜ் மெடேவை அதிபராக நிறுத்திவிட்டு, மீண்டும் அதிபராக வருவதற்கு காத்திருக்கும் ஒருவர் விளாடிமிர் புற்றின்.
இலவு காத்த கிளிக்கு.. தான் காப்பது வெறும் பஞ்சு என்பது தெரிந்துவிட்டது..
அடுத்த தேர்தலில் குதிப்பதற்கும், ரஸ்யர்களின் வாக்குகளை அள்ளுவதற்கும் அவர் வகுத்துள்ள வியூகமாகவே இந்தச் செயல் இருக்கிறது. ஆனால் கைப்பொம்மைகளை ஆட்சிக்கு கொண்டு வருவதும், பின் அதே கைப்பொம்மைகளாலேயே தூக்கி வீசப்படுவதும் ரஸ்ய கம்யூனிச சர்வாதிகார அரசியலில் ஒன்றும் புதுமையானதல்ல.
இலவம்பஞ்சு பழுக்கும் பழம் தின்பேன் என்று காத்திருந்த கிளி அது பஞ்சாய் பறந்தபோது ஏமார்ந்து போனது. அதுபோலத்தான் புற்றினின் அடுத்த அதிபர் பதவிக் கனவும் இலவு காத்த கிளியின் கதையாகப் போவது தெரிகிறது.
பல தடவைகள் புற்றினின் ஆட்களால் நஞ்சு கொடுத்து கொல்ல எத்தனிக்கப்பட்டு பின் துப்பாக்கிதாரி ஒருவனால் சுடப்பட்டு இறந்தவர் அனா பொலிற்றிவ்கோவ் காயா என்ற பெண் எழுத்தாளர். அவர் புற்றினின் ரஸ்யா என்ற புத்தகத்தை எழுதியமைக்காவே சுடப்பட்டார் என்று கூறப்படுகிறது. புற்றினின் ரஸ்யா என்ற நினைப்பு அவருடைய மனதில் இருந்து இன்னமும் விலகவில்லை என்பதே அவருடைய தற்போதைய கோபமாகும்.
மத்திய கிழக்கு, வடக்கு ஆபிரிக்காவில் ஏற்பட்ட மக்கள் போராட்டம் ஆசியாவிற்குள் போகும் என்று எதிர் பார்க்க அது எல்லாவற்றையும் உடைத்துக் கொண்டு ரஸ்யாவிற்குள் நுழைந்துவிடுமோ என்ற எண்ணத்தை புற்றினின் இந்த மோதல் பிரகடனம் வெளிப்படுத்துகிறது.

0 கருத்துகள்: