தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.10.12

சாண்டி புயலால் இன்று காலை கடல் நீரில் கண்விழித்தது நியூயோர்க்


அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, சாண்டி சூறாவளி யை, நியூயோர்க்கை ஸ்தம்பிக்க செய்த மிகப்பெரிய இயற்கை அனர்த்தமாக அறிவித்துள்ளார்.நியூயோர் க், நியூஜேர்சி பகுதிகளை முற்றாக வெள்ளத்தில் அ மிழ்த்திய சாண்டி சூறாவளி தற்போது கரை கடந்து, கனடாவுக்கு நகர்ந்துள்ளது. நேற்றைய இரவு, தாம் எதிர்கொண்ட மிக ஆபத்தான இரவாக கருத்து தெரி வித்துள்ள நியூயோர்க் மக்கள், இன்று காலை
கண் விழிக்கும் போது கடல்நீரில்தமது உடமைகள் அனைத்தும் அமிழ்ந்திருப்பதாக அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.

நேற்றிரவு சாண்டி சூறாவளி நியூயோர்க்கை தாக்கிய போது, நியூயோர்க்கின் சப்வே போக்குவரத்து சேவைகள் முற்றாக ஸ்தம்பிதமானதுடன், சுமார் 13 அடி உயரத்திற்கு, கடல் நீர் நியூயோர்க் நகருக்குள் புகுந்திருந்தது.  சுமார் 6 மில்லியன் மக்கள் மின்சாரமின்றி அவதிப்பட்டுள்ளனர்.

அந்நகரின் மின்சக்தி வழங்கிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், ஒரு கட்டத்தில் துணை மின் வழங்கிகள், சூறாவளியில் சிக்கி வெடித்து சிதறியதில் அருகிலிருந்த 50 வீடுகள் தீப்பிடித்து முற்றாக எரிந்து அழிந்து போயுள்ளன.


இதுவரை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் சுமார் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நியூயோர்க்கில் மாத்திரம் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 50 மில்லியன் மக்கள் சூறாவளியால் பாதிப்புக்கு உள்ளானார்கள். சுமார் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் தங்களது வீடுகளை காலிசெய்து உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு உடனடியாக நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

சூப்பர் புயல் என வர்ணிக்கப்படும் சாண்டி தற்போது கனடாவின் கிழக்கு பகுதியை தாக்குதற்காக சென்றுள்ளது. இதை தொடர்ந்து டொரொண்டோவில் கடும் மழையுடன் கூடிய புயல் காற்று வீசத்தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கடந்த வாரம், சாண்டி புயலால் கரிபியன் தீவுகளில் மட்டும் 80 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டிருந்தனர். நேற்றைய சூறாவளி தாக்கத்தில் அட்லாண்டிக் சிட்டியின் முக்கால்வாசி பகுதி நீருள் அமிழ்ந்துள்ளது. அங்கு 30,000 மக்கல் இடம்பெயர்ந்துள்ளனர்.

நியூயோர்க்கின் சப்வே போக்குவரத்து சேவைகள் 108 வருடங்கள் பழமை வாய்ந்தன. ஆனால் ஒரு நாள் கூட இவ்வாறான ஒரு அழிவை தாம் சந்தித்ததில்லை என நகரின் போக்குவரத்து இயக்குனர் ஜோசப் லோடா தெரிவித்துள்ளார்.

தாழ்நிலை மான்ஹட்டன் பகுதியிலிருந்து 375,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தாழ் நிலை மான்ஹட்டன் பகுதி முற்றாக கடல் நீரில் அமிழ்ந்துள்ளதாக நியூயோர்க் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மான்ஹட்டனில் மாத்திரம் 500,000 வீடுகளுக்கு மின்சாரம் முற்றாக தடைப்பட்டுள்ளது. நியூயோர்க் பல்கலைக்கழக மருத்துவமனியிலிருந்து 200 நோயாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அங்கு மின்சாரம் தடைப்பட்டிருந்ததுடன், பாதுகாப்புக்காக இயக்கப்பட்டுக்கொண்டிருந்த ஜெனரேட்டர்களும் செயலிழந்து போயுள்ளன.

தாம் எதிர்பார்த்தை விட சூறாவளியின் தாக்கம் கோரமாக இருந்ததாகவும், எனினும் தற்போது சூறாவளி நகர்ந்து சென்றுள்ளதால் நகரத்திற்குள் புகுந்த கடல் நீர் மீண்டும் வடிவடையத்தொடங்கியுள்ளதாகவும் நியூயோர்க் மேயர் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க், நியூஜேர்ஸி, பகுதிகளில் சாண்டி சூறாவளி ஏற்படுத்தி சென்றுள்ள அழிவுகள் கிட்டத்தட்ட 30 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என நம்பப்படுகிறது.
நேற்று பௌர்ணமி தினம் என்பதால் இச்சூறாவளியின் தாக்கம் அதிகரித்திருக்கலாம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சாண்டி அழிவுகள் குறித்து MSNBC செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள வீடியோ தொகுப்பு

0 கருத்துகள்: