அமெரிக்காவில் சாண்டி புயல் அச்சுறுத்தல் காரணமாக 7,100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நியூயார்க் நகரில் 3 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற மேயர் உத்தரவிட்டார். அங்குள்ள சுரங்க ரெயில்கள், பஸ்கள் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.கரீபியன் கடல் பகுதியில் கடந்த வாரம் உருவாகிய சாண்டி என்ற புயல் ஜமைக்கா, கியூபா ஆகிய நாடுகளை தாக்கியது. அங்கு இதன் காரணமாக பெய்த மழை-நிலச்சரிவுகளில் 66 பேர் பலியானார்கள். பின்னர் புயல் அமெரிக்காவின்
கிழக்கு கடற்கரையை நோக்கி நகர்ந்தது.
தற்போது இந்த புயல் நியூயார்க் நகருக்கு தென்கிழக்கே 615 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது விரைவில் அமெரிக்காவின் மத்திய அட்லாண்டிக் மாநிலங்கள் வழியாக கரையை கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வெர்ஜினியா, மேரிலாந்து, நியூஜெர்சி, நியூயார்க், பிலடெல்பியா, வாஷிங்டன், பாஸ்டன் ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நிïயார்க் உள்பட பல முக்கிய நகரங்களில் போர்க்கால அடிப்படையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புயல் காரணமாக அமெரிக்காவில் 7,100 விமானங்கள் நேற்று முதல் ரத்து செய்யப்பட்டன. இவற்றில் சுமார் 3 ஆயிரம் சர்வதேச விமானங்களாகும். மற்றவை உள்ளூர் சேவை விமானங்கள். இதனால் விமான பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். சில நிறுவனங்கள் பயணிகளை ஓட்டல்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்தன. இதனால் ஓட்டல்களில் கூட்டம் அலைமோதியது.
மீண்டும் செவ்வாய்க்கிழமை விமான சேவை தொடங்கப்படும் எனவும் மழை, மோசமான வானிலை நிலவினால் மேலும் தாமதம் ஏற்படும் என்றும் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதேபோல இங்கிலாந்து நாட்டிலிருந்து நிïயார்க் செல்லும் அனைத்து விமானங்களையும் பிரிட்டீஷ் ஏர்வேஷ் நிறுவனம் ரத்து செய்து விட்டது.
நியூயார்க் நகரிலுள்ள சுரங்க ரெயில்கள் மற்றும் பஸ்கள் சேவையும் அடியோடு நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் நேற்று பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தார்கள். நியூயார்க் பங்கு சந்தையும் மூடப்பட்டது.
மேலும் நியூயார்க் நகரில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 3 லட்சத்து 75 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி நகர மேயர் மைக்கேல் உத்தரவிட்டார். அத்துடன் கடலில் 3 அடி உயரத்துக்கும் மேல் அலைகள் எழும் என்றும் 12 அங்குலம் (30 சென்டி மீட்டர்) மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கடக்கும் பகுதியில் சுமார் 5 கோடி பேர் வசிக்கிறார்கள். இவர்கள் இரண்டொரு நாள் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரமும் பாதிப்பு அடைந்தது. ஒபாமா, மிட் ரோம்னி தங்கள் சுற்றுப்பயணத்தை மாற்றி அமைத்து வருகிறார்கள்.
அமெரிக்காவில் கிட்டத்தட்ட 11 மாநிலங்களில் மின்சாரம் இன்றி காணப்படுகிறது. ஏறக்குறைய 3.1 லட்சம் மக்கள் இருளில் தத்தளிக்கின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக