தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.11.11

ராணுவத்திற்கு ஆள் எடுக்கிறார்கள்: ஆவடியில் ஒரு வாரம் தேர்வு முகாம்

சென்னை, நவ. 2- இந்திய ராணுவத்தில் சிப்பாய், எழுத்தர், ஸ்டோர் கீப்பர், நர்சிங் உதவியாளர் உள்பட பல்வேறு பணிகளுக்கு ஆள் எடுக்கிறார்கள். இதற்கான தேர்வு முகாம் ஆவடியில் வருகிற 15-ந்தேதி தொடங்கி ஒரு வாரம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்திய ராணுவத்தில் பணியாற்ற சிப்பாய் (பொது மற்றும் தொழில்நுட்பம்), நர்சிங் உதவியாளர், டிரேட்மேன், எழுத்தர், ஸ்டோர் கீப்பர் ஆகிய பணிகளுக்கு ஆள்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான ஆள்சேர்ப்பு முகாம் சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பயிற்சி மையத்தில் வருகிற 15-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடக்கிறது.
சென்னையில் உள்ள ராணுவ பணியாளர் தேர்வு அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள இறீந்த முகாமில், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாநிலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேற்கண்ட அனைத்து பகுதியையும் சேர்ந்தவர்களுக்கு சிப்பாய் (தொழில்நுட்பம்), நர்சிங் உதவியாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்வு முகாம் 15-ந் தேதி அன்று நடைபெறும்.
சிப்பாய் (பொது) பதவிக்கான தேர்வு முகாம் வேலூர், கடலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தோருக்கு 16-ந் தேதியும், சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு 17-ந் தேதியும் நடத்தப்படும். இதேபோல், சிப்பாய் (டிரேட்மேன்) பணிக்கான தேர்வு முகாம் அனைத்து மாவட்டத்தினருக்கும் சேர்த்து 18-ந் தேதி அன்றும், எழுத்தர், ஸ்டோர் கீப்பர் பணிக்கான முகாம் 19-ந் தேதியும் நடைபெறும்.
சிப்பாய் (தொழில்நுட்பம்) பணிக்கு பிளஸ்-2 தேர்ச்சியுடன் இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களை (குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்) படித்திருக்க வேண்டும். நர்சிங் உதவியாளர் பதவிக்கு உயிரியல் பாடம் (40 சதவீதம்) படித்திருக்க வேண்டும். சிப்பாய் (பொது) பதவிக்கு 10-ம் வகுப்பில் 45 சதவீதம் மதிப்பெண் அவசியம். சிப்பாய் (டிரேட்மேன்) பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும். இதர டிரேட்மேன் பதவிகளுக்கு 10-ம் வகுப்பு முடித்துவிட்டு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எழுத்தர், ஸ்டோர் கீப்பர் (தொழில்நுட்பம்) பணிகளுக்கு பிளஸ்-2 தேர்ச்சி தேவை. கலை, அறிவியல், வணிகம் அனைத்து பிரிவினரும் தகுதி உடையவராவர். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் அவசியம். வயது வரம்பை பொருத்தவரையில், சிப்பாய் (பொது) பணிக்கு 171/2 வயது முதல் 21 வரை. இதர பதவிகளுக்கு 171/2 வயது முதல் 23 வரை இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

0 கருத்துகள்: