உடனேயே தாக்குதலிற்கு திட்டமிட்டதாகவும், திட்டமிட்டபடி எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் ஒசாமா கொல்லப்பட்டதாகவும் அமெரிக்காவின் பயங்கரவாத்த்திற்கு எதிரான நடவடிக்கை ஆலோசகர் ஜான் பிரீனன் கூறியுள்ளார்.
தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கை பற்றி பாகிஸ்தான் அரசுக்கோ அல்லது அந்நாட்டு இராணுவத்திற்கோ ஏதும் தெரியாது என்றும், நடவடிக்கை முடியும் தருவாயில்தான் பாகிஸ்தான் போர் விமானம் ஒன்று, நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு ஹெலிகாப்டரை நெருங்கியதாகவும், ‘நல்ல வேளையாக’ அந்த ஜெட் விமானம் ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தாமலேயே சென்று விட்டது என்றும் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்!
அமெரிக்க அதிபர் மட்டுமல்ல, அந்நாட்டு அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளண்டனும் பாகிஸ்தானிற்கு நன்றி கூறியுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் தங்களுடைய கூட்டாளியாக தொடரும் என்று ஹில்லாரி கூறியதையும் கவனிக்க வேண்டும். எனவே ஏதோ பாகிஸ்தானின் உதவியில்லாமல், ஒசாமா இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, தனித்து திட்டமிட்டு, ஒரு அதிரடி நடவடிக்கை எடுத்து ஒசாமாவை கொன்றுவிட்டதுபோல் ஒரு தோற்றத்தை அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு ஆலோசகர் ஜான் பிரீனன் ஏற்படுத்த முயற்சிப்பதில் பல உள் திட்டங்கள் உள்ளது.
தீராத தலைவலிக்கு தீர்வு
“ஒசாமா பின் லேடனும், அல் கய்டா இயக்கத்தின் முக்கிய தலைவர்களும் பதுங்கியிருக்கும் இடம் எங்கிருந்தாலும் அங்கு நேரடியாக தாக்குதல் நடத்துவோம்” என்று அமெரிக்க அரசு அறிவித்த நாள் முதல் பாகிஸ்தான் அரசுக்கும், இராணுவத்திற்கும் ஒரு பெரும் பிரச்சனை ஏற்பட்டது. அல் கய்டா, தாலிபான் தலைவர்கள் பதுங்கியுள்ள தகவல் கிடைத்துள்ளது என்று கூறி, பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் உள்ள வசிரிஸ்தானில் அமெரிக்க இராணுவத்தினர் ட்ரோன் எனும் ஆளில்லா விமானங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி வந்தது. அப்படிப்பட்ட தாக்குதல்களில் பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பது சர்ச்சையே. ஆனால், பல நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டவர்கள் அங்கு வாழும் பழங்குடியின மக்களே. தங்கள் நாட்டின் எல்லைக்குள் அமெரிக்க இராணுவம் நடத்தும் இப்படிப்பட்ட அத்துமீறிய தாக்குதல்கள் பாகிஸ்தான் அரசுக்கும், இராணுவத்திற்கும் பெரும் தலைவலியாக இருந்தது. பாகிஸ்தான் அரசும், இராணுவமும் அமெரிக்காவின் கொத்தடிமையா என்று அந்நாட்டு மக்கள் சாலையில் வந்து போராடும் நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலைக்கு முடிவு காணவும், அதே நேரத்தில் அமெரிக்க அதிபருக்கு உள்ள ஒரு நெருக்கடிக்கு வழி தேடவும் பாகிஸ்தானின் அயல் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலைவர் சுஜா பாஷா அமெரிக்கா சென்றார். அந்த பயணத்தில்தான் ஒசாமாவை காட்டிக்கொடுக்கும் ‘டீல்’ ஏற்பட்டது என்பது இன்றைய செய்தியாகும்.
பாகிஸ்தானின் உளவு அமைப்பிற்குத் தெரியாமல் ஒசாமாவோ அல்லது அல் கய்டா, தாலிபான் தலைவர்களோ பாகிஸ்தானில் மட்டுமல்ல, ஆப்கானிஸ்தானில் கூட பாதுகாப்பாக பதுங்கியிருக்க முடியாது. ஏனெனில், இந்த இரு அமைப்புகளை பலப்படுத்தியதும், ஆயுத பாணியாக்கி, திறமையான பயங்கரவாத அமைப்புகளாக்கியதிலும் ஐ.எஸ்.ஐ.க்கும், பாகிஸ்தான் இராணுவத்திற்கும் பெரும் பங்கு உள்ளது. சுருங்கக் கூறின், அல் கய்டா, தாலிபான் அமைப்புக்குள் ஐ.எஸ்.ஐ.யின் கைகளாக பல நூற்றுக்கணக்கான ‘ஜிஹாதிகள்’உள்ளனர். ஐ.எஸ்.ஐ.யின் ஆதரவோடுதான் இத்தனை ஆண்டுக்காலம் ஒரு குறுகிய நிலப்பரப்பில் பாதுகாப்பாக ஒசாமாவும், தாலிபான் தலைவர் முல்லா உமரும் வாழ முடிகிறது என்பது அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் தெரியும். அதனால்தான் ஆஃப்கானிஸ்தானையும் தாண்டி நேரடித் தாக்குதல் நடத்தும் திட்டத்தை அமெரிக்க இராணுவம் கையாண்டது. அதற்குக் கிடைத்த பலன்தான் வாஷிங்டனில் ஏற்பட்ட இந்த டீல் என்கிறார்கள்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கும் தனது படைகளை வெற்றிகரமாக வெளியேற்றிக்கொள்ள ஒரு வழி தேவைப்பட்டது. எனவே, தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமெரிக்காவின் அத்துமீறலை முடிவிற்குக் கொண்டு வர, தங்கள் பாதுகாப்பில் இருந்த ஒசாமாவை பாகிஸ்தான் இராணுவமும், உளவு அமைப்பும் காட்டிக் கொடுத்துவிட்டன என்பதே உண்மை என்கின்றன அந்த செய்திகள்!
அபோட்டோபாத் நகரில் ஒசாமா பின் லேடன் பதுங்கியிருந்த கட்டடத்தில் இருந்து 200 கஜ தொலைவில்தான் பாகிஸ்தான் இராணுவத்தின் அதிகாரிகளை பயிற்றுவிக்கும் காக்குல் இராணுவ அகாடமி உள்ளது! இது ஒசாமா எந்த அளவிற்கு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளார் என்பதற்கு அத்தாட்சியாகும். எனவே பாகிஸ்தான் இராணுவத்தின் மெளன சம்மதத்துடன்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது கண்கூடு.
இன்று காலை வெளியான மற்றொரு செய்தியையும் கவனிக்க வேண்டும். அமெரிக்க அதிரடிப் படை நடவடிக்கை தொடங்குவதற்கு முன்னர், அந்த கட்டடத்திற்கு அருகில் இருந்து வீடுகளின் விளக்குகளை அவித்துவிடுமாறு கட்டளையிட்டுள்ளனர். அதன் பிறகு துப்பாக்கிச் சத்தமும், குண்டுகள் வெடிக்கும் சத்தமும் சிறிது நேரம் கேட்டுக்கொண்டிருந்ததாக அப்பகுதி மக்கள் கூறியதாக பாகிஸ்தான் நாளிதழ்களில் வந்துள்ளது. எனவே பாகிஸ்தான் இராணுவத்தின் பங்கேற்பு இல்லாமல் இந்த நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளதே தவிர, அதற்கு தெரியாமல் நடக்கவில்லை என்பது உறுதியாகிறது.
அல் கய்டாவும் அல் ஃபைடாவும்
ஒசாமா பின லேடன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க படைகள் ஆஃப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதற்குள் அங்கு அமையும் கூட்டணி அரசில் தங்கள் ஆட்களை அமைச்சர்களாக்க அமெரிக்கா உதவ வேண்டும் என்கிற உறுதிமொழியை பாக். இராணுவமும், ஐ.எஸ்.ஐ.யும் பெற்றுள்ளதாகவும் ஒரு செய்தி உள்ளது. அது மட்டுமல்ல, ஒசாமாவை கொல்ல உதவியதற்காக, பாகிஸ்தான் இராணுவத்திற்கு தடையற்று உதவவும் (இப்போது நிபந்தனை உள்ளது) அமெரிக்க உறுதியளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
நியூ யார்க் இரட்டை கோபுரங்கள் மீது 2001ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலிற்குப் பிறகு அமெரிக்கா மேற்கொண்ட ‘பயங்கரவாததிற்கு எதிரான போரில்’ அதன் கூட்டாளியாகத் திகழ்ந்த பாகிஸ்தானிற்கு, அமெரிக்கா அளித்துள்ள நேரடி நிதியுதவி மட்டும் - 8 ஆண்டுக் காலத்தில் - 19.5 பில்லியன் டாலர்கள் (ஒரு பில்லியன் = 100 கோடி). இந்த நிதியுதவியில் ‘பாதுகாப்பிற்காக’ அளிக்கப்பட்டது மட்டும் 13.3 பில்லியன் ஆகும். இந்த நிதியுதவியால்தான் பாகிஸ்தான் இராணுவம் தன்னை மிகவும் பலப்படுத்திக்கொண்டது மட்டுமின்றி, தனது இரகசிய நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்திக்கொண்டது! அப்படி இரகசியமாக செலவிடப்பட்ட பணத்தில்தான் மும்பையின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கெல்லாம் நிதியுதவி செய்யப்பட்டது. இதெல்லாம் அமெரிக்காவிற்குத் தெரியாததல்ல, ஆனால், அதன் அரசியலிற்கு இதையெல்லாம் மறைக்கிறது. அல் கய்டாவால் கிடைத்த இந்த நிதி வரவை அந்நாட்டு நாளிதழ்கள் அல் ஃபைடா (இலாபம்) என்று வர்ணிக்கின்றனர்!
எனவே, இப்போது ஒசாமா பின் லேடனை தீர்த்துக்கட்ட உதவியதன் மூலம், எவ்வித நிபந்தனையுமின்றி, அமெரிக்காவின் நிதி மழை தொடர பாகிஸ்தான் இராணுவமும், ஐ.எஸ்.ஐ.யும் உறுதி செய்துகொண்டுவிட்டன.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, தங்களது மாபெரும் எதிரியை வீழ்த்திவிட்ட பெருமைக்காக பாகிஸ்தான் இராணுவத்தை அது அன்புடன் அணுசரித்துப் போகும். அமெரிக்க அரசிற்கும், பாகிஸ்தானின் இராணுவத்திற்கும், அதன் உளவு அமைப்பிற்கும் ஏற்பட்டுள்ள இந்த ‘டீல்’இந்த நடவடிக்கையோடு முடியக்கூடியதல்ல, அது தொடரும்.
எப்படித் தொடருமென்றால், அது பாகிஸ்தானின் ஜனநாயகத்திற்கும், இந்தியாவின் பாதுகாப்பிற்கும் பெரும் சவாலாக முடியும். குறுகிய எதிர்காலத்தில் பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம். மீண்டும் ஒரு இராணுவ ‘புரட்சி’ ஏற்பட்டு, ஜெனரல் அஷ்ஃபக் கயானி அதிபராகலாம். அதனை ஒப்புக்காக எதிர்த்துவிட்டு, பிறகு பர்வேஷ் முஷாரஃப்பிற்கு ஆதரவளித்ததுபோல் ஆதரவளிக்கலாம். ஆஃப்கானிஸ்தானில் தற்போதுள்ள ஆட்சிக்கு பதிலாக பாகிஸ்தான் இராணுத்தின், உளவு அமைப்பின் முழுமையான பங்கேற்புடன் கூடிய ஆட்சி அமையலாம். தற்போது இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு தடையேற்படலாம். அது மற்றுமொரு பயங்கரவாத தாக்குதலின் விளைவாகவும் ஏற்படலாம்.
அமைதியை உறுதி செய்யும் ஜனநாயக அரசியலிற்கு, இரகசிய அரசியல் என்றைக்கும் பகையே. அது குறுகிய எதிர்காலத்தில் வெளிப்படும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக