தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.10.11

ராம்லீலா மைதானத்தில் கம்பீரமாக இந்திய தேசியக் கொடியை அசைத்த கிரண்பேடிக்கு அசைய முடியாத ஆப்பு


கிரண் பேடி. இந்தியக் காவல் பணிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றவர். குடியரசுத் தலைவரின் கேலன்டிரி விருது, ராமன் மகாசேசே விருதுக்குச் சொந்தக் காரர்.
1980 -ம் வருடம் விதிமுறைகளை மீறி நிறுத்தியதாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் காரைக் கயிறு கட்டி இழுத்துச் சென்றவர். அந்தச் சம்பவத்தின் மூலம் கிரேன் பேடி (Crane Bedi) என அழைக்கப் பட்டவர். இரு தொண்டு அமைப்புகளை நிர்வகித்து வரும் கிரண் பேடி, ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் வேண்டும் என்று போராடி வரும் அன்னா ஹசாரே  குழுவிலும் முக்கிய உறுப்பினர்.

ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது டெல்லி ராம்லீலா மைதானத்தில் கம்பீரமாக இந்திய தேசியக் கொடியை அசைத்துத் தொண்டர்களை உற்சாகப் படுத்திய கிரண்பேடி, இன்று பலரது கண்டனங்களுக்கு உள்ளாகி இருக்கிறார். ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா வேண்டும் என்று போராடி வரும் அன்னா ஹசாரேவின் குழுவில் உள்ள கிரண்பேடியின் மீதே ஆதாரத்துடனான மோசடி குற்றச்சாட்டுக் கிளம்பியுள்ளது.

கல்வி அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் நடத்தும் நிகழ்ச்சிகளுக்குக் கிரண்பேடிக்ச் சிறப்பு விருந்தினராக அழைப்பதுண்டு. இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் இது போன்ற அழைப்புகளை ஏற்றுச் செல்லும் கிரண்பேடி, நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் இருந்து தான் செலுத்தியதை விட அதிகமாக விமானக் கட்டணம் பெற்றுள்ளார் என்பதே கிரண்பேடி மீது கூறப் படும் குற்றச்சாட்டு.
இரு வகையில் கிரண்பேடி விமானக் கட்டணத்தை அதிகமாகப் பெற்றுள்ளார். விமானத்தில் இரண்டாம் வகுப்பு கட்டணத்தில் பயணம் செய்து விட்டு முதல் வகுப்பு கட்டணத்தைக் கேட்டுப் பெற்றுள்ள கிரண்பேடி, வீர தீரச் செயல்களுக்காக 1979 ம் ஆண்டு குடியரசுத் தலைவரின் கேலன்டிரி விருது பெற்றுள்ளதால் ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்யும் போது வழங்கப் படும் 75 சதவீதச் சலுகையை மறைத்து பிசினஸ் க்ளாசிற்கான முழு கட்டணத்தையும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து பெற்றுள்ளார். 
கிரண்பேடி 30 க்கும் மேற்பட்ட முறை  பயணம் செய்து நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் இருந்து அதிக பணம் பெற்ற விவரத்தைஆதாரத்துடன் எடுத்து வைத்த பின்னர்,  ''சேமிப்பு என்பதை ஒரு குற்றமாகப் பார்க்கிறீர்களே… இது ஆச்சர்யமாக உள்ளது. நான் அந்த நிகழ்ச்சிக்குப் பணம் பெறவில்லை. ஆனால் உயர் வகுப்பு விமானக் கட்டணம் பெற்றேன். நான் சிக்கன வகுப்பில், சலுகையில் பயணம் செய்தேன். மீதிப் பணத்தை எனது விஷன் இந்தியா டிரஸ்டில்  சேமித்தேன். இன்னொரு நிகழ்ச்சிக்கு நான் என்ன பெற்றேன் என்பது தேவையற்றது. இது நிச்சயமாக சேமிப்பு. சேமிப்பை நீங்கள் குற்றம் என்பீர்களா?" என்று பதில் அளித்தார் கிரண்பேடி. 

கிரண்பேடி அதிகமாக பணம் பெற்றது குறித்து, ''கிரண்பேடி தாம் செலவளித்ததைவிட அதிகமாக பணம் பெற்றது நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்குத் தெரிந்து பெற்று இருந்தால் அது தவறு இல்லை. நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு உரிய முறையில் தெரிவிக்கப்பட வில்லையென்றால் அது தவறே'' என்று அன்னா ஹசாரே குழுவின் அங்கத்தினர்களில் ஒருவரான முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்துள்ளார்.

"சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்தப் பணத்தை நான்  எடுத்துக் கொள்ள வில்லை. என் டிரஸ்டில் தான் சேமித்தேன். லோக்பால் மசோதாவுக்காக போராடி வரும் அன்னா குழுவினர் மீது அவதூறுகளைப் பரப்புவது மகிழ்ச்சி அளிக்குமானால் எங்களைத் தூக்கில் போடுங்கள்" என்று ஆவேசப்பட்ட கிரண் பேடி, "அதிகமாகப் பெற்ற விமானக் கட்டணத்தை உரிய அமைப்புகளிடம் திருப்பித் தரப் போவதாக" அறிவித்துள்ளார். இதன் மூலம் கிரண்பேடி தன்னார்வ அமைப்புகளை ஏமாற்றி பணம் பெற்றுள்ளது உறுதியாகியுள்ளது. நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு உண்மையைத் தெரிவித்தே அதிக கட்டணம் வசூலித்து இருந்தால் அதை ஏன் அவர் திரும்பச் செலுத்த வேண்டும்?

"திருப்பிச் செலுத்தி விட்டால் நீங்கள் தவறு செய்யவில்லை என்றாகி விடுமா? உங்களுக்கும் ராசாவுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? ராசாவும் தாம் முறைகேடு செய்த பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டால் திகார் சிறையில் அடைபடாமல் வழக்கில் இருந்து விடுதலையாகி விடலாமே?" என்று திக்விஜய் சிங் கேட்பது நியாயமாகத் தானே தெரிகிறது. வீரத் தீரச் செயல்கள் புரிந்த கிரண் பேடியைப்  போன்றவர்களைக் கௌரவிக்க அரசு தரும் இது போன்ற நல்ல திட்டங்கள் மூலமும் காசு பார்ப்பது இவர்களின் மனசாட்சிக்கே விரோதமாகப் பட வில்லையா? 

இதற்கிடையில் அன்னா ஹஸாகுழுவிலுள்ள மற்றொரு முக்கிய நபரான அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் "ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வந்த 80 லட்சம் ரூபாயை, அன்னா ஹசாரே எந்தப் பொறுப்பிலும் இல்லாத தன்னுடைய தொண்டு அமைப்பின் வங்கிக் கணக்கில் சேர்த்துக் கொண்டார்" என்று மோசடி புகார் எழுந்துள்ளது. இவர், ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவில் தனியார் தொண்டு அமைப்புகளைச் சேர்ப்பதைக் கடுமையாக எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டங்களில் கலந்து கொண்ட சிலருக்காவது இப்போது புரிந்திருக்கும் - அன்னா ஹசாரே குழு ஏன் லோக்பால் மசோதாவில் இருந்து தொண்டு அமைப்புகளுக்கு விலக்கு அளித்தது என்று!. இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் லோக்பால் அமைப்பில் பொறுப்பு வகித்தால் ஊழலுக்கு புதிய இலக்கணம் எழுதப் பட்டாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.

0 கருத்துகள்: