தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.4.11

வாக்கு எண்ணும் மையத்தில் புதிய தடை: தேர்தல் ஆணையம்


வரும் 13-ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களுக்குள் தண்­ணீர், சாப்பாடு, செல்போன் ஆகியவைகளை எடுத்துச் செல்லக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த 13-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரேகட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. வரும் மே மாதம் 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.
தமிழகத்தில் மொத்தம் 91 மையங்களில்
வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஊழியர்களுக்கு வாக்குகள் எண்ணுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருகிறார்.
வரும் 13-ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அனைத்து தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வருமாறு,
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கும். 8 மணி முதல் 8.30 மணி வரை தபால் ஓட்டு எண்ணப்படும். வாக்கு எண்ணப்படும் 13-ம் தேதி காலை 6 மணி வரை தான் தபால் ஓட்டுகள் வாங்கப்பட வேண்டும். 8.30 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி துவங்கும்.
ஒரு தொகுதிக்கு ஒரு தேர்தல் அதிகாரி ஓட்டு எண்ணிக்கையை கண்காணிப்பார். ஒவ்வொரு தொகுதிக்கு 14 மேஜைகள் போடப்படும். ஒரு மேஜைக்கு ஒரு மேற்பார்வையாளர் இருப்பார். இவர் ஓட்டு எண்ணுவதை பார்வையிட்டு சரி பார்ப்பார். 14 மேஜைகளுக்கு தனித்தனியே வெப் கேமிரா பொருத்தப்படும். ஓட்டு எண்ணும்போது மேஜை அருகே அமைக்கப்பட்டுள்ள எல்.சி.டி. டி.வி.யில் அது காட்டப்படும்.
14 மேஜைகளில் எண்ணப்படும் ஓட்டுகளை கண்காணிக்க மத்திய அரசு ஊழியர் ஒருவர் பார்வையாளராக இருப்பார். ஒவ்வொரு சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், அந்த தொகுதியின் தேர்தல் அதிகாரி சரி பார்ப்பார்.
அதன் பிறகு அந்த ஓட்டு விவரம் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். ஓட்டு எண்ணும் மையத்தில் உள்ள கரும்பலகையிலும் எழுதப்படும். அதன் பிறகுதான் அடுத்த சுற்று எண்ணப்படும். ஓட்டு எண்ணும் மையத்திற்கு செல்லும் அனைவரும் பரிசோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டு எண்ணிக்கையை காட்டும் போது அதை டி.வி.யில் ஒளிபரப்புவதற்காக டி.வி. கேமிராவில் படமாக்கக் கூடாது. ஓட்டு எண்ணும் இடத்துக்கு செல்போன் கொண்டு போகக் கூடாது. சாப்பாடு, தண்­ணீர் எடுத்துச் செல்லக் கூடாது.
தேர்தல் முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்பு அங்குள்ள தேர்தல் பார்வையாளர் எழுத்துப்பூர்வமான ஒப்புதல் கொடுத்த பிறகே, தேர்தல் அதிகாரி ஓட்டு எண்ணிக்கை விவரத்தையும், தேர்தல் முடிவையும் அறிவிக்க முடியும்.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டது போன்று வெற்றி பெற்றவர் சான்றிதழ் பெற வரும்போதும் அவருடன் 4 பேர் மட்டுமே ஓட்டு எண்ணும் இடத்துக்கு செல்ல வேண்டும்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் வாக்கு எண்ணும் மையங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார். நேற்று கோவையில் 7 மாவட்ட ஊழியர்களுக்கு வாக்கும் எண்ணும் பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் பிரவீண் குமார் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்.
பின்னர் திருச்சி வரும் வழியில் நள்ளிரவு 11 மணிக்கு கரூர் தளவாபாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்குச் சென்று திடீர் சோதனை நடத்தினார். அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரின் வருகைப் பதிவேடுகளை ஆய்வு செய்தார். அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்கள் ஒழுங்காக வேலை செய்கிறதா என்று சோதித்தார். இன்று காலை திருச்சியில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். முன்னதாக கரூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாக உள்ளது. தமிழகம் முழுவதும் தேர்தல் தொடர்பாக 60 ஆயிரத்திற்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஆயிரத்து 500 வழக்குகள் பணம் பட்டுவாடா சம்பந்தப்பட்டது ஆகும். மே 13-ம் தேதி நடக்கும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அனைத்தும் பிற்பகலில் தான் தெரியவரும் என்றார். இவ்வாறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: