தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.4.11

கனடாவில் தொடங்கியது கையெழுத்துப் போராட்டம்


ஐ.நா. செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர் குழுவின் அறிக்கையை கவனத்தில் கொண்டு இலங்கை மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க ஒரு ஆணைக் குழுவை அமைப்பதற்கு ஐ.நா.செயலாளர் பான் கீ மூனுக்கு அதிகாரம் உள்ளது என நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி. ருத்ரகுமாரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இலங்கையின் போர்க்குற்றங்களை
விசாரிக்க ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமும் ஒரு குழுவை அமைக்க முடியும். அதற்கான வேலைத் திட்டங்களில் தமது அமைப்பு ஈடுபட்டுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த விஷயம் குறித்து வழக்கு தாக்கல் செய்வதற்குத்தான் பாதுகாப்பு சபையின் அனுமதி தேவை. ஆனால் அங்கு அது குறித்து புலனாய்வு செய்தவற்கு வழக்கறிஞர்களுக்கு பரிந்துரைப்பதை ஐ.நா. செயலாளர்தான் செய்ய முடியும். அதற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு கையெழுத்துப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது,” என்றும் ருத்ரகுமாரன் கூறியுள்ளார்.
கனடாவில் தொடங்கியது கையெழுத்துப் போராட்டம்:
போர்க் குற்றம், இன அழிப்பு என மனித குலத்திற்கு எதிரான குற்றம் புரிந்து வரும் இலங்கையை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த சர்வதேச சமூகத்தின் ஆதரவை திரட்டும் கையெழுத்துப் போராட்டம் 27.04.2011 மாலை கனடாவின் மான்ட்ரீல் நகரில் தொடங்கியது.
நகரின் முக்கிய பேருந்து நிலையங்களில் ஆரம்பமான இப்போராட்டம் தொடர்ந்து தினமும் நகரின் மக்கள் அதிகமாக சென்றுவரும் இடங்களிலும், வர்த்தக பகுதிகளிலும், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களை நோக்கியும் விரிவடையத் தொடங்கிவிட்டது.
போராட்டத்தின்போது இலங்கை அரசு அறுபது வருடமாக திட்டமிட்டு மேற்கொண்டுவரும் தமிழ் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தி தமிழர்கள் சுதந்திரமாக வாழ பல்வேறு இன மக்களும், சர்வதேச மனிதநேய அமைப்புகளும் தங்கள் ஆதரவை வழங்கவேண்டும் என பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
கையெழுத்து போராட்ட ஆரம்ப நிகழ்வில் பெரும்பாலான இளைஞர்கள் கலந்துகொண்டு தமது பங்களிப்பை வழங்கினர். தொடர்ந்து நடைபெற இருக்கும் போராட்டங்களில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் +514 400 5331 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு தொடர் போராட்டம் நடைபெற இருக்கும் இடங்கள் பற்றிய விபரங்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினர் கைது:
இந் நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக்கோரி, சென்னையில் உள்ள அந்நாட்டு தூதரகத்தை பாஜக இளைஞர் அணியினர் முற்றுகையிட்டனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இலங்கை தூதரகம் அருகே குவிந்த பாஜக இளைஞர் அணியினர், ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். ராஜபக்சேவின் உருவப் படத்தை கிழித்து எரிந்தனர்.
இதையடுத்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினரை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.

0 கருத்துகள்: