கெய்ரோ, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க், எகிப்து வரவேண்டும் என, "ஜனவரி 25 புரட்சி' அமைப்பின் சார்பில், அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எகிப்து நாட்டில், கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வந்த, அடக்குமுறை ஆட்சிக்கு, சமீபத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதற்கு, மக்களின் எதிர்ப்பு ஒரு காரணமாக இருந்தாலும், அனைத்து போராட்டக் குழுக்களையும் ஒருங்கிணைப்பதில், "பேஸ்புக்' இணையதளம் முக்கிய பங்கு வகித்தது.
தற்போதைய நிலையில், அங்கு ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், போராட்டக் குழுக்கள் அனைத்திற்கும் தலைமையேற்று செயல்பட்ட "ஜனவரி 25 புரட்சி' அமைப்பினர் சார்பாக, எகிப்துக்கு வருகை தரவேண்டும் என, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் அழைக்கப்பட்டுள்ளார். எகிப்து கலாசாரத் துறை அமைச்சர் இமாத் அபு காரி வழியாக, இந்த அழைப்பு அவருக்கு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், ஒரு நிகழ்ச்சியில் பேசிய மார்க் ஜூகர்பெர்க், "சமூக வலைதளமாக நான் உருவாக்கிய பேஸ்புக், அடக்குமுறையை எதிர்த்த மக்களுக்கு உறுதுணையாக நின்று, அவர்கள் சுதந்திரம் பெற உதவியது என நினைக்கும் போது, மிகவும் பெருமையடைகிறேன்," என்று பேசியிருந்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக